/

இலக்காகும் பத்திரிகையாளர்கள்

மாநகரமான மும்பையில் கடந்த ஜூலை 13 அன்று 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக 21 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து நாடு முழுவதற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ப

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:18 pm

உதயை மு. வீரையன்

மாநகரமான மும்பையில் கடந்த ஜூலை 13 அன்று 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக 21 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து நாடு முழுவதற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

குண்டு வெடிப்பால் மும்பை மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியையும், இழப்பையும் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களது வலி, துக்கம், கோபம் ஆகியவற்றை அனைவரும் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றனர். இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.

வருங்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அனைத்து வகையிலான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக வருகை தந்த பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

2008 நவம்பர் 23-ல் பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக மும்பையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது அதற்குள் மறந்துவிடாது. அது ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை; அதற்குள் மறுபடியும் இந்தச் சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நமது அரசும், அரசின் உள்துறையும், காவல்துறையும் மிகவும் திறமை மிக்கவை. எல்லாம் முடிந்த பிறகு பயங்கரவாதிகளைப் பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கும். ஆலோசனை நடத்தும். ஆணைகள் பிறப்பிக்கும். குதிரைகள் எல்லாம் ஓடிப்போன பிறகு, லாயத்துக்குப் பூட்டுபோடுவதில் கைதேர்ந்த திறமைசாலிகள்.

இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யார்? வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்களா அல்லது உள்நாட்டு நிழல் உலக தாதாக்களின் செயலா? வலதுசாரி தீவிரவாத இயக்கம், நக்சல் இயக்கம் அல்லது இந்திய முஜாஹிதீன் ஆகியவற்றுக்குத் தொடர்புள்ளதா? இவற்றைத் தவிர, புதிதாக ஏதேனும் தீவிரவாத இயக்கம் உருவாகியுள்ளதா? இவ்வாறு கேள்விகள் பல எழுந்துள்ளன.

இந்தியாவின் அண்டை நாடுகளைப் பற்றிய ஐயப்பாடும் உண்டு. பயங்கரவாதத்தின் பிறப்பிடமாக மாற்றப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவின் பக்கத்து நாடுகளாக இருக்கின்றன. உலகிலேயே பயங்கரவாத நாடுகளை அண்டை நாடுகளாகக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களும் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகப் புலனாய்வு அமைப்புகளும், ஊடகங்களும் கூறுகின்றன.

இதே மும்பையில் கடந்த ஜூன் 11 அன்று பத்திரிகையாளர் ஜோதிர்மய தேவ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வை மறுபடியும் நினைவுபடுத்திப் பார்ப்பது நல்லது. பல ஆண்டுகளாக மும்பையின் அமைதியைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் நிழல் உலக தாதாக்களின் கிரிமினல் நடவடிக்கைகளைத் தீவிரமாகப் புலனாய்வு செய்து அம்பலப்படுத்திய இந்தப் பத்திரிகையாளர் "மிட்டே' ஆங்கில நாளிதழில் பணியாற்றியவர்.

எண்ணெய் மாஃபியா கும்பலால் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட இவரது கொலைவழக்குத் தொடர்பாக 7 பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

படுகொலை நிகழ்ந்து 15 நாள்களுக்குப் பிறகு இந்த வழக்குத் தொடர்பாக மும்பையில் சிலரும், தமிழ்நாட்டில் சிலரும் கைது செய்யப்பட்டதாக மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.

நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் ஆணைப்படி இவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவர் நியமித்த கூலிப்படையினரே இவர்கள் என்பதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். கொல்லப்பட்டவர் பத்திரிகையாளர் என்பது அதன்பிறகுதான் அவர்களுக்கே தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் மட்டுமல்ல, சத்தீஸ்கர் மாநிலத்தில் "தைனிக் பாஸ்கர்' நாளிதழின் செய்தியாளர் சுஷில் பதாக் கடந்த டிசம்பர் 20 அன்று அடையாளம் தெரியாத ஆள்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி 23-ல் "நைதுனியா' நாளேட்டின் செய்தியாளரான உமேஷ் ராஜ்புத், மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1992 முதல் இந்தியாவில் 28 புலனாய்வு செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தில் இருக்கிறது. ""உன் எழுத்தை நிறுத்தாவிட்டால் உன் மூச்சை நிறுத்துவோம்'' என்று எச்சரிக்கை செய்கின்றனர்.

இந்த நிலைமைக்குக் காரணம் காவல்துறைக்கும் நிழல் உலகத் தாதாக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருவது அனைவரும் அறிந்ததுதான். அரசியல்வாதிகளும், மாஃபியா கும்பல்களும் காவல்துறையோடு இணைந்து செயல்படுவதை நீதிமன்றங்கள் பலமுறை எச்சரிக்கை செய்துள்ளன. எனினும், அரசாங்கம் இதுபற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மும்பையில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். பத்திரிகைகளும் பிற ஊடகங்களும் வரப்போகும் தீமையை முன்கூட்டியே தெரிவிப்பதற்கான சாதனங்கள். அவற்றைத் தீர்த்துக் கட்டுவதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு மறைமுகமாகத் துணைபோகும் காவல்துறையை மாற்றியமைக்க வேண்டாமா?

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அரசியல் உலகில் பெருகிவரும் ஊழல்களைக் கண்காணித்து மக்களுக்கு வெளிப்படுத்தும் மாபெரும் பணியைப் பத்திரிகைகள் செய்து வருகின்றன. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அரசுகளும், அரசியல் கட்சிகளும் குண்டர் படைகளின் துணையோடு இத்தகைய வெறிச்செயல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

பாகிஸ்தானில் சலீம் ஷசாத் என்ற பத்திரிகையாளர் கடந்த மே 29 அன்று தலைநகர் இஸ்லாமாபாதில் காணாமல் போனார். அடுத்த சில நாள்களில் இஸ்லாமாபாதில் இருந்து 60 கி.மீ. தொலைவில் ஒரு கால்வாயில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

"ஆசியா டைம்ஸ்' என்ற ஆன்லைன் இணையதளத்துக்குச் செய்திகளைத் தரும் பணியில் ஷசாத் ஈடுபட்டிருந்தார். நியூயார்க்கில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட 37-வது பத்திரிகையாளர் இவர் என்று பத்திரிகையாளர் நலன் காக்கும் குழு கூறியுள்ளது.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ. செயல்பாடுகள் மீது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஷசாத்தின் மரணத்தில் ஐ.எஸ்.ஐ.க்கும் பங்கிருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தக் கொலை பற்றி விசாரிக்கப் புலனாய்வு அமைப்பில் எவரும் அக்கறை காட்டவில்லை என்று தோன்றுகிறது. இதுவே பல்வேறு ஐயப்பாடுகளை எழுப்பியுள்ளது.

இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா.வின் குழுவால் அறிவிக்கப்பட்ட இலங்கையரசு பத்திரிகையாளர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை ஏவி வருகிறது.

2008 மார்ச் 7 அன்று பத்திரிகையாளர் ஜே.எஸ். திசைநாயகம் மற்றும் ஜசிகரண் ஆகியோரை இலங்கையரசு கைது செய்தது; பத்திரிகையாளர் அல்லாத ஜசிகரணின் மனைவி வளர்மதியும் கைது செய்யப்பட்டார்.

""தீவிரவாதத் தடைச்சட்டத்தை இவர்கள் மூவர் மீதும் இலங்கையரசு பயன்படுத்தியிருப்பது வெட்கக்கேடான விஷயம்'' என்று மனித உரிமைக்கான ஆசியப் பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் குறிப்பிட்டுள்ளார். மென்மையான விமர்சனத்தைக்கூட தாங்கிக் கொள்ளும் சக்தி இலங்கை அரசுக்கு இல்லை என்பதையே கைது நடவடிக்கை காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், பத்திரிகையாளர் ஜே.எஸ். திசைநாயகத்துக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

""இலங்கையில் திசைநாயகம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலுக்கு வருந்தத்தக்க உதாரணம்...'' என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உலகப் பத்திரிகை சுதந்திர நாளான மே 3-ம் நாள் உரையாற்றும்போது கூறியது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசுக்கு எதிராக எழுதி வந்த லசிந்த விக்ரமதுங்க அவரது பத்திரிகை அலுவலகத்துக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த சில ஆண்டுகளில் 9 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேர் தாக்கப்பட்டுள்ளனர். இவையெல்லாம் வெளிவந்த செய்திகள் மட்டுமே. வெளியில் வராதவை ஏராளம்.

"இந்தியப் பத்திரிகை தினம்' ஆண்டுதோறும் ஜனவரி 29 அன்று கொண்டாடப்படுகிறது. "அனைவருக்குமானது; ஆனால், மற்றவர்களின் நிர்பந்தங்களுக்குப் பணியாது' என்ற கொள்கையுடன் இந்தியாவின் முதல் பத்திரிகை 1780 ஜனவரி 29 வெளிவந்தது. "பெங்கால் கெசட்' என்ற அந்த வார இதழின் ஆசிரியர் ஜேம்ஸ் அகஸ்தஸ் ஹிக்கியாவார்.

பத்திரிகை தர்மங்களுக்குக் கட்டுப்பட்டு, அனைத்துச் செய்திகளும் அதில் இடம்பெற்றன. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் தொடர்பான ஒரு செய்தி அந்தப் பத்திரிகையில் வெளியானது. உடனே, "நாட்டின் அமைதிக்குப் பங்கம் ஏற்படுகிறது' என்று கூறி அஞ்சல் விநியோகச் சலுகையை ஆணையிட்டு நிறுத்திவிட்டார். அடிமை ஆட்சியின் இந்த முன்மாதிரியைத்தான் சுதந்திரம் பெற்ற ஆட்சியாளர்களும் கடைப்பிடிக்கின்றனர்.

தேசத்தைத் தாங்கும் நான்கு தூண்களில் ஒன்றாகிய பத்திரிகைகளைப் பேணிப் பாதுகாக்கும்

நாடே நாகரிகமிக்க நாடாகும். அமைதியைக் கெடுக்கும் பயங்கரவாதத்தை அடக்குவதாகக் கூறிக்கொண்டு தலைவிரித்தாடும் அரசின் பயங்கரவாதத்தை நாகரிக சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. அதனால்தான் பயங்கரவாதிகளுக்குப் பலியாகும் பத்திரிகையாளர் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.