திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இயந்திரமாகும் குழந்தைகள்!

குழந்தைகள், இன்று விளையாட்டு என்றால் என்னவென்று தெரியாமல் நான்கு சுவருக்குள், கணினியுடன் பொழுது போக்குவது என்ற நிலைக்குச் சுருங்கிவிட்டனர். பெற்றோர் தாங்கள் விரும்பும் பள்ளியில் குழந்தையைச் சேர்க்க வே

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:26 pm

ஜெயப்பாண்டி

குழந்தைகள், இன்று விளையாட்டு என்றால் என்னவென்று தெரியாமல் நான்கு சுவருக்குள், கணினியுடன் பொழுது போக்குவது என்ற நிலைக்குச் சுருங்கிவிட்டனர்.

பெற்றோர் தாங்கள் விரும்பும் பள்ளியில் குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக எல்.கே.ஜி. சேருமுன்பே இரவுபகலாக படிக்க வைப்பதைப் பார்க்க முடிகிறது.

இதைப்படி, அதைப்படி, இப்படிச் சொல்லிக்காட்டு... என குழந்தைகளை பாடாய்படுத்தி குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்கின்றனர். அந்தப் பள்ளிகளும் காலை 7 மணிக்கெல்லாம் ஆரம்பமாகிவிடுகின்றன.

இதற்காக பாதித் தூக்கத்தில் குழந்தைகளை மிரட்டி எழுப்பும் பெற்றோர், அவர்கள் அலறி அழும் நிலையில் குளிப்பாட்டி, உடையை உடுத்தி அவசர, அவசரமாக உணவை வாயில் திணித்து பள்ளியில் விட்டுவிடுகின்றனர்.

மிரட்டும் வகுப்பறைகளில் விழித்து, உருட்டும் விழிகளோடு வரும் ஆசிரியர்களுக்குப் பயந்து பாடத்தை மனனம் செய்யும் கட்டாயத்துக்கே குழந்தைகள் தள்ளப்படுகின்றனர்.

எனவே "விடிந்தால் பள்ளி, சூரியன் மறைந்தால் வீடு'' என வளரும் குழந்தைகள் சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியும் திறனை இழந்துவருகிறார்கள் என்பதே உளவியலாளர்களின் கருத்து.

குழந்தைகள் பாடம் படிக்கிறார்களா? என அறிவதில் ஆர்வம் காட்டுகிற பெற்றோர், குழந்தைகளது உடல்நலம், மனநலம் சரியாக உள்ளதா? என்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை என்பதும் கல்வி ஆய்வாளர்களது கருத்தாகும்.

குழந்தைகள் காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்படும்போது பெயரளவுக்கு சாதாரண டாக்டர்களிடம் காட்டி, அவர்களை ஓய்வு எடுக்கக்கூட விடாமல் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் மாநிலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகக் கல்வித் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளில் 38.82 லட்சம், நடுநிலைப் பள்ளிகளில் 62.30 லட்சம், உயர்நிலைப் பள்ளிகளில் 19.16 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர்.

இவர்களில் 6}ம் வகுப்பு முதல் 8}ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு கடந்த ஓராண்டாக கண்பரிசோதனை மேற்கொண்டதில் 6% பேருக்கு பார்வைக் கோளாறு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், இருதயக் கோளாறு உள்ளிட்ட பல உடல்நலக் குறைபாடுக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவதிப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

ஊட்டச்சத்துக் குறைபாடே குழந்தைகளது உடல்நலக் குறைவுக்கு முக்கிய காரணம் எனக் கூறும் மருத்துவர்கள், கீரை, காய்கறி உணவுகளை உண்ணும் குழந்தைகளது எண்ணிக்கையும் குறைந்துவருவதாகக் கூறுகின்றனர்.

பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை காலையில் சாப்பிடக்கூட விடாமல் பள்ளிக்கு அனுப்புவதுடன், மதிய நேர சாதத்தை தயிரில் பிசைந்தே கொடுத்துவிடுகின்றனர்.

அத்துடன் "நொறுக்குத்தீனி' என்ற பெயரில் காரசேவ், மிக்சர், பிஸ்கட், சாக்லெட் ஆகியவற்றை கொடுத்தனுப்புகின்றனர்.

இதில் நொறுக்குத் தீனியையே பெரும்பாலான குழந்தைகள் பிரதான உணவாக்கிவிடுகின்றனர். இதனால் அவர்களது சத்துக்குறைபாடு தவிர்க்கமுடிவதில்லை.

மாலையில் டியூஷன், வீட்டுப்பாடம் என நேரம்போகும் நிலையில், மறுநாள் அதிகாலையில் எழுந்திருக்கவேண்டும் என்பதற்காகவே இரவில் குழந்தைகளை விரைவில் தூங்கவைக்கின்றனர் பெற்றோர்.

பள்ளியில் என்ன நடந்தது?, அதை குழந்தை எப்படி எதிர்கொண்டது?, வகுப்பறையில் குழந்தைகளது மனநிலை எப்படி இருந்தது? உடல்நலம் எப்படி இருந்தது? என பெரும்பாலான பெற்றோர்கள் கேட்பதில்லை.

ஆனால், பெற்றோர்கள் இதுபோன்ற கேள்விகளை நம்மிடம் கேட்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் உள்ள குழந்தைகள் அது நிறைவேறாத நிலையில் பெருத்த ஏமாற்றத்துடனே வளர்கின்றனர்.

குழந்தை நன்றாக படித்து மற்ற குழந்தைகளைவிட அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையுடனே பெற்றோர் செயல்படுகின்றனர்.

இதுபோன்ற காரணத்தால் உடல்நலக் கவனிப்பின்றி வளரும் குழந்தைகள் பள்ளி முக்கியத் தேர்வுகளின் போது உடல்நலம் பாதிக்கப்படுவதும், தேர்வு அறைகளில் மயங்கிவிழுந்து தேர்வை எழுதமுடியாத நிலைக்கு தள்ளப்படுவதும் அதிகரித்து வருகிறது.

கல்வியை மட்டுமே முக்கியமாகக் கொண்டு படிக்கும் குழந்தைகள், பின்னர் வாழ்க்கையில் பெரிய பதவிக்கு வந்தாலும், அவர்களால் சக மனிதர்களது சுக துக்கங்களை எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை; அதனால், அவர்களால் பிரச்னைகளைத் தீர்வுகாணவும், அடுத்தவருக்கு உதவவும் முடிவதில்லை. விதிமுறைகளின்படி செயல்படும் இயந்திர மனிதன் போலவே அவர்கள் செயல்படுகின்றனர்.

குழந்தைகள் தெய்வத்தைப் போன்றவர்கள். அந்த தெய்வங்கள் நமது ஆசைகளை, கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என நாம் நினைத்தால், தெய்வங்களுக்கு உரியவற்றையும் குறையின்றி செயல்படுத்துவது அவசியம்தானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.