தாமதத்தால் தரம் இழக்கும் விருதுகள்!
குருவரின் திறமையை அங்கீகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் வழங்கப்படுவதுதான் விருது. இந்த விருதுகள் உரிய காலத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டால் பலன் உண்டு. காலம் கடந்த விருதால் பயன் ஏது? பெருந்தலைவர


குருவரின் திறமையை அங்கீகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் வழங்கப்படுவதுதான் விருது. இந்த விருதுகள் உரிய காலத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டால் பலன் உண்டு. காலம் கடந்த விருதால் பயன் ஏது?
பெருந்தலைவர் காமராஜுக்கு அவர் மறைந்த பின்புதான் 1976-ல் "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. இதேபோல காந்திய முனிவரும், சமூக சீர்திருத்தவாதியுமான வினோபா பாவேவுக்கு 1983-லும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு 1988-லும், சட்டமேதை டாக்டர் அம்பேத்கருக்கு 1990-லும், இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோருக்கு 1991-லும், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அபுல் கலாம் ஆஸôத்துக்கு 1992-லும், ஜெயபிரகாஷ் நாராயணுக்கு 1999-லும் "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. வாழும் காலத்தில் அவர்களை அங்கீகரிக்கவும், ஊக்கப்படுத்தவும் இந்த விருது பயன்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இதையடுத்து, அவருக்கு "பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.
உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் உள்ளிட்ட பல தரப்பினரிடமிருந்தும் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சச்சின் மிகவும் எளிமையானவர். கிரிக்கெட்டுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர். பணமும் கவர்ச்சியும் மிகுந்த டி20 சர்வதேசப் போட்டிகளையும் தியாகம் செய்தவர். மிகப்பெரிய சாதனைகளைச் செய்தபோதும் சாதாரண மனிதராகவே இருந்து வருகிறார். அவருக்கு எதிராக கிரிக்கெட் விளையாடியதை என்னுடை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன் என, சச்சினின் சாதனை குறித்து புகழாரம் சூட்டுகிறார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா.
""அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் முன்மாதிரியாக இருப்பவர். தனிப்பட்ட சாதனைகளுக்காக ஆடுபவர் அல்ல. அதேபோல சுயநலமிக்க வீரரும் அல்ல'' பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியவை இவை.
இவ்வாறு ஒருசாரார் சச்சினைப் பாராட்டியும், "பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தபோதிலும், அதில் மாற்றுக் கருத்து கொண்டிருப்போரும் உள்ளனர்.
எது எப்படியோ, கிரிக்கெட் ரசிகர்களிடம் தனது அபார ஆட்டத்தின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சச்சின். தற்போது அவர் படைத்துள்ள சாதனை யாரும் முறியடிக்க முடியாத சாதனையாகவே கருதப்படுகிறது. இதுதவிர ரன் குவிப்பு, சதம் உள்ளிட்ட 70 வகையான சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.
விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை, உலக அரங்கில் நமது கெüரவத்தை நிலைநாட்டும் வகையில் நடத்தப்பட்டதுதான் காமென்வெல்த் போட்டிகள். இதற்கு ஆன செலவு ரூ. 70 ஆயிரம் கோடி. இதில் நடைபெற்ற ஊழல் ரூ. 8 ஆயிரம் கோடி எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செலவின்றி, ஊழலின்றி விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்குப் பெயர் பெற்றுத் தந்துள்ள சச்சினின் சாதனையைப் பாராட்டி அவருக்கு விருது வழங்குவதே பொருத்தம்.
வேறு நாடுகள், சச்சினை அழைத்து பாராட்டு விழா நடத்தும் முன்பு, நாமே அவருக்குப் "பாரத ரத்னா' விருதுவழங்கி விழா நடத்தினால் அது நமக்குக் கெüரவம். ஏனென்றால் சிவாஜி என்ற அற்புத நடிகருக்கு 1995-ல் பிரான்ஸ் நாட்டில் விழா எடுத்து "செவாலியே' பட்டம் வழங்கினர். அதன் பின்புதான் தமிழகத்தினர் விழித்துக் கொண்டு 1996-ல் விழா நடத்தி தாதாசாகேப் பால்கே விருதை வழங்கினர். வந்தோர், போனோருக்கெல்லாம் வாரி வழங்கப்பட்ட கலைமாமணி விருதும் அவர் புகழின் உச்சியிலிருந்தபோது அவருக்குக் கிடைக்கவில்லை. 1997-ல் தான் அவர் கலைமாமணி விருதே பெற்றுள்ளார்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர படைப்புலகில் உள்ள நாஞ்சில் நாடனுக்கும் அண்மையில்தான் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. எனவேதான் விருது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் "காலம் கடந்த அங்கீகாரம்' என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, துறை ரீதியாக ஒருவர் உச்ச கட்டத்தில் உள்ளபோதே விருதுகள் அவர்களைச் சென்றடைய வேண்டும். இந்நிலையில் எத்தனையோ விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளின் திறமைக்கு உரிய நேரத்தில் விருது கிடைக்காத நிலை தொடர்கிறது. எனவே, விருதுகளுக்கு மதிப்புக் குறையாமல் இருக்க வேண்டுமானால், தகுதியானவர்களுக்கு காலம் கடத்தாமல் உரிய நேரத்தில் விருதுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...