ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோடைக்கால "அதிசயம்'!

புவி வெப்பமயமாதலைத் தடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகளை நடுவோம் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, வனங்கள் திடீரெனப் பற்றி எரிந்து அழிந்து

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:19 pm

எம். அருண்குமார்

புவி வெப்பமயமாதலைத் தடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகளை நடுவோம் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, வனங்கள் திடீரெனப் பற்றி எரிந்து அழிந்து வருவது வேதனைக்குரியதாகவே உள்ளது. இயற்கை தந்த வரப்பிரசாதமான வனங்களை, இயற்கை அழிக்கவில்லை. சமூக விரோதிகள்தான் அழிக்கின்றனர்.

 முன்பெல்லாம், வனப்பகுதியில் வளரும் மரங்களை விறகுக்காக வெட்டி விற்பனை செய்துவந்தனர். வெட்டப்பட்ட மரம் துளிர்விட்டு மீண்டும் வளர்ந்து வந்தன. இப்போதோ கரிக்காக வனப்பகுதியில் வளர்ந்துள்ள மரங்களுக்கும், மலைகளின் மீதுள்ள மரங்களுக்கும் தீ வைக்கின்றனர்.

 தீ வைத்து எரிக்கப்படும்பொழுது, அந்தப் பகுதியில் மீண்டும் மரம் வளர்வது என்பது இயலாததாகும். இத்தகைய செயல்களுக்கு வனத்துறையினரும் பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர்.

 வனத்துறையினருக்குத் தெரியாமல் வனப் பகுதிக்குள் யாரும் நுழைந்து தீ வைக்க முடியாது, அடுத்த சில நாள்களில் அங்கு காணப்படும் கரிகளை மூட்டைகளாகக் கட்டிக்கொண்டு யாரும் வெளியேறிவிட முடியாது என்பது சாதாரண மக்களும் அறிந்ததுதான்.

 வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் வசிப்போருக்கும், இப்பகுதியையொட்டிய சாலைகள் வழியாக அவ்வப்போது பயணிப்போருக்கும் "தீ' சம்பவம் பழகிப்போன ஒன்றாகும்.

 பலமுறை தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றவுடன், எப்போதோ ஒருமுறை வனத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதும் உண்டு. ஆனால், எப்படி தீ உருவானது என்பதற்கு வனத் துறையினர் சொல்லும் காரணம் வேடிக்கையாகவே இருக்கும்.

 அப்பகுதி வழியாகச் சென்றவர் வீசி எறிந்த பீடி அல்லது சிகரெட் துண்டிலிருந்து பற்றிய தீப்பொறி கோடைக்காலத்தில் வனப்பகுதியில் காய்ந்துபோன நிலையில் உள்ள கோரைப் புற்களில் பிடித்து எரிந்ததாகச் சொல்வார்கள். இதற்காக, அப்பாவி ஒருவரைப் பிடித்து வழக்குத் தொடுப்பதும் உண்டு.

 சில நேரங்களில் வனப்பகுதியில் விளையாடச் சென்ற சிறுவர்கள், தீ வைத்துவிட்டு வந்ததாகவும் வனத்துறையினர் கூறுவர். வனத்தை தீ வைத்து அழிப்பதால் அப்பகுதியில் மீண்டும் மரம் வளர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். மரம் வளராவிட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். சூரியனின் வெப்பம் அதிகரிக்கும். மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும்.

 அதனால் தீ வைத்து அழிக்கும் சமூக விரோதிகளின் செயலைத் தடுப்பதற்கான நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.

 அரசும் வனப் பாதுகாப்புக் குழுக்களை அமைத்துள்ளன. இதிலோ அரசியல் பிரமுகர்களே இடம்பெற்றுள்ளதால் (!) பல இடங்களில் இக்குழுவின் செயல்பாடுகளோ சரிவர இல்லை.

 எனவே, இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகளையே முழுக்க முழுக்க உள்ளடக்கிய வனப் பாதுகாப்புக் குழுக்களை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

 இக்குழுக்களுக்கு முழு அதிகாரம் அளித்து, வனத்தை அழிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 சாராயச் சாவுகள் ஓரிடத்தில் நடைபெற்றால், அந்த பகுதிக்குள்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உண்டு. இதேபோல், வனப்பகுதியில் தீப்பிடித்தால் அந்த எல்லைக்குள்பட்ட வனத்துறையினர் மீது துறை ரீதியாகக் கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

 செயற்கைக்கோள் மூலமும் கண்காணிப்புகள் தொடர வேண்டும். இவ்வாறான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால்தான், வழக்கமாக நடக்கும் கோடைக்கால அதிசயமான வனங்கள் எரிப்பு(!) எப்பொழுதும் நிகழாமல் தடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.