/

சேவை மனப்பான்மையே தேவை

அண்மையில் கிடைத்துள்ள ஒரு செய்தி நம்மைக் கவலையடைய வைத்துள்ளது. இப்படியும் நடக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. நம்ப முடியவில்லைதான், என்றாலும் நம்பித்தான் ஆக வேண்டும். மனிதநேயமும், மனசாட்சியும் குறை

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:50 pm

உதயை மு. வீரையன்

அண்மையில் கிடைத்துள்ள ஒரு செய்தி நம்மைக் கவலையடைய வைத்துள்ளது. இப்படியும் நடக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. நம்ப முடியவில்லைதான், என்றாலும் நம்பித்தான் ஆக வேண்டும். மனிதநேயமும், மனசாட்சியும் குறைந்துவரும் இக்காலத்தில் இப்படியும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கும்.

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் நிகழ்ந்துள்ளது அநியாயம்தான். அப்பகுதி மக்களுக்கு அஞ்சல்கள் சரியாக விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற புகார்களுக்கு இப்போதுதான் விடையும் கிடைத்திருக்கிறது.

 பாஸ்போர்ட்டுகள், ஏடிஎம் அட்டைகள், காப்பீட்டுப் பத்திரங்கள், பத்திரங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கடிதங்கள், மருந்து பார்சல்கள், புத்தகங்கள், அரசு அலுவலகம் தொடர்பான ஆணைகள், நீதிமன்ற உறைகள் என 10,000-க்கும் அதிகமான கடிதங்கள் குப்பையில் கிடந்தது தெரியவந்துள்ளது.

 இதையறிந்த ஊர்மக்கள் குப்பையில் கிடந்த கடிதங்களை 3 சாக்கு மூட்டைகளில் சேகரித்துள்ளனர். அவற்றைப் பிரித்துப் பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்; ஆத்திரம் கொண்டனர்.

 இதையடுத்து அந்தக் கடிதங்களைக் குப்பையில் வீசிய அஞ்சல் ஊழியர்களைக் கண்டித்தும், அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

 வழக்கம்போலவே தகவல் அறிந்த அஞ்சல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் மற்றும் அஞ்சல் புகார் ஆய்வாளர்கள் வந்து கடிதங்களைப் பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளனர்.

 இவ்வாறு அஞ்சல்கள் விநியோகிக்கப்படாமல் அழிக்கப்படுவது இப்போதுதான் நடைபெற்றுள்ளது என்பதல்ல, அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்களும் கொஞ்சநாள் இதைப்பற்றிப் பேசிவிட்டு மறந்துவிடுகின்றனர். இதனால் ஏற்படும் இழப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

 இப்படிப்பட்ட செயல்கள் மன்னிக்க முடியாத சமுதாயக் குற்றமாகும். இது தனிமனித உரிமைகளைப் பறிக்கக் கூடியது மட்டுமல்ல, மனித நேயமற்ற செயல் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அத்துடன் பொதுமக்களுக்கு எதிரான நம்பிக்கைத் துரோகமாகும்.

 இதனால் எத்தனை பேருடைய வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும்? எத்தனை பேருடைய அவசரப் பயணங்கள் தடைபட்டிருக்கும்?  எத்தனை பேர் அவசர அவசியத் தகவல்கள் கிடைக்காமல் அவதிப்பட்டிருப்பர்? உறவினர்களின் சுக துக்கங்களில் பங்குபெற முடியாததால் மனக்கசப்புகளும், கவலைகளும், விரக்தியும், வேதனையும் ஏற்பட்டு தூக்கம் இல்லாமல் துன்பப்பட்டவர்கள் எத்தனை பேர்?

 நீதிமன்றங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தொடர்புகள் கிடைக்காததால் தேவையற்ற தண்டனைக்கு ஆளானவர்களுக்கு விடை என்ன?

 இதனால் ஏற்பட்ட இழப்புகளை இவர்களால் ஈடுசெய்ய இயலுமா? இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தால் இவர்கள் செய்திருப்பது கிரிமினல் குற்றத்துக்கு இணையானது என்பதை உணர முடியும்.  மனித வாழ்க்கை என்பது தனக்காக மட்டும் வாழ்வதல்ல. தனக்காக மட்டும் வாழ்வது மனித வாழ்க்கையும் அல்ல என்பதை நமது முன்னோர்கள் வாழ்ந்து காட்டிவிட்டுப் போயுள்ளனர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதே தமிழ்மக்களின் வாழ்வியல் கோட்பாடு. "என் கடன் பணி செய்து கிடப்பதே' என வாழ்ந்து காட்டிய மகான்கள் வாழ்ந்த தேசமல்லவா இது?

 இந்த உலகம் ஏன் நிலைபெற்றிருக்கிறது, தெரியுமா? தமக்காக மட்டும் வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவர்கள் நிறைந்திருப்பதால்தான் உலகம் நிலைபெற்றிருக்கிறது. அஞ்சல் சேவை என்பது மாபெரும் மக்கள் சேவை என்பதை இவர்கள் மறக்கலாமா?

 தகவல் தொழில்நுட்பம் இன்று வானளாவ வளர்ந்திருக்கிறது. இணையதளம் உலக நாடுகளை இணைத்துவிட்டது. ஈ மெயில் முதல் ஸ்பீடு போஸ்ட் வரை செய்திகளைக் கொண்டு சேர்க்கின்றன. இப்போது நினைத்த நேரத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

 ஆதிகாலத்தில் இப்படியா இருந்தது? அரசர் காலத்தில் பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட கடிதங்களை புறாக்களின் கால்களில் கட்டிவிடப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், தூதுவர்கள் மூலமாகவும் ஓலைகள் அனுப்பப்பட்டன.

 நளன் - தமயந்தி கதையில் அன்னப்பறவையே தூதாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புலவர்கள் தமிழையே தூதாக விட்டதற்கு இலக்கியங்கள் இருக்கின்றன. கடல், ஆறு, காற்று என இயற்கையைத் தூதாக விட்டதும் உண்டு.

 இந்த நிலையிலிருந்து இக்கால நிலையை அடைவதற்கு எவ்வளவு காலமும், மனித முயற்சியும் தேவைப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.

 ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நன்மைகளுள் அஞ்சல்துறை வளர்ச்சியும் ஒன்றாகும். அஞ்சல் துறையை உருவாக்கி, வளர்ச்சியடைய வைத்து நிலைநிறுத்தியதும் அவர்கள்தாம். அவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தின் தேவைக்காக - தகவல் தொடர்புக்காகவே அமைக்கப்பட்டது தபால் தந்தித் துறை என்றாலும் நாட்டு மக்களுக்குப் பெரிதும் பயன்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.

 அவர்களால் உருவாக்கப்பட்ட ரயில்வே துறையும், அஞ்சல் துறையுமே இமயம் முதல் குமரிவரை இந்திய மக்களை இணைத்தது. அரசியல், வணிகம், பண்பாடு, கலாசாரத் தொடர்புகளை உருவாக்கியது. இன்று ஊர், மாநிலம், தேசம் என்ற எல்லைகளைக் கடந்து உலகளாவிய தகவல் தொடர்பு தொழில்நுட்பமாகப் பரந்து, விரிந்து, கொடிகட்டிப் பறக்கிறது.

 அந்தக் காலத்தில் கடிதங்கள் எழுதுவது ஒரு கலையாகவே எண்ணி வளர்க்கப்பட்டது. மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் கடித இலக்கியங்கள் ஏராளம். நேரு சிறையிலிருந்து தன் மகள் இந்திரா பிரியதர்சினிக்கு எழுதிய கடிதங்களே "உலக வரலாறாக' உருவானது. தமிழ்நாட்டில் அண்ணாவின் "தம்பிக்கு' கடிதங்கள் அரசியலில் இலக்கியத்தைப் புகுத்தி புகழ் பெற்றன. டாக்டர் மு.வ. எழுதிய தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு என்னும் கடித இலக்கிய நூல்கள் பாராட்டுக்குரியன.

 தொலைபேசிகள் வந்த பிறகு கடிதங்கள் எழுதுவது பெருமளவு குறைந்துவிட்டது. தொலைக்காட்சிகள் வந்த பிறகு படிக்கும் பழக்கமும் இப்போது இல்லாமல் போய்விட்டது. அரசு மற்றும் தனியார் அலுவலகக் கடிதங்களும், பத்திரிகைகளுமே இப்போது அனுப்பப்படுகின்றன.

 அவைகளும் ஒழுங்காகப் போய்ச் சேருவதில்லை என்பதே பொதுமக்களின் புகார். புகார்கள் அனுப்பியும் பயன் இல்லை என்பதால் அவர்கள் தனியார்கள் நடத்தும் "கூரியர்' நிறுவனங்களை நாடத் தொடங்கிவிட்டனர் என்பதே இன்றைய நிலை.

 அஞ்சல்துறை ஊழியர்கள் இதற்கு என்ன பதில் கூறுகின்றனர்? மக்கள்தொகை பல மடங்காகப் பெருகிவிட்ட நிலையில், அதிகாரிகளை அதிகரித்துக்கொண்டு போகிறார்களே தவிர, தேவைக்குத் தக்க ஊழியர்களை நியமிப்பது இல்லை. தபால்காரர்கள் பலர் ஓய்வு பெற்றுப் போய்விட்ட பிறகும், அந்த இடங்களுக்குப் புதியவர்களை நிரந்தரமாக நியமிப்பது இல்லை. இதனால் பணிச்சுமை கூடிவிட்டது என்கின்றனர்.

 அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். அலுவலகங்களை மூடுதல், தபால் பட்டுவாடா குறைத்தல், வெளியாரைப் பயன்படுத்துதல் முதலியவற்றை எதிர்த்தும், பதவி உயர்வு வாய்ப்பைப் பறிக்கும் புதிய தபால்காரர் நியமனங்களை எதிர்த்தும், அனைத்துக் காலி இடங்களையும் நிரப்பக்கோரியும் 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 5 முதல் காலவரையற்ற  போராட்டம் நடத்த இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 அன்றும் சரி, இன்றும் சரி, இந்திய அஞ்சல் துறை நாட்டு மக்களுக்கு ஆற்றியுள்ள பணிகளைக் குறைத்து மதிப்பிட இயலாது. கடிதங்கள், பணவிடைகள் பட்டுவாடா மட்டுமன்றி வங்கிகள் இல்லாத கிராமங்களில் சேமிப்பு வங்கியாகவும் செயல்பட்டது.

 சிறுசேமிப்புத் திட்டங்களான கிசான் விகாஸ் பத்திரம், மாதாந்திர வருவாய்த் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம், பொது வருங்கால வைப்புத் திட்டம் இவைகளால் நாட்டுப்புறப் படிக்காத மக்களும் பயன்பட்டனர்.

 உலக மயம், தனியார் மயம், தாராள மயம் என்ற கொள்கையை இந்திய அரசு ஏற்றுச் செயல்படுத்தத் தொடங்கிய பிறகு, அரசுத்துறை நிறுவனங்கள் தரம் குறையத் தொடங்கின.

 இப்படித்தான் அஞ்சல் துறையும் மக்களுக்கான சேவைகளிலிருந்து விலகி தனியார் நிறுவனங்களுக்குச் சேவை செய்யத் திட்டமிடப்பட்டது. தனியார் தொலைபேசிக் கட்டணம் வசூலிப்பது, வேலைக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்வது, ரயில்வே பயணச்சீட்டுகளைப் பதிவு செய்வது, விழாக்கால வேலைகளைச் செய்வது என இதன் சேவை விரிவாக்கப்பட்டது. இதனால் முன்பே பணிச்சுமையால் அவதிப்படும் அஞ்சல் நிலையங்களின் பரிதாப நிலையைக் கூறவும் வேண்டுமா?

 சேவை என்பது பயன்பாராமல் செய்யும் பணி. ஊதியத்துக்காகப் பணிபுரிபவர்கள் செய்வது கடமை; உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள் கடமையைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக்கூறவும் வேண்டுமோ? நாடும், நாமும் வாழ, சேவை மனப்பான்மையே இன்றைய தேவையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.