‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சிறைப் பிரதமர்!

கொடிய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்குக்கூட பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதில்லை. ஆனால், நாட்டில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்று போராடியதற்காக சுமார் 15 ஆண்டுகள் சிறையிலேய

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:13 pm

எஸ். ராஜாராம்

கொடிய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்குக்கூட பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குமேல் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதில்லை. ஆனால், நாட்டில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்று போராடியதற்காக சுமார் 15 ஆண்டுகள் சிறையிலேயே வைக்கப்பட்டிருக்கிறார் மியான்மர் நாட்டின் ஜனநாயக போராளி ஆங்சான் சூகி.

  மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், 1990-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங்சான் சூகியின் தேசிய ஜனநாயக முன்னணி கட்சி வெற்றி பெற்று, ஆங்சான் சூகி பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  ஆனால், ராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க மனமின்றி, ஏதேதோ காரணங்களைக் கூறி ஆங்சான் சூகியை வீட்டுச் சிறையில் வைத்தனர்.

  அன்றுமுதல் இன்றுவரை சுமார் 15 ஆண்டுகள் சிறையில் அடைபட்டுள்ளார் அவர். பொதுமக்கள், கட்சியினர், பத்திரிகையாளர்கள் என யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இரண்டு உதவியாளர்களுடன் சிறைவைக்கப்பட்டுள்ளார்.

  சர்வதேச நெருக்கடி ஏற்படும்போது மட்டும் அவரை விடுவிப்பதும், பின்னர் மீண்டும் சிறையில் வைப்பதுமாக உலகையே ஏமாற்றி வருகின்றனர் மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்கள்.

  ஆங்சான் சூகியின் கட்சியினருக்கு எதிராகவும் ராணுவ ஆட்சியாளர்கள் அடக்குமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். அமைதி ஊர்வலம் நடத்தினால்கூட கைதுதான்.

   கடந்த ஆண்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக புத்த பிக்குகள்கூட கிளர்ந்தெழுந்து வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தினர். அவர்களையும் இரும்புக் கரங்களால் அடக்கியது ராணுவம்.

  தற்போது ஆங்சான் சூகியின் சிறைக்காலம் மே மாதத்துடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் அவரைச் சிறைவைக்க திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர் ராணுவ ஆட்சியாளர்கள்.

  ஆங்சான் சூகி சிறை வைக்கப்பட்டுள்ள ஏரிக்கரையோர வீட்டுக்குள் அமெரிக்கர் ஒருவர் அழையா விருந்தாளியாக மே 3-ம் தேதி நுழைந்துவிட்டார். அவரை சூகி வீட்டுக்குள் அனுமதித்ததுதான் குற்றமாகப் போய்விட்டது ராணுவ ஆட்சியாளர்களுக்கு. வீட்டுச்சிறை விதிகளை ஆங்சான் சூகி மீறிவிட்டதாகக் கூறி சிறைக்காவலை நீட்டிக்க முடிவு செய்துள்ளனர்.

  இந்த முறையாவது அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் ஜனநாயக ஆர்வலர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

  மியான்மரின் இச் செயலுக்கு அமெரிக்கா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. ஆங்சான் சூகியை விடுதலை செய்து மியான்மர் ஜனநாயக பாதைக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ்.

  உலக நாடுகளின் எந்தக் குரலுக்கும் மியான்மர் இதுவரை செவிசாய்க்கவில்லை.

  ஆங்சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் என, 2007-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ், பில்கிளிண்டன், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மார்க்கரெட் தாட்சர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் 59 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களுக்கு அனுப்பினர். ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனும் இதை வலியுறுத்தியுள்ளார்.

  அமைதிக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றான தங்கப் பதக்கம், கனடாவின் கௌரவ குடியுரிமை என உலகமே ஆங்சான் சூகியை கொண்டாடினாலும், சொந்த நாட்டு அரசு அவரை சிறையில் அடைத்து அற்ப மகிழ்ச்சி கொள்கிறது.

  மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் சீனா, அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது.

  ஆனால், இதை மட்டுமே ஒரு காரணமாகக் கூறி ஆங்சான் சூகியின் சிறைவாசம் நீடிப்பதை நியாயப்படுத்திவிட முடியாது. ஈரான், வடகொரியாவுக்கு எதிரான ஐ.நா.வின் நிலைப்பாட்டை மியான்மருக்கு எதிராகவும் எடுக்கச் செய்யும் கடமை உலக நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு உண்டு. தெற்காசிய பிராந்தியத்தில் வலிமையாக உள்ள இந்தியாவும் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.

  ஆங்சான் சூகியின் 62-வது பிறந்த நாளையொட்டி, இந்திய நாடாளுமன்றம் சார்பில் அவருக்கு 2007, ஜூன் 13-ம் தேதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகள்..."நீங்கள்தான் மியான்மரின் உண்மையான பிரதமர்'. ஆம், சிறையிலிருந்து மக்கள் மனங்களை ஆட்சி செய்கிறார் ஆங்சான் சூகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.