உயிர்ப்புடன் விளங்கும் மகத்தான ஆயுதம்
பாரத நாட்டுக்கே உரித்தான உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் ஒருமுறை வென்றிருக்கிறது. கூடங்குளத்தில் அணு மின்நிலையத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் இருந்த தொடர் உண்ணாவிரதம், கேளாச் செவிகளுடன் இருந்த மத்திய,


பாரத நாட்டுக்கே உரித்தான உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் ஒருமுறை வென்றிருக்கிறது. கூடங்குளத்தில் அணு மின்நிலையத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் இருந்த தொடர் உண்ணாவிரதம், கேளாச் செவிகளுடன் இருந்த மத்திய, மாநில அரசுகளை கீழிறங்கிவரச் செய்திருக்கிறது. அறவழிப் போராட்டத்தின் சிறப்பு மீண்டும் உலக அரங்கில் பதிவாகி இருக்கிறது.
உண்ணாவிரதம் என்பது பாரதத்தில் தொன்றுதொட்ட வாழ்க்கைமுறையாகவே இருந்துள்ளது. குடும்ப நலனுக்காகவும் கணவர் நலனுக்காகவும் விரதம் இருப்பது இந்தியப் பெண்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு.
அஹிம்சையைப் போதிக்கும் பாரதத்தில் தோன்றிய மதங்களான பெüத்தமும் சமணமும் உண்ணாநோன்பை வலியுறுத்துவன. அந்தப் பாரம்பரியத்தில் வந்ததால்தான், மகாத்மா காந்தியால் ஆங்கிலேயருக்கு எதிரான வலிமையான ஆயுதமாக உண்ணாவிரதத்தை மாற்ற முடிந்தது.
தன்னல மறுப்பே உண்ணாவிரதத்தின் அடிப்படை. உயிர் வாழ இன்றியமையாத உணவையும்கூட மறுப்பதென்பது மன வலிமையின் அடையாளம். பிறர் நலனுக்காகவோ, ஒரு பொதுநோக்கத்துக்காகவோ உண்ணாவிரதம் இருக்கும்போது, அது மகத்தான வழிமுறை ஆகிறது.
இந்த வழிமுறையால்தான், நெல்லிக் காய் மூட்டையாகச் சிதறிக் கிடந்த விடுதலைப் போராளிகளை ஒரே இலக்குடன் ஒருங்கிணைத்தார் மகாத்மா காந்தி; நாடும் விடுதலை அடைந்தது.
இன்று உலக நாடுகள் பலவற்றில் அஹிம்சைப் போராட்டம் அரசியல் ஆயுதமாக மாறி வருகிறது. கொடுங்கோல் ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள்நலனுக்கு ஊறு விளைவிக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை ஆயுதமின்றியும் வன்முறையின்றியும் போராடச் செய்ய முடியும் என்பதற்கு தென்ஆப்பிரிக்கா, டுனீசியா, எகிப்து நாடுகள் சாட்சியமாகி இருக்கின்றன.
ஆயினும், அஹிம்சைப் போராட்டத்துக்கு உடனடி பலனை எதிர்பார்க்க முடிவதில்லை. செருக்கு மிகுந்த ஆட்சியாளர்களுக்கு இப்போராட்டங்கள் உடனடியாகப் புரிவதில்லை.
இதனால் உண்ணாவிரதப் போராட்டம் சில சமயங்களில் வீணாவதும் உண்டு. எனினும், அந்தப் போராட்டம் களத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் தொடர்ந்து ரீங்காரமிடும்.
சுதந்திர இந்தியாவில், மகாத்மாவின் வழிமுறையில் பலர் இதுவரை உண்ணாவிரதப் போராட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் தனி ஆந்திர மாநிலத்துக்காகக் குரல் கொடுத்த பொட்டி ஸ்ரீராமுலு.
தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி மாநிலம் அமைக்கக் கோரி 1952-ல் 58 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து தன்னை மாய்த்துக்கொண்ட ஸ்ரீராமுலுவால்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின.
அவரது அடியொற்றி 2009-ல் தனி தெலங்கானாவுக்காக 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், அரசால் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார். தெலங்கானா கோரிக்கை இன்னும் நிறைவேறாவிட்டாலும், கொள்கை அடிப்படையில் அது ஏற்கப்பட்டு விட்டது.
உண்ணாவிரதம் உயிர்த்தியாகத்துடன் முடிவடைவதற்கு, கடந்த ஜூனில் உயிர்நீத்த சுவாமி நிகமானந்தா மற்றோர் உதாரணம். கங்கை மாசுபடுவதற்கு எதிராக தனியொருவராகப் போராடிய நிகமானந்தா உத்தரகண்ட் மாநிலத்தில் 115 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து மடிந்தார். நதிநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அவரது தியாக மரணம் உருவாக்கி இருக்கிறது.
நமது அரசியல் தலைவர்களாலும் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2006-ல், மேற்கு வங்க மாநிலம், சிங்குரில் டாடா கார் தொழிற்சாலைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 26 நாள்கள் இருந்த உண்ணாவிரதம், தொழிற்சாலையை இடம் மாற்றியதுடன் 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பியது.
காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமை காக்க அதிமுக தலைவி ஜெயலலிதா 1991-ல் முதல்வராக இருந்தபோது 4 நாள்கள் இருந்த உண்ணாவிரதம் அப்போது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மணிப்பூரில் பாதுகாப்புப் படை சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 2000-த்திலிருந்து 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஐரோம் ஷர்மிளா, கறுப்புப் பணத்துக்கு எதிராக, சென்ற ஜூன் மாதம் 9 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு பாபா ராம்தேவ், ஜன லோக்பால் சட்டத்தை வலியுறுத்திச் சென்ற ஆகஸ்ட் மாதம் 13 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஆகியோரும் உண்ணாவிரதத்தின் பெருமையை உயர்த்தியவர்கள்.
நர்மதை அணைத் திட்டத்துக்கு எதிராக 2006-ல் 20 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த சமூகப் போராளி மேதா பட்கர் அப்போராட்டத்தில் வெல்லாதபோதும், மும்பை குடிசைவாசிகளுக்கு ஆதரவாக 2011-ல் 9 நாள்கள் இருந்த உண்ணாவிரதம் வெற்றி பெற்றது. இதிலிருந்து போராட்டத்தின் நோக்கமும் முழு நன்மை அளிப்பதாக இருக்க வேண்டியதன் தேவை தெரிகிறது.
இந்த உண்ணாவிரதக் களத்தில் அண்மையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் குதித்தார். சமூக நல்லிணக்கத்துக்கான அவரது மூன்று நாள் உண்ணாவிரதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சமூக சேவகர்களும் அரசியல்வாதிகளும் போராளிகளும் விரும்பும் ஆயுதமான உண்ணாவிரதம், இப்போது கூடங்குளத்தில் வெற்றிவாகை சூடியிருக்கிறது. பொதுநலனுக்காகத் தன்னை வருத்திக்கொண்டு பாடுபடும் எவரும் மானிட குலத்துக்கு நலன் விளைவிப்பவர்களே.
பாரதத்தின் மகத்தான ஆயுதம் மீண்டும் புத்துணர்வு பெற்றிருக்கிறது. இந்த வெற்றி, ஆயுதம் ஏந்திப் போராடும் குழுக்களின் மனங்களிலும் மாற்றம் நிகழ்த்தட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...