எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இம்சைக்குள்ளாகும் அகிம்சை...

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த நம் இந்திய நாட்டுக்குக் கத்தியின்றி, ரத்தமின்றி அகிம்சை வழியில் போராடிச் சுதந்திரம் பெற்றுத் தந்தார் மகாத்மா காந்தியடிகள். அகிம்சையின் தீவிரத்தை ஆங்கிலேயர்கள் உணர்ந்ததா

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:04 pm

எஸ். நாராயணன்

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த நம் இந்திய நாட்டுக்குக் கத்தியின்றி, ரத்தமின்றி அகிம்சை வழியில் போராடிச் சுதந்திரம் பெற்றுத் தந்தார் மகாத்மா காந்தியடிகள். அகிம்சையின் தீவிரத்தை ஆங்கிலேயர்கள் உணர்ந்ததால் கிடைத்தது இந்த வெற்றி.

 ஆனால், சுதந்திர இந்தியாவில் காந்தியின் வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் அகிம்சையின் தீவிரத்தை அறிந்துள்ளனரா என்பது சந்தேகத்துக்கு உரியதாகவே உள்ளது.

 கங்கை நதியின் தூய்மையைக் காப்பாற்ற வேண்டும், நதியில் கனிம வளங்களை சட்ட விரோதமாக அகழ்ந்து எடுப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் பொதுநலனுக்காக உண்ணாவிரதம் இருந்தார் சுவாமி நிகமானந்தா என்ற 36 வயது இளம் துறவி.

 அவரின் இந்த அகிம்சைப் போராட்டம் அரசின் காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால், உண்ணாவிரதம் தொடங்கி 114-வது நாளில் கோமா நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

 இதில் வேடிக்கை என்னவென்றால், அவரது உயிர் பிரிந்த மறுதினம் (ஜூன் 14) கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட 3 ஒப்பந்தங்களை உலக வங்கியுடன் இந்தியா மேற்கொள்ளும் வகையில் தில்லியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும், உலக வங்கிக்கான இந்திய இயக்குநர் ராபர்ட் சாஹாவும் கையெழுத்திட்டுள்ளனர்.

 இந்த ஒப்பந்தத்தின்படி சுமார் ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் கங்கையைச் சுத்தப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் ரூ.4,600 கோடியை உலக வங்கி நீண்டகாலக் கடனாக இந்தியாவுக்கு வழங்கவுள்ளது.

 இந்நிலையில், கங்கை நதியின் தூய்மையைக் காப்பாற்ற வலியுறுத்தி ஒருவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாள்களாக உண்ணாவிரதம் இருக்கிறார் என்கிற தகவல் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டதா அல்லது அரசு தெரிந்தும், தெரியாமல் இருந்ததா என்ற சந்தேகம் வலுக்கவே செய்கிறது. கங்கையைப் பாதுகாக்க உலக வங்கி உதவியுடன் திட்டம் பரிசீலனையில் இருந்திருந்தால் உண்ணாவிரதம் இருந்தவரின் அகிம்சைப் போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவந்திருக்கலாமே?

 பொதுநலன் கருதி தனிமனிதர் ஒருவர் தனது கோரிக்கையை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் மேற்கொள்ளும் அகிம்சைப் போராட்டங்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் விதம் இவ்வளவுதானா?

 ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் மட்டுமே தேசபக்தர்கள் ஆகிவிட முடியாது.

 மனிதராகப் பிறந்த அனைவருமே மகாத்மாதான். ஏனென்றால், தவறான தொழில் அல்லது தவறு செய்ய நேரும்போதுகூட இதுவே கடைசி, அடுத்தமுறை இந்தத் தவறைச் செய்யவே மாட்டேன் என உள்ளூர ஒவ்வொருவரின் மனதும் போராடவே செய்கிறது. இதுதான் மனிதனுள் மறைந்துள்ள மகாத்மா.

 அதுபோல, பொதுநலன் கருதிய ஒவ்வொரு சிறிய பிரச்னைகளிலும்கூட, பொதுமக்களின் மனது அப்பிரச்னைகளுக்குத் தீர்வு என்று ஏற்படுமோ என எண்ணாமல் இல்லை. உதாரணமாக, நடந்துசெல்லும் பாதை சரி இல்லாமல் போனாலோ, சுகாதாரச் சீர்கேடு நிலவும் பகுதிக்குள் செல்லும்போதோ, என்றைக்கு குறைபாடுகள் நீங்கப்போகிறதோ என அவரவர் உள்மனது பேசத்தான் செய்கிறது. இதுவும்கூட மனிதனுள் மறைந்துள்ள மகாத்மா.

 இதில் ஒருசிலர்தான் சுவாமி நிகமானந்தாபோல மகா-ஆத்மாவை வெளிப்படுத்தி கோரிக்கைகளுக்காகப் போராடுகின்றனர்.

 இவ்வாறு பொதுநலனுக்காக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுவாமி நிகமானந்தா உயிர்நீத்தது, உண்ணாமல் இருந்ததால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்ல, கோரிக்கைகள் நிறைவேறாததால் நடந்த தற்கொலை. இதற்குக் காரணமான அரசின் மீது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்.

 அரசியல் கட்சிகளின் பங்களிப்பு, பண பலம் போன்றவை இருந்தாலொழிய, அகிம்சைப் போராட்டம் வெற்றிபெறாது என்ற நிலையை மாற்ற வேண்டும். ஏனென்றால், அகிம்சையை இம்சித்தால் முடிவு புரட்சியாகத்தான் இருக்கும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.