எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அரசியல் களத்தின் பகடைக்காய்கள்

மக்களாட்சியின் மகத்துவமே மனிதாபிமான அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலமே நிர்வாகம் நடைபெறுகிறது என்பதுதான். இதன்மூலம் சமூகத்தில் வலியோர், எளியோர் என்ற வேறுபாடின்றி, அனைவரும் சரிநிகர் சமமாக நடத்தப்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:38 pm

ஜெயப்பாண்டி

மக்களாட்சியின் மகத்துவமே மனிதாபிமான அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலமே நிர்வாகம் நடைபெறுகிறது என்பதுதான். இதன்மூலம் சமூகத்தில் வலியோர், எளியோர் என்ற வேறுபாடின்றி, அனைவரும் சரிநிகர் சமமாக நடத்தப்பட வேண்டும்.

 மன்னராட்சியில் சில பேரின் சுகபோகங்களுக்காகப் பல கோடிப் பேரின் நலன்கள் பலியிடப்பட்டன என்பதால்தான், முடியாட்சி தூக்கியெறியப்பட்டு குடியாட்சி முறை கொண்டு வரப்பட்டது.

 ஆனால், சமீபகாலமாக மக்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சியினர் மற்றும் சில அமைப்பினருடைய நடவடிக்கைகளைக் காணும்போது, மனிதாபிமானத்தை மறந்துவிட்டு மக்களாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குரியதாக்க முயற்சிக்கிறார்களோ என்ற அச்சம் எழுகிறது.

 ஆளும் அரசைக் கண்டிப்பதாகக்கூறி, அவர்கள் எடுக்கும் முதல் ஆயுதமே மறியல் போராட்டம்தான். குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றப் பலரது அன்றாடப் பணியை முடங்கச்செய்யும் மறியல்களை நடத்துவது எந்த வகையில் நியாயம்?

 பெரும்பாலானோரை பாதிக்கச் செய்யும் இதுபோன்ற செயலை, தேர்தல்கால வாக்குகளைக் கணக்கில் கொண்டு கண்டிக்க மறுப்பதும், பெரும்பாலான கட்சித் தலைவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் காலத்தின் கோலம்தானே!

 போராட்டம் என்பது தனிமனித உரிமை எனக் கூறப்பட்டாலும், அது அடுத்தவர் உரிமையையும், நலனையும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும் என்பதையும், சம்பந்தப்பட்டோர் சிந்திக்க மறப்பது ஏனோ?

 போராட்டங்களின்போது, வன்முறை நிகழ்ந்தால் கலவரக்காரர்களின் முதல் இலக்காவது அரசு பஸ்களும், அதில் பயணிக்கும் அப்பாவிகளும்தான் என்பது கடந்தகாலம் அறிவுறுத்தும் உண்மை. ஆனால், அவற்றைத் தூண்டிவிடும் தலைவர்கள் போலீஸ் படைசூழ பாதுகாப்பாகச் சென்று விடுகின்றனர்.

 இதில் அரசு பஸ்கள்தான் அதிகமாகச் சேதப்படுத்தப்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் 600 அரசு பஸ்களுக்கும் மேலாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

 இதனால், போக்குவரத்து வசதியை இழந்த கிராமங்கள் ஏராளம்! அக் கிராமத்திலிருந்து தினமும் கால்கடுக்க நடந்துசென்று பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் துயரத்தை இதுபோன்ற வன்முறையாளர்கள் எங்கே புரிந்துகொள்ளப் போகிறார்கள்?

 ஏழை எளிய குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவோ, கட்டணமில்லாத மருத்துவ வசதிக்கோ, லஞ்சம் இல்லாமல் அவர்களுக்கான சான்றுகளைப் பெறுவதற்கோ போராட்டம் நடத்தப்பட்டால் சரி. ஆனால், அதுபோன்ற போராட்டத்தை இதுவரை எந்த ஜாதிச் சங்கமாவது, அமைப்பாவது பெரிய அளவில் நடத்தியிருக்கிறதா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 குறிப்பிட்ட இனத்து மக்களின் தலைவராகத் தங்களை, அடையாளம் காட்டிக் கொள்ளவே இதுபோன்ற வன்முறைகளைத் தூண்டி விடுகின்றனர். ஆனால், தேர்தலில் அவர்கள் இனமக்களே தங்களைப் புறக்கணிப்பது குறித்துச் சிந்திக்க மறப்பது ஏன்?

 ஆகவே, அறிவார்ந்த முறையிலான அறப்போராட்டமே வெல்லும். இதற்கு உலகில் மகாத்மா காந்தியைத் தவிர வேறு எந்தவொரு மனிதரையும் உதாரணம் காட்ட முடியாது. அந்த காந்திய வழிப் போராட்டத்தை மறந்து வன்முறை வழியில் நாமே செல்வது எந்த வகையில் நியாயம்?

 அரசால் நிர்வகிக்கப்படும் துறை நடவடிக்கைகளில் தவறுகள் தென்பட்டால், அதைத் தட்டிக்கேட்கும் வகையில்தானே நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டத்தின் படியேறி நியாயம் கிடைக்காமல் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினால் பரவாயில்லை. ஆனால், சட்டத்தில் வழியிருந்தும், அதை விடுத்து வீதிக்கு வந்து மற்றவர்களை மிரட்டி தங்களை அடையாளம் காட்ட நினைப்போரை என்ன செய்வது?

 இதில், பிரச்னை என வந்துவிட்டால், சட்டத்தை மதிக்காதவர்களைக் கண்டிப்பதை விட்டுவிட்டு, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் காவல்துறையின் தவறுகளை மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு விமர்சிக்கும் போக்கு, வாக்குக்காகப் பாதிக்கப்பட்டவர்களிடம் அனுதாபம் தேடும் நவீன உத்தியாகவே தோன்றுகிறது.

 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறிய தலைவர்கள் யாரும், அதே கலவரத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் காவலர்களைப் பார்த்ததாகத் தகவல் இல்லை.

 காவல்துறையினர் என்ன அயல் நாட்டவர்களா? அவர்களும் மனிதர்கள்தானே..!

 சமீபத்தில் பரமக்குடியில் வன்முறைக் கும்பலால் பெண் காவலர் ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டதாகச் செய்திகள் வந்தனவே!

 காக்கிச் சட்டை போட்டாலும், மானபங்கப்படுத்தப்பட்டது நமது சகோதரிதானே.. என்ற உணர்வுகூடவா நம்மிடம் அற்றுப்போனது?

 அதற்காக காவல்துறையினரின் செயலை நியாயப்படுத்தவும் முடியாது. அது சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 ஆம்...இப்போதோ...அப்பாவிகளாகிய ஏழைத் தமிழ் மக்கள்தான் ""சூதாட்ட அரசியல் களத்தின் பகடைக்காய்களாக'' நிற்கிறோம். இந்நிலை மாறவேண்டாமா? நம்மை நகர்த்தி சிலர் நடத்தும் ஆட்டத்தால் சமூகம் பணயமாக வைக்கப்படக் கூடாது.

 ""பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா.. மோதி மிதித்துவிடு பாப்பா....'' என்ற பாரதியின் கூற்றை நினைவில் நிறுத்தி, ஜாதி, சமயங்களைக் கடந்து தேச நலனை முன்னிறுத்தும் வகையில் செயல்படுவது அவசியம். அப்போதுதான் அறிவார்ந்த தமிழகம் அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.