‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விளையாட்டுப் பிள்ளைகள்!

ஐபிஎல் போட்டிகளின்போது போட்ட 'ஆட்ட'த்தின் விளைவாக இந்திய அணி வீரர்களுக்கு உலகக் கோப்பை டி 20 போட்டி சரியான பாடம் புகட்டியிருக்கிறது. சூப்பர் 8 பிரிவில் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து வெளியேறியது இந்திய

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:56 pm

எஸ். ராஜாராம்

ஐபிஎல் போட்டிகளின்போது போட்ட 'ஆட்ட'த்தின் விளைவாக இந்திய அணி வீரர்களுக்கு உலகக் கோப்பை டி 20 போட்டி சரியான பாடம் புகட்டியிருக்கிறது.

சூப்பர் 8 பிரிவில் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து வெளியேறியது இந்திய அணி. இலங்கையுடனான முக்கியமான போட்டியில்கூட இந்திய அணி வீரர்கள் அலட்சியத்துடன் விளையாடி கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கினர்.

'ஐபிஎல் போட்டிகளால் வீரர்களின் திறமை மேம்பட்டது; ஆனால், போட்டிகளின் முடிவில் நடந்த விருந்து மற்றும் அதிகப்படியான பயணத்தால் வீரர்களுக்கு களைப்பு ஏற்பட்டு திறமையை முழு அளவில் வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டது' என ஐபிஎல் மீது மறைமுகமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் காப்டன் தோனி.

ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் செயல்பாடு அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்தான் என்ற சப்பைக்கட்டு காரணங்களை ஏற்க யாருமே தயாரில்லை.

ஐபிஎல் போட்டிகளால் இந்திய அணி மட்டுமன்றி அனைத்து அணி வீரர்களின் கவனமும் சிதறியது என்பதை மறுக்க முடியாது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ், ஐபிஎல் போட்டியின்போது கூறுகையில், ஐபிஎல் போட்டிகளால் நிறைய பணம் கிடைப்பது மட்டுமல்லாமல், நடிகைகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைப்பதாகக் கூறி புளகாங்கிதம் அடைந்தார். யுவராஜ் சிங், ஹர்பஜன் ஆகியோர் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகின.

ஐபிஎல்-லில் அளவுக்கு அதிகமான போட்டிகளில் விளையாடியதால் வீரர்கள் பலர் உடல் தகுதியை இழந்துவிட்டனர். இவர்களில் 3 பேர் விளையாடுவதற்கான உடல் தகுதியை முற்றிலும் இழந்தவர்கள் என அணி பயிற்சியாளர் கிறிஸ்டனும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தந்த சுதந்திரத்தால் மேற்கு இந்தியத் தீவுகளிலும் ஒரு மதுபானக்கூடத்தில் ரசிகர்களுடன் சண்டையிட்டு ஒழுங்கீனமாக நடந்து பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளனர் இந்திய வீரர்கள்.

ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டிகளின்போது, மார்பளவுக்கு எகிறிய பவுன்சர் பந்துகளை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். 'ஷார்ட் பிட்ச்' பந்துகளை அடிக்க இயலாமல் வெறுமனே பார்த்துக் கொண்டேயிருந்தனர்.

'மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் நம்மிடம் இல்லை. ஆனால், தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். வேகப்பந்தை எதிர்கொள்ளத் திணறினாலும், சுழற்பந்துகளை அழகாக விளையாடத் தெரிந்தவர்கள் நம் வீரர்கள்' என காப்டன் தோனி தோல்விக்கான காரணங்களைக் 'கண்டுபிடித்து' கூறியபோது உண்மையிலேயே பரிதாபமாக இருந்தது.

சூப்பர் 8 சுற்றில் மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெய்ல் கொடுத்த கேட்சை, தோனியும், யூசுப் பதானும் முட்டி மோதி கோட்டைவிட்டது தெருவில் விளையாடும் கிரிக்கெட்டைவிட மோசமாக இருந்தது.

கடைசிப்பந்தில் சிக்ஸர் அடிக்கும் திறமை, மற்ற அணி வீரர்களிடம் இருக்கிறதோ இல்லையோ கடைசிப்பந்தில் சிக்ஸர் கொடுக்கும் திறமையில் இந்திய வீரர்களை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது.

இலங்கையுடனான போட்டியின்போது கடைசி ஓவர்களில் இலங்கை பந்துவீச்சாளர்கள் துல்லியமான யார்க்கர்களை வீசி இந்திய வீரர்களைத் திணறடித்தனர். அதே கடைசி ஓவர்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் நினைத்துப் பார்க்க இயலாத வகையில் மோசமாகப் பந்துவீசினர். தோல்வியடைவது நிச்சயம் என்றே முடிவுசெய்துவிட்ட இலங்கை வீரர்கள் '143' என்ற அரையிறுதிக்கு முன்னேறும் மந்திர ரன்களை குறிவைத்துத்தான் முதலில் ஆடினர். அதைக் கடந்துவிட்டதும், இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சைப் பார்த்து புத்துணர்வு அடைந்து அடித்து ஆடி வென்றே விட்டனர்.

மொத்தத்தில் கிரிக்கெட்டின் வடிவத்தை மாற்றிய ஐபிஎல், வீரர்களின் நடத்தையையும் மாற்றிவிட்டது. ஐபிஎல் போட்டிகளால் சிறந்த இளம் வீரர்கள் அணிக்குக் கிடைத்துள்ளனர் என இனி பெருமை பேச முடியாது. அந்த கிடைத்தற்கரிய வீரர்களைக் கொண்ட அணிதான் இப்படி படுதோல்வி அடைந்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தத் தோல்வி உணர்த்தியிருக்கிறது. விளையாட்டு வீரர்களை 'விளையாட்டுப் பிள்ளைகள்' ஆக்கிவிட்டது ஐபிஎல்.

'இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்; இந்திய அணி மீது நம்பிக்கை வைக்க வேண்டும்' என சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தோல்வி அடைந்துவிட்டோமே என்ற வருத்தம் சிறிதுமின்றி மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு இந்திய ரசிகர்களிடமே தகராறு செய்யும் இந்திய வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க இனி என்ன இருக்கிறது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.