‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பேசு இந்தியா பேசு...!

சீனாவுடன் மக்கள்தொகையில் போட்டியிடுவதைப்போல செல்போன்  பயன்படுத்துவதிலும் இந்தியா போட்டா போட்டி போடுகிறது. மாதந்தோறும் 2 கோடி புதிய தொலைபேசி இணைப்புகள் (பெரும்பாலும் செல்போன்களே) வழங்கப்படுவதாக மத்திய

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:09 pm

எஸ். ராஜாராம்

சீனாவுடன் மக்கள்தொகையில் போட்டியிடுவதைப்போல செல்போன்  பயன்படுத்துவதிலும் இந்தியா போட்டா போட்டி போடுகிறது. மாதந்தோறும் 2 கோடி புதிய தொலைபேசி இணைப்புகள் (பெரும்பாலும் செல்போன்களே) வழங்கப்படுவதாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டு பெருமிதம் கொள்கிறது.

உயர்தர, நடுத்தர, ஏழை மக்கள் என்ற பாகுபாடின்றி செல்போன் சிணுங்குகிறது. தகவல்தொடர்பில் பெரும் புரட்சியையே செல்போன்கள் ஏற்படுத்தியுள்ளன. இவை எல்லாம் சரிதான். ஆனால், பயன் என ஒன்று இருந்தால் பாதிப்பு என ஒன்று இருக்கத்தானே செய்யும்.

செல்போன் டவர்கள் வெளியிடும் கதிர்வீச்சால் பறவைகள் பாதிக்கப்பட்டு சிட்டுக்குருவி உள்ளிட்ட சில பறவையினங்களே அழிந்து வருவது ஒருபக்கம்.

மிதமிஞ்சிய செல்போன் பயன்பாட்டால் அன்றாடம் மனிதர்களுக்கு ஏற்படும் துன்பத்துக்கும் அளவே இல்லாமல் போய்விட்டது.

ஒரு பேருந்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். ஜன்னலோர இருக்கை கிடைத்தாலும் இன்பப் பயணம் இப்போதெல்லாம் வாய்ப்பதேயில்லை. ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட செல்போன்களுக்கு அழைப்பு வந்துகொண்டே இருக்கும். விதவிதமான ரிங்டோன்களில் யாருடைய செல்போன் ரீங்காரமிடுகிறது (கூச்சல் போடுகிறது!) என்பதே புரியாது.

அழைப்பவருக்கு பதில்சொல்கிறேன் பேர்வழி என செல்போன் பேர்வழிகள் பண்ணும் அட்டகாசம் இருக்கிறதே அப்பப்பா...

""இன்னும் 10 நிமிஷத்துல அங்க இருப்பேன், மேம்பாலத்தை தாண்டிட்டிருக்கிறேன், தாண்டிட்டேன், வந்துட்டேன்'' என நேரடி ஒலிபரப்பே செய்வார்கள். தெரியாத இடம் என்றால்கூட, பக்கத்திலிருப்பவரிடம் கேட்டு தெரிந்துகொண்டு கடந்து கொண்டிருக்கும் இடத்தை அறிவிப்பார்கள்.

சீனத் தயாரிப்பு செல்போன்கள் இந்திய சந்தைகளில் சீச்சீ எனும் விலைக்கு விற்கப்படுவதால் யாரைப் பார்த்தாலும் கையில் சீன சரக்கு. ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்கும் அளவுக்கு அதில் சவுண்ட். நம் இசைப் பிரியர்களுக்கு அரை மணி நேர பயணத்தில்கூட இசையை ரசிக்காமல் செல்ல முடியாது. பழைய பாடல்கள் முதல் திரைக்கு வராத படங்களின் பாடல்கள் வரை ஒரே நேரத்தில் பத்து பாடல்கள்  கூப்பாடு போடும். இதில் பஸ்ஸில் இருக்கும் டி.வி. வேறு தன் பங்குக்கு பாட்டு பாடிப் பாடாய்ப் படுத்தும்.

அத்தனை பாடல்களையும் ஒலி வேறுபாடு, வரி வேறுபாடு அறிந்து பிரித்து ரசிக்கும் அளவு இசைஞானம் இருந்தால் நாம் தப்பித்தோம். இல்லாவிட்டால் பாடல்கள் கும்பலாக நடத்தும் தாக்குதலில் உடலில் எல்லா அழுத்தங்களும் ஒருசேர அதிகரிக்கும்.

குழந்தைகளுடன் பஸ்ஸில் ஏறினால் இறங்கும்போதும் தாய்மார்கள் செல்போனில் பேசிக்கொண்டே இறங்குகின்றனர். குழந்தைகளை அழைத்து வந்த ஞாபகம் இருந்தால்தான் போச்சு. இல்லாவிட்டால் செல்போன் பேச்சு மயக்கத்தில் குழந்தைகளை பஸ்ஸிலேயே விட்டுச் சென்றுவிடுவதும் நடக்கும்.

தெருவில் இறங்கி நடந்தாலும் செல்போனில் பேசாமல் போனால்தான் உங்களை ஒருமாதிரியாகப் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு ஆகிவிட்டது. காதில் வைத்தபடி பேசினாலும் பரவாயில்லை. "ஹேண்ட் ஃப்ரீ' என்று வந்ததற்குப் பிறகு செல்போனை கையில் பிடிக்காமலேயே மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்போல பேசிக் கொண்டே செல்கின்றனர்.

செல்போன்களின் விலைதான் குறைவே தவிர, செல்போன் கட்டணங்களை எல்லா நிறுவனங்களும் ஒரேமாதிரி தான் வசூலிக்கின்றன. ரேட் கட்டர், பூஸ்டர் கார்டு, போனஸ் கார்டு என விதவிதமான பெயர்களில் கட்டணத்தைக் குறைக்கவும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். என்ன ஒரு ஏமாற்றுத்தனம்?

இதுபோதாதென்று ரிங்டோன் மாதிரி காலர்டியூனுக்கு என மாதந்தோறும் வாடகை. அவசர அவசரமாக அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதே அவசரத்துடன் செல்போன் ஒலிக்கும். அழைப்பை ஏற்காவிட்டால்தான் நமக்கு தலையை வெடித்துவிடுமே. மிக அக்கறையுடன் "ஹலோ' சொன்னால், இன்னுமா காலர்டியூனை ஆக்டிவேட் செய்யாமல் இருக்கறீங்க? என உரிமையுடன் பெண் குரல் கேள்வி கேட்கும். எடுத்த அவசரத்திற்குக் காணாது.

இந்தத் தொல்லைக்குப் பயந்தே காலர் டியூனை ஆக்டிவேட் செய்து தொலைத்துவிடலாமா எனத் தோன்றும். இல்லாவிட்டால் தினமும் இப்படி நேரம் காலம் தெரியாமல் போன் செய்து பெண் குரல் டார்ச்சர் செய்யும்.

செல்போனை வேண்டுமானால் யாராவது கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், மிஸ்டுகாலை கண்டுபிடித்த பெருமை நிச்சயம் நமக்குத்தான். மிஸ்டுகாலையும் ஒரு அழைப்பாகக் கருதி அழைப்பவர்கள் ஏராளம்.

செல்போன் இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால், அடுத்தவரின் சுதந்திரத்தைப் பறிக்கும் அளவு பொது இடத்தில் செல்போனில் பேசுவதை சுய கட்டுப்பாட்டுடன் தவிர்க்க வேண்டும். பேசு இந்தியா பேசு... அதற்கு முன் யோசி இந்தியா யோசி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.