மின்சாரத்தை எப்படிக் கண்களால் பார்க்க முடியாதோ அதைப்போல மனசையும் பார்க்க முடியாது. உண்மையில் மனசு என்ற ஒன்றே இல்லை என்பதும் தெளிவு. ஆனால், மனிதனின் எல்லாச் செயல்களுக்குமே மனசுதானே ஆணிவேராக இருக்கிறது.
"ஆயிரம் வாசல் இதயம் - அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம், யாரோ வருவார், யாரோ போவார் - வருவதும், போவதும் தெரியாது'. கவியரசு கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் வரிகளைப்போலவே மனிதனின் மனதில் எத்தனையோ எண்ணங்கள் உள்ளே நுழைந்து வெளியே போகின்றன. சிலர் நல்லதையும், சிலர் தீயதையும் எடுத்துக் கொள்கிறார்கள். எதை மனது எடுத்துக் கொள்கிறதோ, அதுபோலவே அவரது வாழ்வும் அமைகிறது.
எந்த நேரமும் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் தந்தைக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவரில் மூத்தவரிடம் குடிப்பழக்கம் இருந்தது. இளையவரிடம் எந்தத் தீய பழக்கமும் இல்லாத நல்லவராக இருந்தார். மூத்த மகனைப் பார்த்து, "ஏன் எப்போதும் நீ குடித்துக் கொண்டே இருக்கிறாய்' என்றபோது, அவரோ "என் தந்தையைப் பார்த்துப் பார்த்து எனக்கும் அந்தப் பழக்கம் வந்துவிட்டது' என்றார். இளையவரிடம் நீ ஏன் குடிப்பழக்கம் இல்லாதவராக இருக்கிறாய்? என்றபோது, அவரோ "என் தந்தையைப் பார்த்துப் பார்த்து நானும் அவரைப்போல் ஆகிவிடக் கூடாது' என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் என்றார்.
வாழும் சூழ்நிலையும் ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், இருவரின் மனசு மட்டும் வேறுபட்டிருக்கிறது. ஒருவர் தீயவராகவோ அல்லது நல்லவராகவோ இருக்க அவரவர் மனசுதான் காரணமாக இருக்கிறது. மனதைப் பக்குவப்படுத்தப் பழகிக்கொண்டால் எந்த தீய எண்ணங்களும் மனதுக்குள் நுழைந்து விடாதபடி, மனசே மனசைப் பாதுகாத்துக் கொள்ளும் என்பதுதான் சத்தியமான உண்மை.
இதையே "அருணோதயம்' திரைப்படத்தில் இடம்பெற்ற, "உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி, மனிதன் எதையோ பேசட்டுமே, உன் மனசை பாத்துக்க நல்லபடி' என்ற பாடல் விளக்குகிறது.
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ஒரு மாணவரை நிருபர் ஒருவர் பேட்டி எடுத்தபோது, "அதிக மதிப்பெண் பெறக் காரணம் எனது ஆசிரியர்தான்' என்கிறார். அதே ஆசிரியர்தான் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவருக்கும் ஆசிரியராக இருந்தவர்.
ஒருவரால் அதிக மதிப்பெண் பெற முடிந்தபோது மற்றொரு மாணவரால் முடியவில்லையே. இது ஏன்? முதலாவது மாணவரிடம் எப்படியாவது முதலிடம் பெற்றுவிட வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி நின்று ஆதிக்கம் செலுத்தியது. நிருபர்கள் தன்னைப் பேட்டி காணவேண்டும் என்கிற எண்ணம் லட்சியமாக மாறி, அதுவே உடலில் ரத்தத்தோடு, ரத்தமாக கலந்து ஓடியிருந்தது. இதனால் அந்த மாணவரின் புகைப்படமும்,பேட்டியும் நாளிதழ்களில் அவரது எண்ணத்தைப்போலவே பிரசுரமாகி இருந்தன. எனவே, எவரும் எண்ணங்களை வலிமையானதாகவும், நல்லதாகவும் ஆக்கிக் கொண்டால் அதுவே நம்மைத் தானாகவே உயர்த்தும் சக்தி உடையதாக மாற்றிவிடும்.
எதிரி நாட்டின் கைதிகள் இருவரைப் புதுமையான முறையில் சாகடிக்க முடிவு செய்தான் ஒரு நாட்டின் மன்னன். இருவரது உடலையும் நன்றாகக் கட்டி, சமமாகப் படுக்க வைத்து, இருவரது உடம்பில் உள்ள ரத்தத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்றி சாகடிக்க வைப்பதுதான் அந்த மனிதநேயமற்ற மன்னனின் திட்டம்.
அவரது திட்டப்படி இருவரது கண்களையும் ஒரு கறுப்புத் துணியால் மூடி, அவர்களது உடலில் இருந்து ரத்தத்தையும் வெளியேற்றிட முடிவு செய்தான்.
இருவரில் ஒருவரிடமிருந்து மட்டும் ரத்தம் வெளியேறுவதை நிறுத்திவிட்டு, ஒரு பாட்டிலில் ரத்தமானது துளித் துளியாக விழுமாறும், அதாவது அந்த ரத்தம் சொட்டு, சொட்டாக விழுவதுபோன்ற சத்தம் மட்டும் அவன் காதில் விழுமாறு செய்தான். பாட்டிலில் ரத்தம் விழுவது போன்ற அந்த "டப், டப்' சத்தத்திலேயே தனது உடலில் இருந்து ரத்தம் குறைந்து கொண்டே போகிறது.
உடலில் ரத்தமே இல்லாமல் இன்னும் கொஞ்ச நேரத்தில் எலும்பும், தோலுமாக மட்டும் மாறி செத்துப்போய் விடுவோம் என்ற பயத்திலேயே நடுங்கிச் செத்துப்போனான். மற்றொருவனோ உண்மையில் ரத்தம் முழுவதுமாக வெளியேற்றப்பட்டதால் உயிரிழந்தான்.
முதலாவது கைதியின் உடலில் ரத்தம் சிறிதும் வெளியேற்றப்படவில்லை என்றாலும், மரணம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது என்ற எண்ணமே அவனது சாவுக்குக் காரணமாகி விட்டது. எனவே, ஒரு மனிதனிடம் எண்ணங்கள் எப்படி அமைகிறதோ அப்படித்தான் அவரது வாழ்வும் அமைகிறது.
"நீ என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்' என்கிறார் சுவாமி விவேகானந்தர். "உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்' என்கிறார் கவிஞர் கண்ணதாசன். எனவே, எண்ணங்கள் விதைகளாக இருந்தால், செயல்கள் அழகிய மலர்களாக மலர்ந்து மணம் பரப்புகின்றன.
கல்யாணமான ஏழாவது நாளே விவாகரத்து பெற்ற தம்பதியரும் இருக்கிறார்கள். கல்யாணமாகி வயது எழுபதை எட்டிய பிறகும் விவாகரத்து பெற்ற தம்பதியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டுக்குமே மனசுதான் ஆதிவேர், ஆணிவேர். சுருங்கச் சொன்னால் எல்லாமே மனசுதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

