/

உண்மையின் குரலை ஒடுக்க நினைத்தால்...

ஆலமரமாக இருந்தாலும் அதன் அடிவேர்கள் அரிக்கப்பட்டு விட்டால் என்னாகும்? அந்த மரத்தை அதன் விழுதுகள்தான் காப்பாற்ற வேண்டும்; விழுதுகளும் பழுதானால் ஆலமரத்தின் நிலை என்ன? இந்தியா உலகத்திலேயே பெரிய ஜனநாயக நா

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:47 pm

உதயை மு. வீரையன்

ஆலமரமாக இருந்தாலும் அதன் அடிவேர்கள் அரிக்கப்பட்டு விட்டால் என்னாகும்? அந்த மரத்தை அதன் விழுதுகள்தான் காப்பாற்ற வேண்டும்; விழுதுகளும் பழுதானால் ஆலமரத்தின் நிலை என்ன?

இந்தியா உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை இருக்கிறது. அந்தப் பெருமையைச் சீர்குலைப்பது எங்கும் நிறைந்திருக்கும் லஞ்சமும், ஊழலும், எதேச்சாதிகாரப் போக்குமே. அலைக்கற்றை ஊழலைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு நிலக்கரிச் சுரங்க ஊழல் தலையெடுத்திருக்கிறது. இது ரூ.10 லட்சம் கோடி என்றால் பெரிய மலைப்பே ஏற்படுகிறது அல்லவா!

"இந்த ஊழலை ஒழிக்க யாராவது வர மாட்டார்களா?' என்று நாட்டின் மீது அக்கறை கொண்ட நல்லவர் உள்ளங்கள் எல்லாம் ஏங்கின. அண்ணா ஹசாரே அடுத்த காந்தியாய் அவதாரம் எடுத்தார்; நாடே எழுந்து நின்றது; கைதட்டி வரவேற்றது. அரசுகளுக்கே அச்சம் ஏற்பட்டது.

என்றாலும் அவர் திட்டத்தை மத்திய அரசு பெயரளவுக்கு ஏற்றுக் கொண்டதே தவிர, முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை; லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த ஆதரவு ஏற்படவில்லை என்று கூறிவிட்டது.

கடந்த மார்ச் 25 அன்று தில்லியில் மறுபடியும் ஒருநாள் உண்ணாவிரதம் தொடங்கினார் அண்ணா ஹசாரே. அவரது குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்ணியமற்ற முறையில் விமர்சனம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு எதிராகப் பேசுவதன் மூலம் ஹசாரே குழுவினர் சர்வாதிகாரத்தை மறைமுகமாக வரவேற்கிறார்கள் என்றும், எம்.பி.க்களை ஊழல்வாதிகள் என்று கண்ணியமற்ற முறையில் விமர்சித்ததற்காக அண்ணா குழுவினருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.

"எம்.பி.க்கள் மீதான தாக்குதல் தனி ஒருவரின் மீதான தாக்குதல் அல்ல, நாடாளுமன்றத்தின் கெüரவத்தின் மீதான தாக்குதல்' என்று மார்க்சிஸ்ட் எம்.பி. வாசுதேவ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஹசாரே குழுவினரைக் கண்டித்து உறுப்பினர் சிலர் பேசியதற்கு அனைத்து உறுப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்களைப் பற்றிய குறைபாடுகளைக் கூறினால் யாருக்கும் கோபம் வருவது இயல்புதான்; அதிலும் வானளாவிய அதிகாரம் படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறை கூறினால் கேட்க வேண்டுமா? எனினும், "அந்தக் குறைபாடுகளில் உண்மை இருக்கிறதா?' என்று எண்ணிப் பார்க்க வேண்டிய பொறுப்பும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கிறது.

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைப் பாதுகாக்க வலுவான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தில்லியில் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

மத்திய அமைச்சர்கள் 14 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன; அவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்; இவர் "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ. ராசாவுடன் சேர்ந்து அலைக்கற்றைக்குக் குறைவான தொகையை நிர்ணயித்தார்; அவர்களைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அஜீத் சிங், ஃபரூக் அப்துல்லா, ஜி.கே. வாசன், கபில்சிபல், சரத் பவார், மு.க. அழகிரி, எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்று அண்ணா ஹசாரே குழுவினர் கூறுகின்றனர்.

இவர்கள் மேல் யார் நடவடிக்கை எடுப்பது? வலுவான லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் 14 மத்திய அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் கபில்சிபல் போன்றவர்கள் இந்தச் சட்டத்தை நிறைவேற்றத் தடையாக இருக்கிறார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத்தை மிகுந்த பெருமைக்குரிய மாமன்றமாக மக்கள் மதிக்கின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் 162 எம்.பி.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்றும், இதே நிலைதான் மாநில அரசுகளிலும் நீடிக்கிறது என்றும் இவர்கள் கூறும்போது இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குறியாகத் தெரிகிறது.

இந்த நிலைக்கு நம்மைவிட நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகம் கவலைப்பட வேண்டும். இந்தியாவை ஆட்சி செய்யும் அதிகார மன்றத்தின் கண்ணியத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கே இருக்கிறது. ஆத்திரப்படாமல் அமைதியாகச் சிந்தித்துப் பார்ப்பது அவர்களுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது. அதிகாரம் இருக்கிறது என்பதற்காகக் குறை கூறுபவர்களையே தண்டிக்க நினைப்பது என்ன நியாயம்?

""இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் வெளிநாட்டுச் சக்திகள் சில தன்னார்வக் குழுக்கள் மூலமாக இந்திய ஆட்சியைத் தகர்க்கப் பார்க்கின்றன'' என்று ஒரு காங்கிரஸ் உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார். இப்படிக் குற்றம் சாட்டுவது ஒன்றும் புதிதல்ல. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்துக்கு வெளிநாட்டு அமைப்புகள் நிதி உதவியளிப்பதாக பிரதமரே கூறினார்.

அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதும், அரசாங்கத்தின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால், சுட்டிக் காட்டுபவருக்கு எதிராகவே நடவடிக்கை எடுப்பதும் ஆளுவோருக்கு இருக்கும் அரிய வாய்ப்பாகும். அறிவுள்ளவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிப் போவதற்குக் காரணமும் அதுதான்.

அணுமின் உலைக்கு எதிரான போராட்டம் உலகெங்கும் நடைபெறுகிறது. பன்னாட்டுச் சிந்தனையாளர்கள் அணுமின் உலைக்கு எதிரான நிலையையே எடுத்துள்ளனர். கூடங்குளத்தில் அப்பகுதி மக்களின் ஆதரவோடு 8 மாதங்களாகப் போராட்டம் நடக்கிறது; இதனை மத்திய, மாநில அரசுகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதற்கிடையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீதான நடவடிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. ""வெளிநாடுகளிலிருந்து பெற்ற நிதியைத் தவறாகப் பயன்படுத்திய புகாரின் பேரில் 24 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 7 வழக்குகளை மாநில காவல் துறை விசாரித்து வருகிறது. 30 தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து நிதி பெற 70 நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்று மத்திய உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

"ஆட்சியாளர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்த சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தலாம்' என்பது அரச நீதியாகும்; ஆனால் மக்களின் கருத்துகளுக்குச் செவி சாய்ப்பதும், செயல்படுவதும் மக்களாட்சியில் மறுக்க முடியாத கடமையாகும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

""மக்களும், ஆட்சியும் விலகி நிற்கும் எந்த நாடும் முன்னேறுவது இல்லை'' என்றார் விடுதலைப் போர் நடத்திய வீரர் நேதாஜி. மக்களாட்சி என்பதற்கு அடையாளமே மக்களும் ஆட்சியும் ஒன்று என்பதால், இங்கே இரண்டும் விலகி நிற்க வேண்டிய அவசியமே ஏற்படாது.

ஆனால், இன்று நாட்டில் மக்களும், ஆட்சியும் விலகி நிற்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது; மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடைவெளி அதிகமாகி விட்டது. நடுநிலையாளர்கள் தங்கள் கருத்துகளைக் கூறவும் அஞ்சுகின்ற நிலை; அறிவாளிகள் பதவிகளுக்காகக் கெஞ்சுகின்ற நிலை. இது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.

தேசத்தின் விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்களை நினைத்துப் பார்க்க யாருக்குமே நேரம் இல்லை. அவர்கள் சிந்திய குருதி, வடித்த கண்ணீர், பெருக்கிய வியர்வை, இழந்த வாழ்வு இவையெல்லாம் சிலர் வாழவும், பலர் வாடவும்தானா? எங்கிருந்து பார்த்தாலும் எப்போதும் கோபுரங்கள் எல்லோருக்கும் தெரியும்; ஆனால் அந்தக் கோபுரங்களைத் தாங்கும் அடித்தளங்கள் யாருடைய கண்களுக்கும் தெரிவதில்லை; தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.

அடக்குமுறைகளால் உண்மையின் குரலை ஒடுக்க முடியாது; அரசியலில் உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும் சிதைந்து, மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்போது, இந்தியாவில் இன்னொரு சுதந்திரப் போர் ஏற்படுவதை யாராலும் தடுக்கவும் முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.