அணு வல்லமையைத் தடுக்கும் தீய சக்திகள்!
தமிழ்நாட்டில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம், சின்னத்திரையில் வரும் சீரியல்போல கடந்த சில வாரங்களாகத் தொடர்கிறது. ரூ.13,000 கோடியில் கட்டப்பட்டுள்ள அணு மின் நிலையத்தின் உண்மை நிலைய


தமிழ்நாட்டில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம், சின்னத்திரையில் வரும் சீரியல்போல கடந்த சில வாரங்களாகத் தொடர்கிறது. ரூ.13,000 கோடியில் கட்டப்பட்டுள்ள அணு மின் நிலையத்தின் உண்மை நிலையை உணராமல், சில ஊடகங்கள், செய்திகள் இல்லாமல், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தையே பிரதானப்படுத்தி ஒளிபரப்பி வந்தன. ஆனால், இப்போது அவை அதைக் குறைத்துக் கொண்டுவிட்டன.
திரையரங்கில் கதவு எப்போது திறக்கும்? டிக்கெட் எப்போது கொடுப்பார்கள்? படம் எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதுபோல், அணு மின்சாரத்தின் தேவையை உணர்ந்த பெரும்பாலானோர், கூடங்குளம் அணு மின் நிலையம் இன்று செயல்படத் தொடங்குமா? அல்லது நாளை செயல்படத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி தில்லியில் அண்ணா ஹஸôரேயும் அவரது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினரும் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை நிமிடத்துக்கு நிமிடம் படம்பிடித்துக் காட்டிய ஊடகங்கள், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பின. கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட்டால் தங்கள் வாழ்வுரிமை பாதிக்கப்படும், அணு மின் நிலையத்தால் பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்ற நோக்கில் கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதை ஊடகங்களும் பெரிதுபடுத்தின. ஆனால், கூடங்குளம் அணு மின் நிலையத்தைச் செயல்படவிடக்கூடாது என்ற கோணத்தில் இதற்குக் கதை எழுதி, இயக்கி, நடிப்பதற்கு சிலர் நீண்டகாலமாகவே தயாராக இருந்தனர் என்பதுதான் உண்மை.
கூடங்குளம் அணு மின் நிலையம் என்பது தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல என்பது ஊடகங்களுக்குத் தெரியாதா என்ன? மேகாலய மாநிலத்தில் மேற்கு காஸி மலைப்பகுதியில் அணு மின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனியத்தை வெட்டி எடுப்பதற்கு ஓர் அமைப்பு தடையாக இருந்து போராட்டம் நடத்தி வருகிறது. அந்த நாடகத்தை நடத்தி இயக்குபவர்களும், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும் ஏறக்குறைய ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.
கூடங்குளத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் இந்தியாவில் அணு மின் நிலையம் உருவாகக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள். மேகாலய மாநிலம், மேற்கு காஸி மலைப்பகுதியில் யுரேனியம் வெட்டி எடுக்கத் தடையாக இருப்பவர்கள், இந்தியா அணுசக்தி வல்லமை பெற்றுவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். இதை இயக்குபவர்கள் யார்? இதில் நடிப்பவர்கள் யார்? இவற்றின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
இந்தியாவுக்கு அணு மின்சாரமும் தேவை; அணு ஆயுதங்களும் தேவைதான். இவையெல்லாம் சேர்ந்ததுதான் அணுசக்தி தொழில்நுட்பம். உலகில் 22,000 அணுகுண்டுகள் இருக்கின்றன. இவற்றில் 8,000 அணுகுண்டுகள் பரஸ்பரம் எதிரி நாடுகளின் இலக்காக வைக்கப்பட்டுள்ளன. சீனாவிடம் 240 அணுகுண்டுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவை இலக்காகக் கொண்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானிடமும் 80 அணுகுண்டுகள் உள்ளன. அந்த நாடும் இந்தியாவைக் குறிவைத்துள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருப்பதைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக அதாவது, 100 அணுகுண்டுகள்தான் நம்மிடம் உள்ளன. அணுசக்தி தொழில்நுட்பத்தில் இந்தியா வல்லமை பெறவேண்டும் என்பது குறித்து எவரும் கவலைப்படவில்லை.
நமது எரிசக்தி பாதுகாப்பு என்பது பெரும்பாலும் இறக்குமதியையே நம்பியுள்ளது; அது அபாயமானதும்கூட. எண்ணெய், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை நாம் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தியை நாம் இறக்குமதி செய்கிறோம். நிலக்கரி மட்டும் 100 பில்லியன் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக மட்டும் 5 பில்லியன் டாலர் செலவாகிறது.
2020-ல் இதற்காகச் செலவிட வேண்டிய தொகை 45 பில்லியன் டாலராக அதிகரித்துவிடும். 2050-ல் இது 250 பில்லியன் டாலராக உயர்ந்துவிடும்.
இன்று நாம் 1,50,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். இதை நாம் 2030-ம் ஆண்டுக்குள் ஆறு மடங்காக அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதாவது 9,50,000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய வேண்டியிருக்கும்.
எரிபொருள் இறக்குமதி மூலம் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. இந்நிலையில் உள்நாட்டிலேயே மின்னுற்பத்தியை அதிகரிப்பதுதான் ஒரே வழி. இதைச் சொல்ல மகான்கள் தேவையில்லை. மின்னுற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தால் முதலில் நிற்பது அணு மின்சக்திதான்.
சரி... இப்போது அனல் மின்சாரம், அணு மின்சாரம் இவற்றுக்கிடையிலான சுற்றுச்சூழல் பாதிப்பு, மனித இழப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்போம். அனல் மின் நிலையத்தில் நிலக்கரி மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் போது காற்று மாசுபடுதல், மாறுபட்ட தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக ஆண்டுக்கு 400 பேர் உயிரிழப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்படியானால் அணு மின்சார உற்பத்தியில் அபாயம் இல்லையா என்று கேட்கலாம். அணு மின் நிலையங்களில் எப்போதாவது ஒருமுறைதான் இழப்பு ஏற்படும். கடந்த 60 ஆண்டுகளில் நான்கு விபத்துகள்தான் ஏற்பட்டுள்ளன. இவற்றின் நேரடி பாதிப்பு மூலம் 66 பேரும், இவற்றால் ஏற்பட்ட மறைமுகப் பாதிப்புகள் காரணமாக 4,000 பேரும் உயிரிழந்துள்ளனர். அனல் மின் நிலையத்தால் ஏற்படும் அபாயத்தைவிட அணு மின் நிலையத்தில் ஏற்படும் அபாயம் குறைவுதான்.
உலகில் விமான விபத்தில் ஓராண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 2007-ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்காக நிலக்கரி மூலமான அனல் மின் உற்பத்தியையோ, விமானப் போக்குவரத்தையோ அல்லது சாலையில் கார், பஸ் போன்ற வாகனங்களில் செல்வதையோ தடை செய்வது நகைப்புக்குரியதாகும்.
மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அணு மின்சக்திதான் மேன்மையானது, அபாயம் குறைவானது, தெளிவானது. எதற்காக சிலர் அணு மின்சக்தியை, தீய சக்திபோல் முத்திரை குத்துகிறார்கள்? இப்படியிருந்தால் நாம் எப்போது அணு மின்சக்தியைத் தயாரிப்பது, அணு ஆயுத வல்லமை பெறுவது?
அணுசக்தித் திட்டத்துக்கு யுரேனியம் மிகவும் அவசியம். நம் நாட்டில் யுரேனிய வளம் குறைவாகவே உள்ளது. மேகாலயத்தில் காஸி மலைப் பகுதியிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜடுகுடா என்ற இடத்திலும், ஆந்திர மாநிலத்தில் தும்மனபள்ளி என்ற இடத்திலும்தான் யுரேனியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சர்வதேச அளவில் யுரேனிய வர்த்தகம் என்பது அரசியல் சார்ந்துள்ளது. இதை அணுசக்தி விநியோகக் குழு (என்.எஸ்.ஜி.) தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பு அனுமதிபெற்ற ஒருசில நாடுகளுக்கு மட்டும் யுரேனியத்தை விற்கிறது. மேலும் இந்த நாடுகளில் உள்ள அணு உலைகளையும் இக்குழு மேற்பார்வை செய்யும். அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே இந்த அமைப்பின் மூலம் யுரேனியம் இறக்குமதி செய்யத்தான்.
நாட்டில் உள்ள 22 அணு உலைகளில் 14, சர்வதேச அமைப்பின் மேற்பார்வைக்கு உட்பட்டது. மீதமுள்ள 8 அணு உலைகளின் மூலம் மட்டுமே அணுசக்தியை நாம் தயாரிக்க முடியும். என்.எஸ்.ஜி. அமைப்பு மூலம் நமது அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தை நாம் இறக்குமதி செய்ய முடியும். ஆனாலும் இது குறுகியகால நடவடிக்கையாகத்தான் இருக்க முடியும். மேலும் இதற்கு செலவு அதிகம். நீண்டநாள் நாம் இதையே நம்பியிருக்க முடியாது.
அதிருஷ்டவசமாக நமது நாட்டில் யுரேனியத்துக்கு மாற்றான தோரீயத்தின் வளம் அதிகம் உள்ளது. நமது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி தோரீயத்தைப் பயன்படுத்தி அணு மின்சாரம் தயாரிக்க முடியும். அதுவரை உள்நாட்டில் கிடைக்கும் யுரேனியத்தை நாம் பயன்படுத்தியே ஆக வேண்டும்.
மேகாலயத்தில் காஸி மலைப்பகுதியில் யுரேனியம் வெட்டி எடுப்பதற்கு எதிராக நீண்டகாலமாக நடந்து வரும் போராட்டத்துக்கும், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்துக்கும் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள், இந்தியா அணு வல்லமை பெறுவதற்கு எதிரானவர்கள்.
கூடங்குளம் அணு மின் நிலையப் போராட்டத்துக்குப் பின்னணியில் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது வெளிப்படை. போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எஸ்.பி.உதயகுமாருக்கும், இடிந்தகரை கிராமத்தில் உள்ள பாதிரியார் ஜெயக்குமாருக்கும் தொடர்பு இருப்பதை நடுநிலையான செய்திகள் உறுதி செய்கின்றன. பாதிரியார் ஜெயக்குமார் போராட்டத்தை ஆதரிக்கிறார். இவருக்கு கூடங்குளம் தேவாலய பாதிரியார் தடியூஸ் ஆதரவுக்கரம் நீட்டுகிறார். கடற்கரை கிராமமான உவரியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் எஸ்.பீட்டர், இந்தப் போராட்டத்துக்குத் தனது ஆட்களை அனுப்புகிறார். இப்போராட்டத்துக்கு திருநெல்வேலி பிஷப்பும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கிறிஸ்தவ குருமார்கள் சிலர் கூறுகின்றனர். மொத்தத்தில் போராட்டக்காரர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கிறிஸ்தவ தேவாலயம் செய்து வருகிறது.
மேகாலயத்தில் யுரேனியம் வெட்டி எடுப்பதற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் இருப்பது அங்கு பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவ அமைப்புகளும், அதைச் சார்ந்தவர்களும்தான். 1990-ம் ஆண்டு முதல் இன்றுவரை ஒரு கிலோகிராம் யுரேனியம்கூட வெட்டி எடுக்கப்படவில்லை. இங்குள்ள அமைப்புகள், மாணவர்களை ஆர்ப்பாட்டத்துக்குத் தூண்டி, மறியல், பேரணி நடத்தி வருவதுடன் வன்முறை மூலம் அரசு நிர்வாகத்தை சீர்குலைத்து வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பழங்குடியினரும், கிறிஸ்தவ தேவாலயங்களின் பின்னணியில் செயல்படும் சேவை நிறுவனங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு, யுரேனியம் வெட்டி எடுக்கத் தடையாக இருக்கின்றன.
மேகாலயத்தில் யுரேனியம் வெட்டி எடுப்பதற்கும், கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படாமல் இருப்பதற்கும் தடையாக, பின்னணியாகச் செயல்படுவது ஒரே அமைப்பினர்தான். இவர்களுக்கு சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதும், அங்கிருந்து பணம் வருவதும் தெரிந்த கதைதான். இந்தியா அணுசக்தி வல்லமை பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. அதாவது, இந்தியா அணு வல்லமை பெற அவர்கள் மறைமுகமாக உதவுகிறார்கள் என்பதுதான் அது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...