‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சீர்திருத்தம் அவசியம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வது தொடர்பான விவாதம்  இப்போது சூடுபிடித்துள்ளது.  அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் ஐ.நா. பாதுகாப்புக்  கவுன்சிலில்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:45 pm

எஸ். ராஜாராம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வது தொடர்பான விவாதம்  இப்போது சூடுபிடித்துள்ளது.

 அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் ஐ.நா. பாதுகாப்புக்  கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. 15 நாடுகள் நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகள். இவை சுழற்சி முறையில் நியமிக்கப்படும்.

 ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் வலிமையுடன் செயல்படவும், அந்த அமைப்பில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய ஜி4 நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

 ஆனால், பாகிஸ்தான், இத்தாலி தலைமையிலான 40 நாடுகள் கொண்ட குழு, நிரந்தர உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. 5 உறுப்பு நாடுகளால் ஏற்கெனவே பல்வேறு பிரச்னைகளில் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. இந்நிலையில், எண்ணிக்கையை அதிகரித்தால் குழப்பம்தான் அதிகரிக்கும் என்பது இவற்றின் வாதம். பாதுகாப்புக் கவுன்சில் விரிவுபடுத்தப்பட்டால் இந்தியாவுக்கு அதில் இடம் உண்டு என்கிற நிலையில், பாகிஸ்தான் அதை எதிர்ப்பதற்குக் கூடுதல் காரணம் உள்ளது.

 இச் சூழ்நிலையில், பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற  இந்தியாவின் நீண்டநாள் கனவு இம்முறையாவது நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ் ஆகியவை இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆக ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளன. இதுவரை அமைதிகாத்த அமெரிக்காவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டது. அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி அந்த ஆதரவை உறுதிப்படுத்தினார். சீனா மட்டும்தான் மதில்மேல் பூனையாக உள்ளது.

அனைத்துத் துறைகளிலும் தனக்கு சவால்விடும் வகையில் ஒரு பெரும் சக்தியாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு சீனா ஆதரவு அளிக்குமா என்பது கேள்விக்குறியே.

 உலகளாவிய விஷயங்களில் இந்தியா பெரும் பங்காற்ற வேண்டும் என்று மட்டும் கூறிவரும் சீனா, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறது.

 ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பாக இந்தியா ஒரு யோசனையை முன்வைத்துள்ளது. நிரந்தர உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தினாலும் புதிதாக நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை பெறும் நாடுகள் "வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருக்கலாம் என கூறியுள்ளது. எதிர்ப்பாளர்களைச் சமாதானப்படுத்தும் நோக்கில் இந்த யோசனை கூறப்பட்டிருந்தாலும், இதன்மூலம் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கமே சிதைந்து போய்விடக்கூடும்.

 உலகளாவிய பல்வேறு பிரச்னைகளில் இப்போது வீட்டோ அதிகாரம் பெற்ற 5 நாடுகள் வைத்ததுதான் சட்டம் என்கிற நிலை உள்ளது. அதிலும் அமெரிக்கா தனக்குப் பிடிக்காத நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடைகளைக் கொண்டுவர ஐ.நா.வை கைப்பாவைபோல பயன்படுத்துகிறது என்பது  நீண்டநாள் குற்றச்சாட்டு.

 உதாரணமாக, ஈரான், வடகொரியாவுக்கு எதிராக இதுவரை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தடை தீர்மானங்களுக்கு அமெரிக்காதான் சூத்ரதாரி. ரஷியா தவிர மற்ற 3 நாடுகளும் அமெரிக்காவை எதிர்க்கத் தயங்குகின்றன.

 இராக்குக்கு எதிரான போரின்போதுகூட, ஐ.நா. சபையின் தீர்மானங்களைப் பொருள்படுத்தாமல்தான் அமெரிக்கா செயல்பட்டது. அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு பணிந்து அதன் கூட்டுப் படைகளும் இராக்கை நிர்மூலமாக்கின. ஆப்கானிஸ்தானிலும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

 இந்த நிலையில் பாதுகாப்புக் கவுன்சிலில் கூடுதல் நாடுகள் இடம்பெற்றால், எந்தப் பிரச்னையிலும் நியாயமான முடிவு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். அதிலும் வலுவான ஜனநாயக அடிப்படையைக் கொண்டுள்ள இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் இடம்பெற்றால் இன்னும் ஓர் இராக், ஆப்கன் போர்கள் நடைபெறாமல் தவிர்க்கப்படலாம்.

 ஐ.நா.வில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கும் இந்தியா, இதுவரையிலான உலகளாவிய பல பிரச்னைகளில் தன் கருத்தை வலுவாகச் சொன்னதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை, இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் புகார் போன்றவற்றில் இந்தியா மேம்போக்காகத்தான் செயல்பட்டுள்ளது.

 பல விஷயங்களில் மௌனமாக இருப்பது ஒருவகையில் ராஜதந்திரம்தான். ஆனால், அது எல்லா நேரங்களிலும் கைகொடுக்காது. நம் பலவீனத்தை நாமே காட்டிக் கொடுப்பது போலாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.