எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இலக்கியம் போற்றும் "அமைச்சு'

நாட்டை நலம்பெறச் செய்வதும், பாருக்குள் சிறந்த நாடெனப் பாராட்டச் செய்வதும் அந்நாட்டில் அமைந்த அரசேயாகும். அரசின் கடமை மக்களைக் காப்பது.  அரசைச் சிறப்புடையதாக்குவன படை, குடி, கூழ், அமைச்ச

News image
Updated On :26 டிசம்பர் 2023, 6:40 am

தஞ்சாவூர் கவிராயர்

நாட்டை நலம்பெறச் செய்வதும், பாருக்குள் சிறந்த நாடெனப் பாராட்டச் செய்வதும் அந்நாட்டில் அமைந்த அரசேயாகும். அரசின் கடமை மக்களைக் காப்பது.

 அரசைச் சிறப்புடையதாக்குவன படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் எனும் ஆறாகும். அவற்றுள் நடுவணதாகியது அமைச்சு. அமைச்சே அரசைத் தாங்கி நிறுத்தும் ஆணிவேர் என்பது மிகையன்று.

அரசனோடியங்கி, நாட்டினை நல்வழிப்படுத்தி நலம்காக்கும் அருந்திறல் படைத்தவரை "அமைச்சர்' என்று முன்னோர் குறித்தனர். இதனை "அமாத்தியர்' எனும் வடசொல் திரிபென்பர் சிலர். "அமாத்தியர்' என்பதற்குப் பக்கமிருப்போர் என்பது பொருள். அரசனுக்கு அருகில் இருப்போர் பலராயினும் உறுதி உரைத்தற்கு உரியவர் அமைச்சரே. அமைச்சரின் தன்மை, ஆற்றல், பண்பு நலன், கல்வி போன்ற நற்கூறுகளைப் பற்றிப் பண்டைய நூல்கள் விரிவாக விரித்துரைத்துள்ளன.

திருவள்ளுவர் பொருட்பால் அமைச்சியலில் அமைச்சு முதல் அவையஞ்சாமை ஈறாகப் பத்து அதிகாரங்களிலும் அமைச்சருக்கு அமைய வேண்டிய பண்புகளை விவரித்துள்ளார்.

 ""கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

 அருவினையும் மாண்டது அமைச்சு''

 (குறள்.631) என்பது அமைச்சைப் பற்றிய திருவள்ளுவரின் திட்டவட்டமான கருத்தாகும். அமைச்சன் என்போன் மற்றவர் நலத்தில் மனங்கொண்டவனாய், கண்ணோட்டம் உள்ளவனாய் உயர்வாழ்வும், ஆற்றலும், சால்பும், புகழும் உடையவனாய்த் திகழ்பவனே என்பதை,

 ""மற்றவன் மனமும் கண்ணும்

 வாழ்க்கையும் வலியும் சால்பும்

 அற்றமில் புகழும் கோலும்

 ஆபவர் அமைச்சர் அன்றே''  (பா.244)  எனும் சூளாமணிப் பாடல் விளக்குகிறது.

மனையரசில் தலைவனும் தலைவியும் இரு கண்களாகத் திகழ்வது போல, நாட்டரசின் இரு கண்களாவோர் மன்னனும் மதியுடை அமைச்சனும். நாடாளும் அரசை வண்டி என புலவர் ஒருவர் வருணித்தார். அதனைச் செங்கோல் தடத்தில் செலுத்தவல்ல காளைகள் அரசனும் அமைச்சுமே என்றார்.

 ""கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்

 காவற் சாகாடு உகைப்போன் மாணின்

 ஊறுஇன் றாகி ஆறு இனிது படுமே''  (புறம்-185)  என்று அரச வண்டியைப் பற்றி பண்டைப் புலவன் தொண்டைமான் இளந்திரையன் பாடினான்.

நாட்டின் நலம் காக்கும் அமைச்சன், பொய்யாகவும் செல்லமாகவும் பிள்ளைகளை மருட்டும் தாயர் போலவும், உண்ணாக் குழந்தைக்கு உவந்து அமுதூட்டும் தாயாகவும் இருக்க வேண்டுமெனப் பழமொழி எனும் அறநூல் அறிவுறுத்துகிறது.

காதோரத்தில் நரைத்த முடி கண்ட காவலன் தசரதன், நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ராமனிடம் தர எண்ணி, மந்திரச் சுற்றத்தைக் கூட்டினான். மந்திரக் கிழவர் வசிட்டர் வந்தார். சுமந்திரன் தலைமையில் அமைச்சர்கள் திரண்டனர். அமைச்சர்கள் அறுபதினாயிரம் எனினும் அனைவரும் ஒருமை உளத்தவர்; நிகழ்ந்ததைக் கொண்டு நிகழப்போவதை அறியும் திறத்தினர்; ஊழ்வினையால் நாட்டுக்குத் தீங்கேற்படினும், அதனையும் மாற்றி அமைக்கும் ஆற்றலுடையோர்; அரிய நூலறிந்தவர்; கவரிமா நிகர்த்தவர்; காலம், இடம், கருவியறிந்து நூலறிவால் நுனிதின் நோக்குபவர்; அறவினைப் பற்றுடையோர்; ஒழுக்கம் தவறா உத்தமச் சான்றோர்; அரசுக்குப் புகழ்தரும் அரும் வினையாற்றுவோர் எனத் தசரதனின் அமைச்சர்களைப் பற்றி,

 ""காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற

 நூல்உற நோக்கி தெய்வம் நுனித்து அறம்குணித்த மேலோர்

 சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்து கொண்டு

 பால்வரும் உறுதியாவும் தலைவற்குப் பயக்கும் நீரார்''

 (கம்.மந்.பா.7)

 என்பது கம்பர் காட்டும் சொற்சித்திரம்.

அமைச்சர் குழு அறவழி ஓம்பினால், தலைமை தகைமை பெறும்; தளர்ச்சி நீங்கும்; மக்கள் மகிழ்ச்சி கொள்வர்; நாடு நலம் பெறும். அமைச்சரின் ஆற்றல் அளவிடற்கரியது. ஒல்காத் துணையாய் நின்று தலைமைக்கு நல்வினையாற்றுவோர் அமைச்சர்கள். ஆயிரம் ஒளிக்கற்றைகளுடன் ஒளிரும் கதிரவனையும் பாம்பு விழுங்கியது போன்று ஆயிரம் கண்ணுடன் நல்லறிவு பெற்ற இந்திரனே ஆயினும் அவருக்கு அமைச்சனே வழிகாட்டும் வல்லமை உடையவனாகத் திகழ்வான் என்பதை,

 ""ஆயிரம் கதிருடை அருக்கன் பாம்பினால்

 ஆயிரம் கதிரொடும் விழுங்கக் கண்டுகொல்

 ஆயிரம் கண்ணுடை அமரர் கோனும் ஓர்

 ஆயிரம் அமைச்சர்சொல் வழியி னாயதே''  (பா-6)

 என்று சாந்தி புராணம் சுட்டிக் காட்டுகிறது.

 மக்கள் சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியின் மன்னராட்சி தற்போது மக்களாட்சியாக மாறியுள்ளது. வள்ளுவர் அரசியலுக்குக் கூறும் அறிவுரை அனைத்தும் இருவகை ஆட்சிக்குப் பொருந்துவதே. அமைச்சருக்கான அஞ்சாமை, அறிவுடைமை, உயர்குணம், மக்களைப் புரத்தல், முயற்சி எனும் ஐந்தும் பிறவும் மண்ணுள்ளளவும் பேணப்பட வேண்டிய பண்புகள் தாமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.