/

யாருக்கும் வெட்கமில்லை!

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கேரள அரசியல்வாதிகள்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.  கேரளத்தில் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் அவர்களின் ஒரே க

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:32 pm

ஆர். வேல்முருகன்

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கேரள அரசியல்வாதிகள்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

 கேரளத்தில் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் அவர்களின் ஒரே குறிக்கோள் வீணாகக் கடலில் தண்ணீர் கலந்தாலும் பிரச்னையில்லை, தமிழகத்துக்குக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.

 எந்த நாடகம் நடத்தியாவது பிரச்னையைக் கிளப்பிக்கொண்டிருக்க வேண்டும் - அது காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், மார்க்சிஸ்ட் கட்சியாக இருந்தாலும்.

 முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டபோது, அதை உறுதியாகச் செயல்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

 ஆனால், இன்றுவரை சில்லறை விற்பனைப் பிரச்னைக்குக் கொடுக்கும் அவசர முக்கியத்துவத்தை முல்லைப் பெரியாறு பிரச்னைக்குக் கொடுக்கவில்லை.

 இதனால் வன்முறை அதிகரித்து இப்போது இரு மாநிலங்களில் சாதாரண பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 ÷இதேபோல தீர்க்க முடியாத மற்றொரு பிரச்னையானது தெலங்கானா. எதற்கும் முக்கியத்துவம் தராததால்தான் ஒவ்வொன்றும் தேவையில்லாமல் காலதாமதமாகி இந்தியாவின் பெயர் உலக அரங்கில் மிகவும் கெட்டு வருகிறது.

 ÷இப்போது முல்லைப் பெரியாறு பிரச்னைதான் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. விரைவில் இதே வரிசையில் பரம்பிக்குளம் ஆழியாறு (பி.ஏ.பி.) பிரச்னையும் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

 ÷தமிழக, கேரள மக்கள் சகோதரத்துவத்துடன் பழகி வந்தாலும் பிரச்னை அரசியல்வாதிகளால்தான் என்பது வரலாறு.

 உம்மன் சாண்டியாக இருந்தாலும் அச்சுதானந்தனாக இருந்தாலும் தங்கள் மாநில நலன்தான் முக்கியம் என்பதுபோல பாசாங்கு காட்டுகிறார்கள் என்பது தெளிவு. இதை அந்த மாநில மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். மலையாள ஊடகங்களும், மலையாள நாளிதழ்களின் செய்தியாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

 கேரளத்தில் எந்தப் பிரச்னை என்றாலும் அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ செய்தியாளர்களிடம் தெளிவாகப் பேசுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் அந்த நிலை தலைகீழாக உள்ளது.

 செய்தியாளர்களிடம் பேசினால் தங்கள் உயர் அதிகாரி அல்லது அமைச்சர் என்ன சொல்வாரோ என்று நினைத்து எதுவும் கூறுவதில்லை.

 ÷கேரளத்தில் தென்னை நார்த் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிகம். அதனால்தான் கேரளத்தில் கயிறு வாரியம் செயல்படுகிறது. ஆனால், அதற்குத் தேவையான தென்னை நாரில் 90 சதவிகிதம் தமிழகத்தில் இருந்துதான் சென்றாக வேண்டும். தமிழக நார் உற்பத்தியாளர்களுக்கு சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அதிக ஆர்டர் கிடைத்ததன் காரணமாக கேரளத்துக்கு நார் செல்லவில்லை.

 இதையடுத்து தென்னை நார் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று பிரதமர் வரை சென்று அங்குள்ள அரசியல்வாதிகளுடன் இணைந்து ஏற்றுமதியாளர்கள் முயற்சித்தனர்.

 ஆனால், தமிழக ஏற்றுமதியாளர்கள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தால் தமிழகத்தில் இருந்து ஒரு கிலோ தென்னை நார் கூட கேரளத்துக்குச் செல்லாமல் தடுப்பதாக அறிவித்தவுடன் கேரள ஏற்றுமதியாளர்கள் பயந்துவிட்டனர். அதன் பின் நார் ஏற்றுமதித் தடைக்கு முயற்சி செய்யவில்லை.

 இப்போதைய சூழ்நிலையில் கேரளத்துக்குத் தேவையான மணல், சிமெண்ட், அரிசி, காய்கறிகள், கறிக்கோழி, அடிமாடு என அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்துதான் சென்றாகவேண்டிய நிலை உள்ளது. இதற்கு ஒரு வாரம்தான் தடை விதித்தால் என்ன? அப்போதுதான் கேரளத்துக்குத் தமிழகத்தின் அருமை, பெருமை புரியும்.

 ÷பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து நோட்டீஸ் அனுப்புவதுண்டு. நாட்டில் பல ஆயிரம் பேர் பாதிக்கப்படும் இந்தப் பிரச்னையில் அரசியல்வாதிகளின் தேவையில்லாத தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வர ஏன் இந்தப் பிரச்னையில் தானே தலையிட்டு தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது.

 ÷தண்ணீர் பிரச்னையில் தங்கள் சொந்த நாட்டு சகோதர, சகோதரிகள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. தங்கள் தொகுதி இடைத் தேர்தல்தான் முக்கியம் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் இருக்கும்வரை இந்தியா வல்லரசாகும் வாய்ப்புக் குறைவு. அந்த அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கும் உரிமை வாக்காளர்களாகிய மக்களுக்கு உண்டு. பிரச்னை செய்யும் அரசியல்வாதிகளைத் தூக்கியெறிந்து மக்களுக்காகத்தான் அரசியல்வாதிகள் என்ற நிலையைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அடுத்த தேர்தலைச் சந்திக்க மீண்டும் வர அரசியல்வாதிகளுக்கும் வெட்கமிருக்கும். இல்லாவிட்டால் யாருக்கும் வெட்கமிருக்காது.

 ÷எந்தப் பிரச்னைக்கும் ஒரு கட்டத்தில் முடிவுண்டு. இது இயற்கையின் நியதி. அந்த முடிவு முதல்வர் ஜெயலலிதா மூலம் வந்தால் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.