ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

முடியரசு முதல் குடியரசு வரை...

இந்தியா உலகிலேயே மிகப்பெரிய குடியரசு நாடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு மக்களாட்சி தொடர்ந்து தடையில்லாமல் நடைபெறுகிறது என்பதே ஒரு பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. உலக நாடுகள் நம்மை வியந்து நோக்குவதற்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:31 pm

உதயை மு. வீரையன்

இந்தியா உலகிலேயே மிகப்பெரிய குடியரசு நாடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு மக்களாட்சி தொடர்ந்து தடையில்லாமல் நடைபெறுகிறது என்பதே ஒரு பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. உலக நாடுகள் நம்மை வியந்து நோக்குவதற்கு இதுவும் ஒரு காரணம்தான்.

எத்தனை குறைபாடுகள் இருந்தாலும், "மக்களாட்சி'யை விடச் சிறந்த வேறு ஆட்சிமுறை இல்லை என்பதால்தான் உலகம் இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த அரசர்களின் எதேச்சாதிகார ஆட்சியிலிருந்து மக்களாட்சியாக மாறுவதற்கு நடந்த போராட்டங்கள் கொஞ்சநஞ்சமா? இழந்த உயிர்கள், சிந்திய ரத்தம், கொடுத்த விலைகள் வரலாற்று ஏடுகளில் சிவப்பு அத்தியாயங்கள்; காலம் வடித்து வைத்த புதிய கல்வெட்டுகள்!

இந்திய விடுதலை "சுகப்பிரசவ'த்தால் பிறந்துவிடவில்லை. நள்ளிரவில் நடந்த அறுவைச் சிகிச்சை மூலமே அவதரித்தது. இந்திய வரலாற்றில் இதற்கு முன் இப்படிப்பட்ட வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதே இல்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்புக்கு அளவேயில்லை. மக்கள் அகதிகளாக தேசத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக்  குடிபெயர்ந்து அச்சத்தோடு ஓடிக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் நமக்கு ஆனந்த சுதந்திரம் வந்தது. புதிய ஆட்சியும், புதிய அரசியல் சட்டமும் உருவானது. இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபையிடம், முழு உருவம் பெற்ற அரசியல் அமைப்புத் திட்டம் 1948 நவம்பர் 4 அன்று அளிக்கப் பெற்றது; 1950 ஜனவரி 26 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

""இந்திய மக்களாகிய நாங்கள் இந்தியாவை இறையாண்மை கொண்ட சோஷலிச, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாகக் கட்டியமைக்கத் தீர்மானித்துள்ளோம்...'' என்று இந்திய அரசியல் அமைப்பின் முகப்பு அமைந்துள்ளது.

இதில் 42-வது சட்டத்திருத்தமாக அறிமுகப்படுத்தப்பட்ட சோஷலிசம், மதச்சார்பின்மை என்ற இரண்டு சொற்களும் இப்போது படாதபாடுபடுகின்றன. அரசியல் சட்டத்தின் மேல் ஆணையிட்டு உறுதிமொழி ஏற்று ஆட்சி செய்யும் அரசியல் கட்சியினர் இதுபற்றிச் சிந்தனையற்றவர்களாகவே செயல்படுகின்றனர். தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளைப் பெறுவதற்காக, "ஏழ்மையை ஒழிப்போம்', "வறுமையே போ' என்பன முழக்கங்களாகின்றன. ஆட்சிப் பொறுப்பேற்றதும் அவ்வளவுதான்.

பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்தவர்களே "இந்தச் சமூக அமைப்பில் சோஷலிசத்தைக் கொண்டுவர முடியாது' என்று பேசி வருகின்றனர். இதுபற்றிக்  கேட்டால் ஊடகங்களின் மீது குறை கூறுகின்றனர்.

""இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு செயல்படும் மாநில அரசுகளால் சோஷலிச சமூகத்தைக் கட்டியமைக்க முடியாது. மக்கள் ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகுதான் சோஷலிசத்துக்கான போராட்டமே தொடங்குகிறது...'' என்று விளக்கமும் அளிக்கின்றனர்.

சோஷலிச இந்தியாவைக் கட்டியமைக்க உறுதி கூறும் அரசமைப்புச் சட்டத்தின் மூலம் சோஷலிச சமுதாயம் உருவாக்கிவிட முடியாது என்பது இவர்களின் நிலை. அப்படியானால் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற இந்தச் சொற்கள் பொருளற்றவைதானா? நேரு கூறிய "ஜனநாயக சோஷலிசம்' என்ற கொள்கையை ஆளும் காங்கிரஸ் கட்சி கைவிட்டு விட்டதா?

இந்தியா முரண்பாட்டில் முன்னணியில் இருக்கிறது. நாடு பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அப்படியானால் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து கொண்டிருப்பது ஏன்? ஒருசிலரின் வாழ்க்கை சோலைவனத்திலும், மிகப் பலரின் வாழ்க்கை பாலைவனத்திலும் பயணம் போகும் இரட்டை நிலைக்கு என்ன காரணம்?

தலைநகர் தில்லியில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார். ""தேசத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 விழுக்காட்டிலிருந்து விரைவில் 10 விழுக்காடாக உயரும்; நாம் 11-ம் திட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம்; நமது பொருளாதார வளர்ச்சி மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது...'' என்று கூறியுள்ளார்.

வறுமையை ஒழிக்காமல் விரைவான வளர்ச்சியை எட்ட முடியாது. ஏழ்மையை ஒழிக்கும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அவை விரைவாக இல்லை; கல்வி, மருத்துவ வசதி, வீட்டு வசதி, தூய்மையான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் ஏராளமானோர் தவிக்கின்றனர். ஊட்டச்சத்துக் குறைவுடன் லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இது தேசிய அவமானம் ஆகும் என்பதும் அவர் பேச்சுதான்.

அண்மையில் இந்தியாவைப் பற்றி வரும் செய்திகள் நம்பிக்கை ஊட்டுவனவாக இருக்கின்றன. சீனா மற்றும் இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு வல்லரசுகளே அஞ்சுகின்றன. உலகின் வல்லாதிக்க நாடு என்ற தகுதியை இழந்துவிட நேருமோ என்ற பயம் அவர்களுக்கு வந்துள்ளது. அதனால்தான் "அணுசக்தி ஒப்பந்தம்' என்ற பெயரால் இந்தியாவை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

""1950-ம் ஆண்டில் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதுதான், இப்போது இருக்கும் இடத்துக்கு நம்மை அழைத்து வந்த பயணத்தின் தொடக்கமாகும். இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நிகழ்வே, நாம் பெற்ற விடுதலை என்பது எவ்வளவு பெரிய சாதனை என்பதைக் காட்டும் அடையாளமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் மனிதகுல வரலாற்றில் இதற்கு முன்பு இவ்வளவு பேர் ஒன்றுதிரண்டு சுதந்திரம், ஜனநாயகம் என்ற தங்களது கொள்கை முடிவில் உறுதியாக இருந்ததில்லை...'' என்று குடியரசுத் தலைவர் பெருமைப்படுகிறார்.

ஆனால் 60 ஆண்டுகால இந்தியக் குடியரசு பற்றி மக்கள் பெருமைப்பட வேண்டாமா? இந்தியா உலக அளவில் ஊழல் பட்டியலில் 84-வது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தில் ஊழல் என்பது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடும். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி மக்களுக்குச் சென்று சேர்வதில்லை என்பதை ஆட்சியாளர்களே ஒத்துக் கொள்கின்றனர்.

மக்களாட்சியில் சட்டமும், நீதியும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை வரும். ஆனால் நீதிமன்றங்களில் அதிக அளவு வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன; அத்துடன் தீர்ப்பு வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது; இதனை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே பகிரங்கமாகப் பேசியுள்ளார். தாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதியாகிவிடாதா?

இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மையில் சாதனைக்குப் பதில் வேதனையே மிஞ்சுகிறது. "அனைத்து விஷயங்களும் காத்திருக்கலாம்; ஆனால் வேளாண்மை மட்டும் காத்திருக்கக் கூடாது' என்பது அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நேருவின் பொன்மொழி. நேருவையே மறந்துவிட்ட பிறகு அவர் கூறிய வார்த்தைகளா நினைவிருக்கப் போகிறது?

நாட்டின் மக்கள்தொகை 2050-ம் ஆண்டில் 175 கோடியாக உயர்ந்துவிடும்; அப்போது அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டுமானால், உற்பத்தி இரு மடங்காக அதிகரிக்க வேண்டும். வேளாண் பரப்பு இப்போதுள்ள 60 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 114 ஹெக்டேராக விரிவுபடுத்தப்பட வேண்டும். இது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் கணிப்பு.

"அனைத்தையும் உள்ளடக்கிய விரைந்த வளர்ச்சியை நோக்கி' எனத் தலைப்பிட்டு வெளியாகியுள்ள 11-வது ஐந்தாண்டுத் திட்ட ஆவணம் கூறுவது என்ன? ""11-வது திட்டத்தின் சவால்களில் ஒன்று, 1980 முதல் 1996-97 வரை 3.2 விழுக்காடாக இருந்து, பின்னர் சராசரி 2 விழுக்காடாகக் குறைந்துவிட்ட வேளாண்மைத்துறை வளர்ச்சி விகிதத்தை மாற்றியமைப்பதாகும்.

நாட்டின் பல பகுதிகளில் தலைதூக்கியுள்ள விவசாயிகள் தற்கொலைகளில் முடிவடையக்கூடிய கிராமப்புற ஏழ்மைத் துயரத்துக்கு இத்துறை வளர்ச்சி வேகக் குறைவே முக்கிய காரணம்.

10 ஐந்தாண்டுத் திட்டங்கள் முடிந்துவிட்டபோதும், திட்டங்களின் பலன் கிராமப்புற மக்களைச் சென்றடையவில்லை என்பது எவ்வளவு பெரிய சோகம்! இந்தியப் பணக்காரர்கள் உலகப் பணக்காரர்களாக உயர்ந்து போகிறபோது, இங்குள்ள நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழைகள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயும் போய்க் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன?

வேளாண்மை தவறி, ஏழ்மையும் பசிப்பிணியும் தொடருமானால் தற்போது நாட்டில் 100 மாவட்டங்களில் காணப்படும் "நக்சலிசம்' மேலும் பரவிடும் என்று அந்த ஆவணம் எச்சரிக்கிறது. காரணம் தெரிகிறது; களையத் தெரியாதா?

""சுதந்திர இந்தியாவில் பெரிய பணக்காரருக்கு இருக்கும் அதே அதிகாரமே ஏழைக்கும் இருக்கும். செல்வத்தையும், அதிகாரத்தையும் பொது நன்மைக்காகப் பங்கிட்டு கொடுக்கவில்லையானால் வன்முறையோடு கூடிய ரத்தம் சிந்தும் புரட்சி ஒருநாள் ஏற்படும்'' என்று அன்றே எச்சரித்தவர் காந்தியடிகள். இதனை எண்ணிப் பார்க்க வேண்டிய நேரம் இது.

மனித நாகரிகம் என்பது மன்னர் ஆட்சியிலிருந்து மக்கள் ஆட்சியாக மலர்ந்திருக்கிறது. ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் நடந்து கொள்வதைப் பார்த்தால் இது முடியரசா? குடியரசா? என்ற ஐயம் எழுகிறது. நினைவிருக்கட்டும், வரலாறுகள் எப்போதும் பின்னோக்கிப் போவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.