திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

எங்கே செல்கிறோம்...?

மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 16-ம் தேதி பகலில் தெரிந்துவிடும் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்று. தலைவர்களின் சூறாவளிச் சுற்றுப் பயணங்கள், வேட்பாளர்களின் புயல் பிர

News image
Updated On :25 டிசம்பர் 2023, 1:57 pm

சா. ஜெயப்பிரகாஷ்

மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 16-ம் தேதி பகலில் தெரிந்துவிடும் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்று.

தலைவர்களின் சூறாவளிச் சுற்றுப் பயணங்கள், வேட்பாளர்களின் புயல் பிரசாரங்கள் எல்லாவற்றுக்கிடையேயும் "வழக்கம்போலவே' வாக்குகளை விலைபேசும் பணி இவையெல்லாம் நடந்தேறி ஒரு முடிவுக்கும் வந்துவிட்டது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாக்காளர்களுக்குப் பணமும், பொருளும் அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது என்ற தகவல் கடந்த வாரமே வாக்காளர்களைப் பரபரப்பாக்கிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் அமைத்துள்ள குழு எந்த இடத்திலும் இவற்றைக் கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை.

ஆனால், மற்றொரு சம்பவமும் எல்லாப் பகுதிகளிலும் நடைபெற்றது. அதிமுக பணம் கொடுத்தால் பிடிக்க திமுக குழு, திமுக பணம் கொடுத்தால் பிடிக்க அதிமுக குழு அமைக்கப்பட்டது.

எதற்காகப் பணம் கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி அரசியல்வாதிகளிடத்தில் இல்லை. அத்தனை மோசமாகவா இதுவரை நாம் ஆட்சி நடத்தினோம்? என்று சுயபரிசீலனை செய்து கொள்ளவும் தயாரில்லை.

ஆட்சி மோசமாக இருந்தால் வாக்குகள் நமக்குத்தானே என்று எதிர்க்கட்சியும் நம்பவில்லை. வாக்குகள் சலவைத் தாள்களால் விலை பேசப்படுகின்றன.

நிரம்ப வாக்குகளைப் பெறுதல் என்பதே பணம் கொடுத்துப் பெறுதல் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. காலம்காலமாக நடந்து வரும் ஒரு முறைதான் இந்தப் பேரம் என்று யாரும் வாதிட வேண்டாம். தொடர்ந்து செய்துவந்தாலும் தவறு தவறுதான்.

முன்னைவிடவும் இந்தப் பேரம் இப்போது சந்தை நிலவர மாற்றங்களைப்போல அதிகபட்ச வீச்சோடு இருக்கிறது.

சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போது எதிர்தரப்பினர் யாரேனும் அவர்களைத் தடுத்தால், பணம் பெறும் வாக்காளர்களே தடுப்பவர்களைத் தடுப்பதும், தாக்குவதும் நடந்து வருகிறது.

இவையெல்லாம் நாம் எங்கே செல்கிறோம்? என்ற கேள்வியைத்தான் எழுப்புகின்றன. இந்த ஜனநாயக நாட்டில் இனி எந்தக் காலத்திலும் சாமானியர்கள் போட்டியிடவே முடியாது என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.

முதலீடு செய்து தொழிலில் ஈடுபடுபவர்கள் அந்தத் தொழிலில் லாபம் ஈட்டுவதை எத்தனை நியாயமான ஒன்றாகப் பார்ப்பார்களோ, அதேபோலத்தான் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதும்.

"சும்மாவா போட்டீங்க, போங்க, போங்க' என்று பொதுமக்களைப் பார்த்து ஏளனம் செய்த பல மக்கள் பிரதிநிதிகளை பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.

இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான் இப்போதும் நமது வாக்குகள் விலை பேசப்படுகின்றன. இதை சகிப்புத் தன்மை என்று மட்டுமே சொல்லிவிட முடியுமா? என்ற கேள்வியும் உண்டு.

"ஓசியில் கிடைத்தால் எனக்கொன்று, என் சித்தப்பனுக்கு ஒன்று' என்ற நிலை நம் வாக்காளர் மத்தியில் வலுவாகத் திணிக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. "வீட்டில் 4 ஓட்டுகள், மறந்துவிட வேண்டாம்' என்று அரசியல்வாதிகளைப் பார்த்து குடும்பத்தலைவரே நினைவூட்டும் நிலை வந்துவிட்டது.

ஜனநாயக வானில் மோசமான கருமேகங்கள் சூழ்ந்துள்ளன; ஒரு காலத்திலேனும் இவை மறையும் என்று கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் தகர்ந்து வருகிறது.

இவற்றுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியது அரசியல் கட்சிகள்தான். ஆனால், அவை எந்தக் கவலையும் இன்றி மேலும் மேலும் தவறுகளைப் பட்டியலிட்டுச் செய்து வருகின்றன. எனவே, ஜனநாயக உரிமையை நல்ல விலைக்கு விற்று வரும் வாக்காளர்கள்தான் குற்றவாளிகள்.

பழைய படம் ஒன்றில் எம்ஜிஆர் கேட்பார். "உனக்கு அவர்கள் கொடுக்கும் தொகை எத்தனை நாள் செலவுக்கு வரும்?' பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் அன்றாடங்காய்ச்சி சொல்லுவார்- "ரெண்டு மூணு நாளைக்கு ஊத்திக்க வரும் தலைவரே'.

"இரண்டு முன்று நாளைக்கு இதுபோதும். காலம்பூராவும் என்ன செய்வது? 5 ஆண்டுகளுக்கும் நமக்கு சோறு போடும் வகையில் திட்டங்களைக் கொடுப்போருக்கு ஓட்டுப் போடலாமே?' என்பார் எம்ஜிஆர்.

இந்த வசனம், உரையாடல் இப்போது எல்லோருக்கும் தேவைப்படுகிறது. வாக்குகளை காசுக்கும் விற்க வேண்டாம். அது காசுக்கு விற்கும் பண்டமும் அல்ல. அது நமது உரிமை. முடிந்தால் நல்லவராகத் தெரிபவருக்குச் செலுத்துவோம். அதுவும் முடியாவிட்டால் வாக்களிக்க விரும்பவில்லை என்றாவது தெரிவிப்போம்.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு குழு, மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்' என்ற அடிப்படை அழுகிப் போயிருக்கிறது.

ஏனென்றால், இங்கு பெரும்பாலானோர் பணத்தாலும், அதிகாரத்தாலும் தேர்வு செய்யப்படுகின்றனர். அதனாலேயே அவர்கள் மக்களுக்காகப் பணியாற்றுவதும் இல்லை; மீண்டும் அதே பணத்துக்காகவும், அதிகாரத்துக்காகவுமே பணியாற்றுகின்றனர்.

15-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அடுத்த தேர்தலிலாவது விழிப்புணர்ச்சி ஏற்பட்டு மாற்றம் வருமா? எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்தானே மனித இனத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. குழப்பத்திலிருந்து தானே தெளிவு பிறந்தாக வேண்டும்.

எங்கே செல்கிறோம்? என்பதை நாமெல்லாம் சிந்திக்கத் தொடங்கினால், நல்லதொரு மாற்றம் நாட்டுக்கு நிச்சயம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.