தேர்தல் வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றமே தீர்வு
2009 மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம், மாவேலிக்கரா தனித் தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கொடுங்குன்னில் சுரேஷை கேரள உயர் நீதிமன்றம் தகுதிநீக்கம் செய்து 26-7-2


2009 மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம், மாவேலிக்கரா தனித் தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கொடுங்குன்னில் சுரேஷை கேரள உயர் நீதிமன்றம் தகுதிநீக்கம் செய்து 26-7-2010-ம் நாள் தீர்ப்பளித்திருக்கிறது. (தினமணி செய்தி 27-7-2010)
தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள கொடுங்குன்னில் சுரேஷ் இதற்கு முன்பும் நான்குமுறை வெற்றிபெற்றவர். காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலர்களில் ஒருவராகவும் பதவி வகிக்கிறார். இவரது வேட்புமனுவில் இவர் சார்ந்துள்ளதாகச் சொல்லப்படும் ""செராமர்'' ஜாதி தாழ்த்தப்பட்டோர் ஜாதி அட்டவணைப் பட்டியலிலேயே (எஸ்சி) இல்லை என்று தேர்தல் வழக்குத் தொடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அனில்குமார் தனது தேர்தல் வழக்கில் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் எம்.பி. சுரேஷின் பெற்றோர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். சுரேஷின் பள்ளிஇறுதிச் சான்றிதழில் ""கிறிஸ்தவ செராமர்'' என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் ""இந்து செராமர்'' ஜாதியைச் சேர்ந்தவர் என்று நெடுமங்காடு கொட்டாரக்கரா வட்டாட்சியர் ஜாதிச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார். அது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துகொள்ள சுரேஷுக்கு கேரள உயர் நீதிமன்றம் ஒருமாத காலம் அவகாசம் கொடுத்திருக்கிறது.
சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் வழக்குகள் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்படுகின்றன.
முதலாவது, பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952-ம் ஆண்டிலிருந்து உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நடைபெற்ற தேர்தல் வழக்குகளின் தீர்ப்புகளை ஆய்வு செய்ததில் தெரியவரும் கசப்பான உண்மை அதிர்ச்சி அளிக்கக்கூடியது.
விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில வழக்குகளைத் தவிர, பெரும்பான்மையான வழக்குகளில், தவறான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றிபெற்ற வேட்பாளரின் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற பதவிக்காலம் முடிந்த பின்னர் தான் இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது - அறுவைச் சிகிச்சை வெற்றி! ஆனால், நோயாளி மரணம்?
""காலதாமதமாக வழங்கப்படும் நீதி - நீதி மறுக்கப்படுவதற்குச் சமம்'' என்பது நீதிமன்ற நிர்வாகப் பழமொழி! இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் நடைபெற்ற சில தேர்தல் வழக்குகளின் தீர்ப்புகளைச் சொல்லமுடியும்.
2004 மே மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கேரள காங்கிரஸ் தலைவர் பி.சி. தாமஸ் மூவாத்துப்புழா தொகுதியில் போட்டியிட்டு 2,56,411 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி.எம். வேட்பாளர் இஸ்மாயில் 2,55,882 வாக்குகள் பெற்று 529 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
தேர்தல் பிரசாரத்தில் ஜாதிவெறி அல்லது மதவெறியைத் தூண்டி அதன்மூலம் வெற்றிபெறுவது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தேர்தல் குற்றங்களில் மிகக்கடுமையான குற்றமாகும் (பிரிவு 123).
திட்டமிட்டு மதஉணர்வுகளைத் தூண்டித்தான் பி.சி. தாமஸ் வெற்றிபெற்றார். அதனால் அவரது தேர்தல் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்க வேண்டுமென்று சி.பி.எம். வேட்பாளர் இஸ்மாயில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். வேட்பாளர் பி.சி. தாமஸ் வெற்றிபெற போப்பாண்டவரும், அன்னை தெரசாவும் ஆசி வழங்குவது மாதிரியான காலண்டர்களும், டைரிகளும் பல்லாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
1999-ல் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் பி.சி. தாமஸ் சட்ட இணையமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், இன்றைய போப்பாண்டவர் வாட்டிகனில் பதவியேற்றார். அந்தப் பதவியேற்பு விழாவில் அரசின் பிரதிநிதியாகத் தான் சென்று கலந்துகொண்ட பெருமைகளை பி.சி. தாமஸ் துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு தொகுதி முழுவதும் வழங்கி மத உணர்வுகளைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டும் உயர் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.
2006 அக்டோபர் 31-ம் நாள் பி.சி. தாமஸ் தேர்தல் செல்லாது என்றும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி.எம். வேட்பாளர் இஸ்மாயில் வெற்றிபெற்றதாகவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
புகழ்பெற்ற வழக்கறிஞராகவும், மத்திய சட்ட இணையமைச்சராகவும் பதவி வகித்த அனுபவமுள்ள பி.சி. தாமஸýக்கு இந்த வழக்கை இழுத்தடிக்க யாரும் சொல்லித்தர வேண்டியதில்லையல்லவா? உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடைவிதிக்கப்பட்டது. பி.சி. தாமஸ் எம்.பி. பதவியில் நீடித்தார்.
2009 செப்டம்பர் 4-ம் நாள் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டது. 2009 மே மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு அடுத்த தேர்தலும் நடந்து முடிந்துவிட்டதால் வழக்கில் வெற்றிபெற்ற இஸ்மாயில் ஒருநாள்கூட எம்.பி. பதவி வகிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. தேர்தல் வழக்கில் தோற்பவர் வென்றதும், வென்றவர் தோற்றதுமான விந்தையைக் கண்டோம்.
தேர்தல் முறைகேடு செய்து வெற்றிபெற்ற பி.சி. தாமஸýக்கு என்ன தண்டனை? அவர் மூன்றாண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிடக்கூடாது என்று மட்டும் தேர்தல் கமிஷன் தீர்ப்பு அளித்துள்ளது. 2013-ல் அவர் மீண்டும் எம்.பி.யானால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், மக்களின் மறதிதானே இந்த மாதிரி அரசியல்வாதிகளுக்கு மூலதனம்!
சுப்பா என்ற காங்கிரஸ் பிரமுகர் அசாம் மாநிலத்தில் கோடீஸ்வரர். லாட்டரிச் சீட்டு அதிபர். மூன்று முறை காங்கிரஸ் கட்சி எம்.பி. அவர் இந்தியரே அல்ல என்றும், அவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அந்த நாட்டில் 1970-ல் நடந்த ஒரு கொலை வழக்கில் சிக்கி, பின்னர் தப்பியோடி இந்த நாட்டுக்கு வந்தவர் என்றும் கண்டுபிடித்துத் தகுதிநீக்கம் செய்ய நம் நாட்டின் உயர்ந்த புலனாய்வுத் துறையெனக் கருதப்படும் சி.பி.ஐ.க்கும் தேர்தல் கமிஷனுக்கும், நீதிமன்றங்களுக்கும் பத்தாண்டு காலம் தேவைப்பட்டது.
நமது தமிழ்நாட்டைப் பார்ப்போம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தனித் தொகுதியிலிருந்து அதிமுக வேட்பாளர் சந்திரா வெற்றி பெற்றார். பள்ளி இறுதிச் சான்றிதழில் சந்திராவின் பெயர் நான்சி புளோரா சந்திரா என்றும், அவர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்றும் பதிவாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் சட்டப்படி தேர்தலில் இடஒதுக்கீடு தகுதியை இழந்து விடுகிறார்.
சட்டமன்ற உறுப்பினர் சந்திரா இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவராக இல்லாத காரணத்தால் அவரது தேர்தல் செல்லத்தக்கதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் 2008-ல் தீர்ப்பு வழங்கியது. வழக்கம்போல் அவரது மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடைவிதித்துள்ளது. தீர்ப்பு வருவதற்குள் நிச்சயமாக அடுத்த தேர்தல் வந்துவிடும் என்று நம்பலாம்.
2009 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற ப. சிதம்பரம் (சிவகங்கை) மு.க. அழகிரி (மதுரை) நடிகர் ரித்தீஷ் (ராமநாதபுரம்) அதிமுக குமார் (திருச்சி) ஆகியோர் தேர்தல் செல்லாது என்று வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகியிருக்கின்றன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் சுமார் 3,50,000 வழக்குகள் தேங்கி இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் 38,750 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்தகால அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது மேற்படி நால்வர் வழக்குகளும் சென்னையில் முடியவே சுமார் நான்காண்டுகளாகலாம். பின்னர் இருக்கவே இருக்கிறது மேல்முறையீடும், உச்ச நீதிமன்றமும். 15-வது நாடாளுமன்றத்தின் இறுதிக்காலம்வரை இவர்கள் பதவியில் நீடிப்பதற்கான வாய்ப்புகளே பிரகாசமாக இருக்கின்றன.
வழக்கமான நீதிமன்ற காலதாமதத்தைத் தவிர்க்க முடியுமா? முடியும். பொதுமக்களின் நலன்கருதி சிலவகையான வழக்குகளைச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விரைவில் தீர்வுகாண பிரிவு 322 பி-ன் மூலம் மாநிலச் சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கியிருக்கிறது. ஆனால், அந்த அதிகாரத்தை மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்த முன்வருவதில்லை.
தேர்தல் வழக்கு என்பது மேம்போக்காகப் பார்த்தால் இரண்டு தனிநபர்களுக்கிடையில் நடப்பதுபோல் தோன்றலாம். தேர்தலில் தில்லுமுல்லுகள் செய்து, ஊழல் செய்து, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி பெறுபவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி, விரைவாக வழக்குகளை முடித்து, தவறு செய்பவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுப்பது சமூகம் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்னையாகும்.
தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றியடைந்தோர் நீண்டகாலம் பதவி சுகத்தை அனுபவிப்பதைத் தடுக்கவும், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் போக்கைத் தடுத்து நிறுத்தவும் ஒரே வழி அரசியல் சட்டம் பிரிவு 323 பி வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ""சிறப்பு நீதிமன்றம்'' அமைப்பதே!
கட்டுரையாளர்: (இந்திய வழக்கறிஞர்கள் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...