சுற்றுலாவும் சுற்றுச்சூழலும்...?
சுற்றுலா என்றவுடன் நினைவுக்கு வருவது மலை வாசஸ்தலங்கள்தான். இன்றைய நிலையில் சுற்றுலா செல்ல விரும்பும் ஒருவரின் பயணத் திட்டத்தில் கண்டிப்பாக ஏதாவது ஒரு மலைவாசஸ்தலம் இடம்பெற்றே தீரும். அந்த அளவுக்கு


சுற்றுலா என்றவுடன் நினைவுக்கு வருவது மலை வாசஸ்தலங்கள்தான். இன்றைய நிலையில் சுற்றுலா செல்ல விரும்பும் ஒருவரின் பயணத் திட்டத்தில் கண்டிப்பாக ஏதாவது ஒரு மலைவாசஸ்தலம் இடம்பெற்றே தீரும். அந்த அளவுக்கு மலைவாசஸ்தலங்கள் மக்களைக் கவர்ந்துள்ளன. பசுமையான புல்வெளிகள், மலை முகடுகள், கண்களைக் கவரும் பூக்கள், விண்ணை முட்டி நிற்கும் மரங்கள் என நிறைந்து இருக்கும் இயற்கைக்கு மனதைப் பறிகொடுக்காதவர்கள் இருக்க முடியாது.
இதன் காரணமாக சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 16 சதவிகிதம் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இதில் சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து வருகிறது.
2009-ம் ஆண்டில் மட்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை தெரிவிக்கிறது. 2010-ம் ஆண்டு இது 35 சதவிகிதம் வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும் சுற்றுலாத் துறை கூறுகிறது.
மலைகளின் இயற்கையின் இயல்பான தோற்றத்தைக் காணவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இயற்கை தனது இயல்பான தோற்றத்தை இழந்து வருகிறது.
மக்கள்தொகைப் பெருக்கத்தைப் போலவே, சுற்றுலா பயணிகளின் பெருக்கத்தாலும், கோடைக்காலத்தில் மலைவாசஸ்தலங்கள் நோக்கி சுற்றுலா பயணிகளின் படையெடுப்பாலும் மலைகள் தங்களது அடையாளங்களை மெதுவாக இழக்கின்றன. முன்பு கோடை காலத்தின்போது மட்டுமே சுற்றுலா பயணிகளின் முற்றுகையால் மூச்சுத் திணறிய மலை வாசஸ்தலங்கள், இப்போது ஆண்டு முழுவதும் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் மலைகள் தனக்குரிய தன்மையை இழந்து வருகின்றன.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால், சுற்றுச்சூழல் மாசுபடுவது கட்டுப்படுத்த முடியாமல் சென்று கொண்டிருக்கிறது.
பல ஆண்டுகளாக இப் பிரச்னை இருந்தும், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அண்மைக்காலமாக சுற்றுச்சூழல் மாசுபடுவதன் பாதிப்பை மனிதனும், அரசும் நேரிடையாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, இப்போது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த பேச்சு முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கியமான மலை வாசஸ்தலங்களாகக் கருதப்படும் உதகமண்டலம், கொடைக்கானல் இப் பிரச்னையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு சுற்றுலா தொழில்ரீதியாக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதே காரணமாகக் கூறப்படுகிறது. நாட்டில் பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிலாக இருக்கும் சுற்றுலாவால், அது ஏற்படுத்தும் பாதிப்பு எந்தத் தலைமுறைக்கும் அழிக்க முடியாத அளவுக்கு உள்ளது. தமிழகத்தில் உள்ள மலைவாசஸ்தலங்கள் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளை மட்டுமன்றி, வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்க்கின்றன.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், அதற்கு ஏற்றார்போல தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் பிரமாண்டமாகக் கட்டப்படுகின்றன. ஆனால், இவை எந்தவிதிமுறைக்கும் உள்பட்டு கட்டப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் தானாகவே மலைகளின் தோற்றங்கள் மாறுகின்றன. இதேபோல மலைகளுக்கு இடையே ஓடிவரும் நீரோடைகள், நீருற்றுகள், கால்வாய்கள் ஆகியவற்றின் போக்கும் மாறுகிறது அல்லது மாற்றிவிடப்படுகிறது.
இப்படிப்பட்ட பிரச்னையாலேயே மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுகிறது. இதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு உதகமண்டலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலச்சரிவைக் குறிப்பிடலாம்.
சுற்றுலாவால் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், இயற்கை இன்னலுக்குத்தான் உள்ளாகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகி வருகிறது. இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் பாலிதீன் பை, கோப்பைகள் மலையென குவிகின்றன. ஆனால் இவற்றை சுகாதார முறையில் அகற்றுவதற்கும், அழிப்பதற்கும்கூட உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை கட்டமைப்புகள் இல்லை.
இதன் விளைவாக அங்கு இயற்கை பாதிக்கப்படுவதோடு அங்கு வசிக்கும் வனவிலங்குகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்துக் கொள்ளும் கரிசனத்தையும், அக்கறையையும் சுற்றுச்சூழல் மீதும் சிறிதளவாவது எடுத்துக்கொண்டால்தான் எஞ்சியிருக்கும் இயற்கை வளமாவது மிஞ்சும். இல்லையெனில் எதிர்காலத்தில், இயற்கைக் காட்சிகளை புகைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலுமே காண முடியும்.
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலா பாதுகாப்புப் படை அமைத்திருக்கும் மாநில அரசு, சுற்றுச்சூழலை மேம்படுத்த எந்தவொரு படையையும் அமைத்ததாகத் தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவிகிதம் வனப்பகுதி இருக்க வேண்டும் என சுற்றுச்சூழல் துறை கூறுகிறது.
மொழிவாரியாக தமிழகம் பிரிக்கப்படும்போதே 17 சதவிகித வனப் பகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த வளத்தையும் காப்பதற்கு மாநில அரசு தவறியதன் காரணமாக, வனத்தின் அளவு ஒற்றை இலக்கத்தை வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி வருகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க, வனம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை இன்னும் மக்களிடம் முழுமையாக எடுத்துச் செல்வதற்குகூட அரசு தீவிர நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அடுத்த சந்ததியினருக்கு புதிதாக எதையும் உருவாக்கி வைக்க முடியவில்லை என்றாலும், இருப்பதையாவது பாதுகாத்து வைப்பதற்குரிய மனநிலையை மக்களிடம் அரசு ஏற்படுத்த வேண்டும். ஏதோ ஒரு சிலர் மட்டும் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதால், அவை பாதுகாக்கப்பட்டுவிடாது என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...