ஊழல் பரவலாக்கப்பட்டு விடும், ஜாக்கிரதை!
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளாட்சிக்கான அடிப்படையான திருத்தங்கள் வந்தபோது அதை இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் திருப்புமுனை என்று சமூக ஆர்வலர்கள் வர்ணித்தனர். உச்சத்திலுள்ள ஒரு சிலரின் கரங்க


இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளாட்சிக்கான அடிப்படையான திருத்தங்கள் வந்தபோது அதை இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் திருப்புமுனை என்று சமூக ஆர்வலர்கள் வர்ணித்தனர்.
உச்சத்திலுள்ள ஒரு சிலரின் கரங்களில் அதிகாரங்கள் குவிந்து கிடப்பதை மாற்றியமைத்து அதிகாரப் பரவல் முறையை அமல்படுத்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் உள்ளாட்சி முறை.
உள்ளாட்சி அமைப்புகள் படிப்படியாக வளர்ச்சி பெற்று அதன் முழு வீச்சை எட்டுகிறபோது அது மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இவ்வாறு சிந்தித்து அந்தந்த தேசத்தில் நிலவிவரும் அரசியல் சூழலுக்கேற்ப பல்வேறு வடிவங்களில் உள்ளாட்சி முறையைக் கொண்டுவந்துள்ளனர்.
உலகத்தின் மிகப்பெரும் ஜனநாயக நாடு என்று பெருமிதமாகச் சொல்லிக்கொள்ளும் நம் நாட்டில் வெறும் 4,700 பேர்தான் மக்களால் வாக்களித்துத் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக இருந்தனர். இவர்கள் கரங்களில்தான் நூறு கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட மாபெரும் நாட்டின் ஆட்சி அதிகாரம் குவிந்து கிடந்தது.
உள்ளாட்சி வந்த பிறகு நம்நாட்டில் தற்போது சுமார் முப்பது லட்சம் பேர் வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகத் திகழ்கின்றனர். யாரோ நடத்துகிறார்கள் யாருக்கோ நடத்துகிறார்கள் என்ற நிலையை மாற்றி மக்களே மக்களுக்காக நடத்திக்கொள்ளும் ஆட்சிமுறைதான் உள்ளாட்சி முறை.
ஜனநாயகத்தை வளப்படுத்துவதோடு அல்லாமல் வளர்ச்சிப் பணிகளில் மக்களின் உளமார்ந்த பங்களிப்பையும் உறுதி செய்கிறது இந்த ஆட்சிமுறை. சுமூக நீதிக் கோணத்தில் பார்த்தாலும் தலித், மகளிர், பழங்குடியினர் போன்ற எல்லாப் பிரிவுகளைச் சார்ந்த மக்களுக்கும் சட்டப்படி உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் நலன்சார்ந்த அனைத்துத் திட்டங்களும் மேலிருந்துதான் தீட்டப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்படுகின்றன. படிப்பறிவையும் கேள்வி ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டு தீட்டப்படுகிற திட்டங்களைக் காட்டிலும் பட்டறிவும் வாழ்க்கை அனுபவங்களையும் அடித்தளமாகக்கொண்டு மக்களோடு உயிரோட்டமான அன்றாடத் தொடர்பின் விளைவாகக் கிடைக்கும் உணர்வையும் கலந்து உருவாக்கப்படும் திட்டங்கள் நிச்சயமாக உயிரோட்டம் மிக்கவையாக விளங்கும்.
உள்ளாட்சி முறையில் அடிமட்டத்திலிருந்து திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அத்திட்டங்கள் மக்கள் மத்தியிலிருந்து முகிழ்த்து எழுகின்றன. மக்களிடமிருந்து சென்று சேருகிற வரிப்பணம் அரசு கஜானாவுக்குச் சென்று மீண்டும் இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்குத் திருப்பிவிடப்படுகின்றன.
இதன் அடுத்த பரிமாணம் குறித்து உள்ளாட்சி முறைகளை ஒரு வேள்விபோல் ஆய்வுசெய்துள்ள பேராசிரியர் க. பழனித்துரை அரசுத்திட்டத்தில் மக்கள் பங்களிப்பது என்பதிலிருந்து மக்கள் திட்டத்தில் அரசு பங்களிப்புச் செய்கிறது என்ற நிலைக்கு மாறவேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
இத்தகைய உயரிய நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கிற சூழலில் வாக்காளர்கள் மிகுந்த விழிப்புடன் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
ஜனநாயகவாதி முழுக்க முழுக்க சுயநலமற்றவராக இருக்கவேண்டும். தம் நலனையோ தனது கட்சியின் நலனையோ அவர் சிந்திக்காமல் ஜனநாயகத்தின் நலனைப் பற்றி மாத்திரமே சிந்திக்க வேண்டும்என்று காந்தியடிகள் கூறியுள்ளார்.
ஓரே ஒருவேளை சாப்பிடுவதற்குக் குழம்புவைக்க வெண்டைக்காய் வாங்கக் கடைக்குச் செல்லும் பெண்கள் அதன் நுனியை உடைத்துப்பார்த்து அது பிஞ்சுக்காய்தானா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் வாங்குகின்றனர்.
அதேபோல கத்திரிக்காய் வாங்கும் தாய்மார்கள் அதை நசுக்கிப்பார்த்து வாங்குகின்றனர். அப்படி இருக்கும்போது, ஐந்தாண்டு காலத்துக்கு ஒரு நபரிடம் தங்களது தொகுதியை முழுமையாக ஒப்படைக்கும் முன்னர் வாக்காளர்கள் எத்தனை முறைகளில் எத்தனை கோணங்களில் சிந்தித்துப்பார்த்து வாக்களிக்க வேண்டும்.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஓர் அறப்பணிக்காக ஒரு மனிதரைத் தேர்வு செய்கிறோம் என்று கிஞ்சிற்றும் கருதாமல் தாங்கள் யாரைத் தேர்வு செய்தாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எண்ணி மக்கள் உணர்வைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தங்கள் இஷ்டம்போல் வேட்பாளர்களைத் தேர்வு செய்கின்றன. ஆகவேதான் அதிகாரம் பரவலாக்கப்படுவதற்குப் பதிலாக, ஊழல் பரவலாகியிருக்கிறது.
"நான் பல ஆண்டுகளாக கட்சியில் உங்கள் விசுவாசமிக்க தொண்டனாக இருக்கிறேன். தொழில் சரியாக அமையவுமில்லை. வருகிற உள்ளாட்சித் தேர்தலில் ஏதாவது ஒரு பதவியைப் பெற்றுக்கொடுத்தால் நான் பிழைத்துக்கொள்வேன்' என்று பலர் முன்னிலையில் பகிரங்கமாக கட்சித் தலைவர்களிடம் கேட்பதும் கட்சித் தலைமையும் அவரை வேட்பாளராகத் தேர்வு செய்வதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
உள்ளாட்சியில் எதிரும் புதிருமாக வெட்டுக்குத்து அளவுக்குக்கூட வெறித்தனமாக எதிர் எதிரே நின்று போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிந்தபிறகு, பதவிப் பிரமாணங்களும் அரங்கேறிய பிறகு அவர்களுக்குள் ஓர் அந்தரங்கமான கூட்டணியை உருவாக்கிக் கொள்கின்றனர். இதில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று மாறுபாடு இல்லை. சின்னக்கட்சி, பெரியகட்சி என்ற வேறுபாடும் இல்லை.
சில விதிவிலக்குகளைத் தவிர, அனைத்துக் கட்சிகளுமே ஒன்றாகச் சேர்ந்து ஒரு மகாக் கூட்டணியை உருவாக்கிக் கொள்கின்றன என்பதுதான் எதார்த்த நிலைமை என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
தொகுதிக்குள் நிறைவேற்றப்படுகிற திட்டப்பணிகள் அனைத்திலும் ஒதுக்கப்படுகிற அரசு நிதியிலிருந்து ஒப்பந்தக்காரர்கள் ஒழுங்காகப் பதினைந்து சதவிகிதம், இருபது சதவிகிதம் என்று சத்தமில்லாமல் உள்ளாட்சி உறுப்பினர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். இது எழுதப்படாத சட்டமாக இருப்பது நமக்குத்தான் தெரியாதே தவிர, ஆட்சியாளர்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ தெரியாதா என்ன?
ஈரத்துணியைப் போர்த்தி ஓசைப்படாமல் கோழி அறுக்கப்படுவதுபோல ஜனநாயகம் இதன் மூலம் அமைதியாகப் படுகொலை செய்யப்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா?
புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆளும் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால்தான் மக்கள் நலத்திட்டங்கள் உங்களை வந்து சேரும்.
நாங்கள் தோல்வியடையும் இடங்களில் திட்டங்களின் பலன்கள் அப்பகுதி மக்களுக்குச் சென்றடையாது என்று பகிரங்கமாக தமிழகமெங்கும் பேசி வருகின்றனர். இது மக்களின் மனசாட்சிப்படி வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் முயற்சியாக அல்லவா இருக்கிறது!
எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் மக்கள்தான் இறுதியாக பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர். வருமுன் காப்போம் என்பதுபோல வருகிற உள்ளாட்சித் தேர்தலில் களத்தில் நிற்கும் ஒவ்வொரு வேட்பாளரையும் அத்தொகுதி மக்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். குடும்பம் குடும்பமாக வாக்காளர்கள் தங்களுக்குள் கலந்தாலோசனை செய்து ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து நின்று, நிதானித்து, யோசித்து வாக்களித்தால் உள்ளாட்சியின் நோக்கம் ஓரளவேனும் நிறைவேறும்.
÷கட்சி எதுவாக இருந்தாலும், நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் வல்லவராக இல்லாவிட்டாலும் நல்லவராக இருக்கிறாரா என்பதை ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்து வாக்களித்தால் மட்டுமே, இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்படும்.
உள்ளாட்சித் தேர்தல்களால் அதிகாரம் பரவலாக்கப்படும். இல்லையென்றால், ஊழல்தான் பரவலாக்கப்படும் என்பது நினைவிருக்கட்டும்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கிற கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை அனைத்து வாக்காளர்களுமே நினைக்கத் தொடங்கினால் நிச்சயம் உள்ளாட்சி நல்லாட்சியாக மலரும்.
(கட்டுரையாளர் - மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...