/

முடிந்தது மாநாடு, தொடரட்டும் பணிகள்

மிகுந்த கோலாகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் நடந்தேறி இருக்கிறது, முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. மாநாட்டு நிகழ்வில் பல நிறை குறைகள். பாராட்ட வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை, சரி செய்ய வேண்டியவை எனப்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:37 pm

கிருங்கை சேதுபதி

மிகுந்த கோலாகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் நடந்தேறி இருக்கிறது, முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. மாநாட்டு நிகழ்வில் பல நிறை குறைகள். பாராட்ட வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை, சரி செய்ய வேண்டியவை எனப் பல நிகழ்ந்திருக்கின்றன. நடந்த குறைகளை நிறைகளாக்கும் வண்ணம் அடுத்த மாநாடு நிகழட்டும். அதற்குள் செய்ய வேண்டிய பணிகள் பல காத்திருக்கின்றன.

 "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்பது மாநாட்டு முழக்கமாக மட்டும் நின்றுவிடாமல் இயல்பு வாழ்வில் அக்கருத்தாக்கம் நிலைபெற வேண்டும். முதலாவதாக, பெயரில் இருந்தே தொடங்கலாம். இப்போதைய சூழலில் பலரது கவனத்தையும் ஈர்த்த கருத்து, குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டல். இது டைமுறைக்கு வருவது நல்லது. அதேசமயம், நல்ல தமிழ்ப்பெயர்களாய் அமைந்து திரிபும் மரூஉம் பெற்ற ஊர்ப் பெயர்களையும் செம்மை செய்ய இதுவே நல்ல தருணம்.

 காலத்துணையோடு வரலாறு நிகழ்ந்த இடங்கள் ஊர்கள். இடுகுறியாகவும், காரணமாகவும் அமைந்தவை, ஊர்ப்பெயர்கள். பேச்சு வழக்கில், எழுத்துப்போக்கில் அவை திரிபும், மாற்றமும் பெறுகிறபோது, புதிய பெயர்களாகவும், மாறி அவற்றுக்குப் புதிய விளக்கங்களும் தோன்றிவிடுகின்றன. காலப்போக்கில், அந்தப் பெயர்களே நிலைகொள்ளத் தொன்மை உணர்த்தும் வரலாற்றுப் பெயர்கள் சுவடின்றி அழிந்துவிடுகின்றன. சான்றாக, ஒளவைக்கு நெல்லிக் கனி ஈந்த அதியன் ஆண்ட தகடூர்ப் பகுதியில் உள்ள ஊர் "அதமன் கோட்டை'.  அதியமான் கோட்டை  திரிந்து அவ்வாறு ஆனதை, உடனே தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். 1954-ல் அரசு அவ்வூரை, "அதியமான் கோட்டை' என்று அறிவித்தது. அதுபோல், "அவநாசி', "அவிநாசி' ஆனது. "குன்னக்குடி', "குன்றக்குடி' ஆனது.  பின்னர் அந்தவரிசையில், சிவப்பிரகாச முனிவர் தோன்றிய "துறைமங்கலம்' பேச்சுவழக்கில் "தொரமங்கலம்' என்றிருந்து பழையபடி மாற்றப்பெற்றது. ஓசூர்ப்பகுதியில் உள்ள "டெங்கனிக்கோட்டை', "தேன்கனிக் கோட்டை' ஆனது. இதுபோல் இன்றும் மாற்றம் பெற வேண்டிய ஊர்ப்பெயர்கள் பலவுண்டு. சான்றாக, "அடையார்'- "அடையாறு' ஆகவும், "செய்யார்' - "செய்யாறு' ஆகவும் மாற்றம் கொள்ள வேண்டும்.

 இவைபோல், ஆங்கிலேயர்களின் பேச்சுவழக்கில், திரிந்த ஊர்ப்பெயர்கள் இப்போது இயல்பான பெயர்களோடு வழங்கப் பெறுகின்றன. பெங்களூர்- (ஆஹய்ஞ்ஹப்ர்ழ்ங்) பெங்களூரு என்றும், மைசூர்- (ஙஹ்ள்ர்ழ்ங்) மைசூரு என்றும், கல்கத்தா - (இன்ப்ஸ்ரீன்ற்ற்ஹ) கொல்கத்தா என்றும் மாற்றப்பெற்றதுபோல், தமிழக ஊர்ப் பெயர்களும் செம்மை பெற வேண்டும்.

 சிராப்பள்ளி, "திரு' அடைமொழிபெற்று, "திருச்சிராப்பள்ளி' ஆகி, அது "திருச்சி' என்று சுருங்கி, பழ்ண்ஸ்ரீட்ஹ் ஆகிவிட்டது. தூத்துக்குடி இன்னும் ஆங்கிலத்தில் ஈன்ற்ன்ஸ்ரீர்ழ்ண்ய்தான்! திண்டுக்கல், ஈண்ய்க்ண்ஞ்ன்ப் - சேலம்-நஹப்ங்ம். கடலை ஒட்டியுள்ள ஊர் கடலூர் ஆங்கிலத்தில் (இன்க்க்ஹப்ர்ழ்ங்) கூடலூர் ஆகிவிட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க தரங்கம்பாடி இன்னமும், பழ்ஹய்ஞ்ன்க்ஷஹழ் தான். ஈரோடு, உழ்ர்க்ங் என ஆங்கிலத்தில் உள்ளதால் காலப்போக்கில் தமிழிலும், அது ஈரோட் என்பதாக அமைந்துவிடும். எனவே, தமிழ் ஒலிபெயர்ப்புக்கு ஏற்ப ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தித் திருத்தம் செய்வது தேவை.

 இதுபோல் ஊரின் முதல் எழுத்து ஆங்கிலத்தில் இடும் வழக்கு இன்னும் நடைமுறையில் உள்ளது. அவற்றைத் தமிழில் ஆக்குவது நல்லது. அவ்வாறே தமிழகத் தெருப்பெயர்களின் போக்கும். மகாத்மா காந்தி பெயரிலான சாலை, (ஙஹட்ஹற்ம்ஹ எஹய்க்ட்ண் தர்ஹக்)  என்பதன் முதல் எழுத்தைப்பெற்று எம்.ஜி. ரோடு என்றே வழங்கப் பெறுகிறது. மாநாடு நடைபெற்ற கோவையில் உள்ள ஓர் இடப்பெயர் ஆர்.எஸ்.புரம். (த.ந. டன்ழ்ஹம்) சென்னையில் தியாகராயநகர் (ப. சஹஞ்ஹழ்) போல் ஊருக்குப்பல நகர்கள், புரங்கள், பேட்டைகள். இவற்றையெல்லாம் முறைப்படுத்தித் தக்க திருத்தங்களோடு பதிவு செய்து நடைமுறையில் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

 ஊட்டி உதகமண்டலம் போல இருபெயர்கள் உடைய ஊர்கள் வரலாற்று அடிப்படையில் செப்பம் பெற வேண்டும். சங்ககாலத்தில் ஒரு பெயரும் சமய காலத்தில் வேறொரு பெயரும் தற்காலத்தில் புதுப்பெயரும் பெற்றுள்ளன பல ஊர்ப்பெயர்கள். அவற்றை வரலாற்று அடிப்படையில் நினைவுகூர்ந்து அனைவரும் அறியும் வண்ணம் விளக்குதல் வேண்டும். சான்றாக, மணிவாசகப் பெருமான் வரலாற்றில் சிறப்பிடம் பெறும் "திருப்பெருந்துறை' "ஆவுடையார் கோயில்' எனவும் அழைக்கப் பெறுகின்றது. பழனி, "ஆவினன்குடி',  "ஆலவாய்', "மதுரை' போன்று பல ஊர்கள் விளங்குகின்றன. வள்ளல் பாரியாண்ட காலத்துப் பறம்புமலை, சமயகாலத்தில் திருக்கொடுங்குன்றமாகி, தற்போது "பிரான்மலை' என்று அழைக்கப்பெறுகிறது. இதுபோல், மாசாத்தியார் பிறந்த ஒக்கூர், மருதன் தோன்றிய மாங்குடி, கம்பன் மறைந்த நாட்டரசன் கோட்டை முதலிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களைச் சுற்றுலாத் தலங்களாக அறிவிக்க வேண்டும். சுற்றிப்பார்த்துத் திரும்புகிறவர்களின் பொழுதுபோக்குத் தலங்களாக அவை போய்விடாமல், வரலாற்றுத் தடங்களில் சுற்றுப்பயணம் செய்து அந்த உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும்  அனுபவத்தை, வருவோர் பெறும் வண்ணம் அமைதல் வேண்டும். நினைவுச்சின்னங்கள், இன்றைக்கும் அத்தலங்களின் மிச்சசொச்சங்களாக அறியக்கிடைக்கும் பொருள்கள், கற்சிலைகள், உலோகப் படிமங்கள், கல்வெட்டு மற்றும் செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், நாணயங்கள், முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள், பழைய பயன்பாட்டுப் பொருள்கள்,  பழங்கையெழுத்துப்படிகள், முதற் பதிப்பு நூல்கள் எனப் பலவற்றையும் ஆங்கே பாதுகாத்துப் பேணி வருவோர் கண்டு அறிய வகை செய்தல் வேண்டும்.

 சமயகாலத்திற்குப் பின்னர் தோன்றித் தமிழகக் கட்டடச் சிற்பக் கலைக்குச் சான்றாகத் திகழும் காரைக்குடி தமிழன்னையின் திருக்கோயிலில் கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர், தொல்காப்பியர் திருவுருவச் சிலைகள் அமைக்கப்பெற்றிருக்கின்றன. அங்கே, உள்தூண்கள் இன்றிக் கட்டமைக்கப்பெற்ற கம்பன் மணிமண்டபப் பணிகள் முழுமை செய்யப்பெறுவதோடு, நாட்டரசன் கோட்டை கம்பன் பள்ளிப்படை (சமாதி)க் கோயிலையும் மக்கள் சென்று கண்டுவர வழிவகை செய்தல் வேண்டும்.

 இவ்வாறு, மாவட்டவாரியாகத் தொன்மைமிக்க நகரங்கள், ஊர்கள் தேர்ந்தெடுக்கப்பெறவேண்டும். அப்பகுதிசார் இலக்கியங்களில் சுட்டப்பெறுகின்ற தாவரங்கள் - மரங்கள், மலர்கள் தருகின்ற செடிகள், கொடிகள், மருத்துவ மூலிகைகள் ஆகியவற்றைப் பேணிக்காப்பதோடு அவை பல்கிப் பெருகவும் ஆவன செய்தல் வேண்டும்.

 தொல்காப்பியம் சுட்டும் ஐவகை நிலங்களுள் பாலை நிலம் ஆகத் தமிழகம் ஆகிவிடாமல் பழையபடி நானிலமாகத் திகழ வேண்டும். தொழிற்பூங்காக்கள் அமைக்கும் அரசு தமிழ்ப்பூங்காக்களையும், தமிழ் இலக்கியங்கள் புகலும் பொழில்களையும், சோலைகளையும் புனரமைக்க வேண்டும். அதன்வழி தமிழர்தம் தொன்மை வாழ்வு மீண்டும் பூக்க வகை செய்தல் வேண்டும். கபிலர் பாடிய 99 வகை மலர்களைப் படம் எடுத்து ஆவணப்படுத்துவதைவிடவும் அம்மலர்களின் வகைகள் குறிஞ்சிநிலங்களில் பூத்துக்குலுங்க வகை செய்வதே பைந்தமிழின் பச்சையத்தைப் பாதுகாக்கும் முதன்மைப்பணி.

 மருதநிலத் தமிழ்மக்கள் பயன்படுத்திய வேளாண்நுட்பங்கள், மரபுகள் கண்டறியப்பெற்று நம்மாழ்வார் போன்ற வேளாண் வல்லுநர்களைத் துணைகொண்டு நடைமுறைக்கு வரச்செய்தல் இன்றியமையாப்பணி. செந்நெல், வெண்ணெல், தினை, வரகு, சாமை முதலான பண்டைத்தமிழர்தம் உணவுப்பொருள்கள், தமிழர் தம் அன்றாடவாழ்வில் நிரந்தரமாக வகை செய்தல் வேண்டும். இதுபோல் ஐவகை நிலத்து மரபுகளின் தனித்தன்மைகள் தமிழகத்தில் பாதுகாக்கப்பெறல் வேண்டும்.

 சங்ககாலத்தின் நீட்சியேபோல் சமயகாலத்தில் பூவும் புனலும் சொரிந்துவழிபட்ட தமிழர்கள் பேணிய நந்தவனங்கள், தலமரங்கள், தலதீர்த்தங்கள் அவற்றின் தூய்மைத் தன்மை கெடாது பாதுகாக்க இந்து அறநிலையத் துணையோடு இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப் பெற வேண்டும். இன்னமும் பேணப்படாத பழைய திருக்கோயில்கள், சிதைவுற்றபோதும் சில மிச்சசொச்சங்களைத் தாங்கியுள்ள கோட்டைகள், மதில்கள், அகழிகள், போன்றவை முற்றிலும் சிதைந்துவிடும்முன்பே காப்பாற்றப் பெற வேண்டும். அப் பகுதிகளில் காணப்பெறும் கல்வெட்டுகள் இன்னும் பிரதிசெய்யப்படாமல் பாழடைந்து கொண்டிருக்கின்றன என்பது நிதர்சனம். அவற்றைக் காக்கவும் அச்செய்திகளை உரியோரைக் கொண்டு பிரதியெடுத்துப் பேணவும் அவற்றைப் பதிப்பித்து வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்தும் பகுத்தும் அறியவும் உடன் வழி வகை செய்தல் வேண்டும்.

 அண்மையில் நடந்த மாநாட்டு ஆய்வுக் கருத்தரங்க விவாதப்பொருண்மைகள் சுருக்கமாக வெளியிடப் பெற்றதை அடுத்துத் தரமிக்க பயன்மிகு ஆய்வுக்கட்டுரைகள் முழுமையான நிலையில் தொகுப்பாக்கிக் கொண்டு வருவது நல்லது. அவற்றின்வழி பெறப்படும் அரிய வரலாற்றுத் தகவல்களைக் கவனத்தில் கொண்டு, இதற்கு முன்னர் சொல்லப்பெற்ற வரலாற்றில் உரிய திருத்தங்களைத் தக்க வல்லுநர்களைக் கொண்டு முறையே செய்து புதிய திருந்திய வரலாற்றைத் தமிழர்களுக்கு வடித்தளிப்பது இன்றியமையாப் பணியாகும். உரிய முடிவுக்கு வரமுடியாத கருத்தாக்கங்களைக் கண்டுணர, மறுபடியும் பல்கலைக் கழகங்களைத் துணைகொண்டு ஆய்வரங்குகள் நடத்தித் தக்க வல்லுநர்களை வரவழைத்து ஆராய்தலும், அவற்றைப் பதிப்பித்து, வரலாற்றைச் செம்மையுறப் புதுப்பித்து வழங்குவதும் செம்மொழி மாநாட்டுக் குழுவின் இன்றியமையாக் கடமை.

 தொன்மை பேணும் இப்பணிகளோடு நின்றுவிடாமல் தற்காலத்திலும் தமிழ் மரபும் தமிழர்தம் வாழ்வியல் நெறியும் துலங்கத் தேவையான திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்க்கல்வி, தமிழ் வழிக்கல்வி இவற்றோடு இன்றைய வழக்கு மொழியில் பெருவாயிலாக விளங்குகின்ற ஊடகத்தமிழை ஒழுங்குசெய்ய உரிய பயிற்சிகள், நடைமுறைத் திட்டங்களைக் கொண்டுவருதல் வேண்டும். அதற்கெனக் கையேடுகளைத் தக்க வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கலாம்.

 இதுபோல், தமிழர்தம் மருத்துவ இயல், வானவியல், தாவரவியல், விலங்கியல், பயிரியல் முதலான கூறுகளைத் தற்கால நவீனப்போக்குகளோடு ஒப்பிட்டுத் தற்காலத் தேவைக்கேற்பப் புதுப்பிக்கவும் பயன்கொள்ளவும் வழிவகை செய்தல் வேண்டும்.

தமிழ், பேச்சுநிலையிலும், வாழ்வியல் போக்கிலும் வரலாற்றுத்தளத்திலும் தேக்கமின்றித் தொடர் இயக்கமாகத் துலங்க ஆக்கப்பணிகள் நடைபெற வேண்டும். மாநாட்டுவிழா முடிந்துவிட்டது. இனி பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.