உலகைக் காக்கும் உரிமை
"தேசத்தில் வறட்சி ஏற்படும் அபாய நிலை இல்லை' என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். இதிலிருந்தே நாட்டில் வறட்சியும், அதனால் உணவுப் பஞ்சமும் உருவாகும் அறிகுறி ஏற்பட்டுள்ளது என்பது தெரி


"தேசத்தில் வறட்சி ஏற்படும் அபாய நிலை இல்லை' என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். இதிலிருந்தே நாட்டில் வறட்சியும், அதனால் உணவுப் பஞ்சமும் உருவாகும் அறிகுறி ஏற்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கமான அளவைவிடக் குறைவாகத்தான் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இது வேளாண்மை சாகுபடியில் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும்; இதனால் பொருளாதாரத்திலும் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
மொத்தம் சாகுபடி செய்யக்கூடிய 14 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பில் 60 விழுக்காடு மழைநீரையே நம்பி இருக்கிறது. பருவமழை ஜூலையில் 93 விழுக்காடும், ஆகஸ்டில் 101 விழுக்காடும் பெய்யும் என்று "வானிலை ஆய்வு' கணித்துள்ளது. இது சரியாக அமைந்தால் வறட்சி பற்றிய கேள்விக்கு இடமில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பருவமழை குறிப்பிட்ட காலத்தில் பெய்யவில்லை. இதனால் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணையும் திறந்துவிடப்படவில்லை. கர்நாடகமும் கைவிரித்து விட்டபடியால் காவிரியில் மேல்வரத்து நீரும் வரவில்லை. இதனால் சோழநாட்டில் குறுவை சாகுபடி இல்லை என்று ஆகிவிட்டது; சம்பாவுக்காவது தண்ணீர் கிடைக்குமா? இதுதான் இப்போதைய கேள்வி.
இந்தக் கேள்விக்குப் பதில் கூறுவார் இல்லை. எதையும் வருமுன் காப்பதுதான் அறிவுடைமை. ஆனால் நாம் வந்த பின்னர் காரணத்தைத் தேடி அலைகிறோம். சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டு கேள்வி கேட்டு என்ன பயன்?
அந்தக் காலத்தில் அரசர் அவைக்கு வந்ததும் அமைச்சரைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி: ""மந்திரி! நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா....?'' இதற்கு அமைச்சரும் கூறுவார்: ""நாட்டில் தவறாமல் மாதம் மும்மாரி பொழிந்து மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் அரசே!...''~ இதன் பிறகுதான் மற்றவையெல்லாம்.
இந்தக் கேள்வியின் பொருள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். மழை தவறாமல் பெய்தால்தான் மக்கள் நன்றாக இருப்பார்கள். மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தால்தான் நல்லாட்சி நடக்கிறது என்பது பொருள். செங்கோல் தவறினால் நாட்டில் ஒழுங்காக மழை பெய்யாது; இயற்கை பொய்த்துப் போகும் என்பது நம்பிக்கை.
இயற்கையைப் பகைக்கிறபோது எல்லாமே எதிராகும். காலங்கள் மாறினாலும் இயற்கையோடு இயைந்து செயல்பட வேண்டுமே தவிர, எதிர்த்து நின்றால் எல்லாமே தலைகீழாய் மாறிவிடும். பூமியே அழுக்காகும்; வானமும் அழுக்காகும்; மனித குலமே அழுக்காகிவிடும்.
இப்போது அறிவியல் வளர்ந்த அளவுக்கு அதனால் அழிவுகளும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. நில அதிர்வுகளும், கடல்கோள்களும் பெருகி மனித சமுதாயமே கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. எப்போதையும்விட இப்போதுதான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாமல் இப்போது ஓர் அறிவியல் செய்தி உலகையே அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. இந்த உலக உருண்டையின் வெப்ப அளவு கூடிக் கொண்டிருக்கிறது. இந்தப் பூமி சூரியனிலிருந்து எடுத்துக்கொள்ளும் வெப்பம் அதிகமாக இருப்பதாகவும், திருப்பி அனுப்பும் வெப்பம் குறைவாக இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பூமிக்கே பெரும் ஆபத்து காத்திருக்கிறது.
இவ்வாறு பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போவதால் வடதென் துருவங்களின் மிகப்பெரிய அளவிலான பனிப்பாறைகள் உருகிக் கடல்மட்டம் உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் பூமியின் நிலப்பரப்பு குறைந்துகொண்டே போனால் அதன் முடிவை எண்ணிப் பார்க்கவே இதயம் கலங்கும்.
பூமி வெப்பமடைவதற்கு மனிதர்களின் செயல்பாடுகளே காரணங்களாகின்றன. கார்பன் - டை - ஆக்சைடு, மீத்தேன் மற்றும் தூசுகள் மனிதர்களின் செயற்கையான செயல்பாடுகளால் வான்வெளியில் கலந்து சூரிய வெப்பத்தைப் பிடித்து வைத்துக் கொள்வதால் பூமியின் வெப்பம் கூடிக்கொண்டே போகிறது என்கிறது அறிவியல் உலகம்.
கடல்நீரில் சேமித்து வைக்கப்பட்ட வெப்பத்தின் 2 விழுக்காடு வெளியீட்டால் கடல்நீரின் மட்டம் 1.5 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது. இனி பூமியின் வெப்பத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறும் என்று கூற முடியாத அளவுக்கு நிலைமை எல்லை மீறிவிட்டது. இதற்கு மாறாக இப்போது இருக்கும் வெப்பத்தைக் கூடாமல் பராமரிப்பதோடு, வெப்பத்தைக் குறைப்பதற்கான வழிவகைகளையும் ஆராய வேண்டும்.
அன்று வெள்ளமாக ஓடிய ஆறுகள் இப்போது வெறும் மணல் வெளியாக இருப்பதோடு அந்த ஆற்று மணலுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. யாரும் விளைவிக்காமலேயே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மண்டிக் கிடந்த காடுகள் இப்போது எங்கே? மனிதனின் பேராசைக்கு அவையெல்லாம் பலியாகிவிட்டனவே!
இப்போது நெல் விளையும் பூமிக்கும் ஆபத்து வந்துவிட்டது; ஏரி குளங்களுக்கும் ஆபத்து வந்துவிட்டது; சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும், வீட்டுமனைகளாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. எங்கெல்லாம் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றனவோ அங்கெல்லாம் மழை பெய்யாது; வறுமையும், வன்முறையுமே அதிகரிக்கும் என்பது தெரியாதா?
இயற்கை கோடிக்கணக்கான உயிரினங்களைப் படைத்துள்ளது; அவை எதுவும் இயற்கையைப் பாதிக்கவில்லை; இயற்கையோடு போட்டி போடவும் இல்லை. அவை இயற்கையின் போக்கில் வாழ்ந்து வருகின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் இயற்கையோடு மோதி அந்த இயற்கையையே மாற்றுகிறான். உண்மையில் தனது பேராசையால் இயற்கையை ஆபத்தானதாக மாற்றி விடுகிறான். இந்த மாற்றம்தான் "காலநிலை மாற்றம்' என்று கூறப்படுகிறது.
கோள்களிலேயே உயிர்கள் வாழக்கூடிய ஒரே கோள் இந்த பூமி மட்டுமே! இதற்குக் காரணம் பூமியில் இருக்கும் மிதமான வெப்பநிலை, காற்று மற்றும் தண்ணீர் ஆகியவைகளே. இவைகளையும் நாம் நஞ்சாக்கிவிட்டால் எங்கு போய் வாழ்வது?
இந்த இனிய உலகை நமக்களித்த கடந்த காலத் தலைமுறைக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். நமது அடுத்த தலைமுறைக்கு எத்தகைய உலகத்தை விட்டுச் செல்லப் போகிறோம்? இந்தக் கேள்வி இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கேட்கப்பட்டு வருகிறது.
இந்தக் கேள்விக்கு பதில் கூறும் வகையில் ஒவ்வோர் உலகக் குடிமகனும் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு நடந்து கொள்கிறானா? இல்லையே! ஆணவமும், பேராசையும், சுயநலமும் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைத் துச்சமாக மதிக்கத் தூண்டுகிறது. இவனது மன அழுக்குக் குறையாததால் உலகத்தையே அழுக்காக்கிக் கொண்டிருக்கிறான்.
""நாள்தோறும் கங்கை நதியில் 36 கோடி லிட்டர் கழிவுகள் கலக்கப்படுகின்றன. யமுனையில் 15 கோடி லிட்டர் கழிவுகள் கலக்கப்படுகின்றன'' என்று மக்களவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புனித கங்கையின் நிலையே இதுவென்றால் மற்ற ஆறுகளின் நிலைபற்றிக் கூற வேண்டுமா?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் தொடங்கும் இடங்களில் எல்லாம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. நிலம், நீர், காற்று மற்றும் வான்வெளியும் மாசுபடுவதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காவிரி உள்பட பல ஆறுகளில் கழிவுநீர்தான் ஓடுகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதோடு குடிநீருக்கும் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொழில் தொடங்கப்படும்போதே அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்த்திட மாற்றுவழி ஏற்படுத்த வேண்டும். இதனைச் சில பொதுத்துறை நிறுவனங்கள் முறையாகச் செய்கின்றன. ஆனால் லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட பல தனியார் நிறுவனங்கள் அவ்வாறு செயல்படுவதில்லை; அரசாங்கமும், அதிகாரிகளும் கண்டுகொள்வதே இல்லை.
திருப்பூர் பகுதியில் பின்னலாடைத் தொழிலின் வேகமான வளர்ச்சியால் சாயப்பட்டறைக் கழிவுகள் விவசாயத்துக்குப் பயன்பட்ட நொய்யலாற்றைச் சீரழித்து விட்டது. வேலூரைச் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைக் கழிவுகள் அப்பகுதி நிலங்களைப் பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகைப் பகுதியின் நன்செய் நிலங்கள், இறால் பண்ணைகள் மற்றும் உப்பளங்களால் அழிந்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி விவசாயிகளும், விவசாயச் சங்கங்களும் போராடியே அலுத்துப் போய்விட்டனர்.
இன்று அறிவியல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை அடைந்து வருகிறது. அதுவே மனிதகுலத்துக்கு எதிரியாகி விடும்போல இருக்கிறது. மக்கள் பயன்பாட்டுச் சாதனங்கள் முடிவில் மறுசுழற்சி செய்ய முடியாத நிலையில் கழிவுகளாகத் தள்ளிவிடப்படுகின்றன. இந்த ஆபத்தான கழிவுகளை வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கும், வறிய நாடுகளுக்கும் அனுப்பி வைப்பதுதான் வேதனையானது.
வளர்ந்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க் முதலியவை இந்தியாவுக்கே ஆபத்தான கழிவுகளைக் கண்டெய்னர்களில் நிரப்பி கப்பல் மூலம் பலமுறை அனுப்பி வைத்துள்ளன. இந்தக் கழிவுகள் நிரப்பிய கப்பல்கள் சோமாலியா கடல் எல்லைகளில் கொட்டப்படுவதாக கடற்கொள்ளையர்களே குற்றம்சாட்டியுள்ளனர்.
"உலகமயம்' பற்றிப் பேசும் நாடுகளின் இந்த மனிதநேயமற்ற செயலை உலக மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர். வளரும் நாடுகளின் கழிவுகளைக் கொட்டும் குப்பைக் கூடமாக இந்தியாவை நினைப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவர்களின் அலட்சிய நோக்கு; நமது போதிய விழிப்புணர்வு இல்லாத போக்கு.
கோடிக்கணக்கான உயிர்கள் கூடி வாழும் இடத்திற்குப் பெயர்தான் பூமி. அந்தப் பூமியை மாசுபடாமல் காப்பாற்றும்போதுதான் மழை மட்டுமல்ல, மனித வாழ்வும் கிடைக்கும். நிலம், நீர், நெருப்பு, காற்று, வான் என்னும் பஞ்சபூதங்களும் இல்லாமல் உயிர்கள் ஏது?
""மனித குலத்தின் தேவைகள் அனைத்தையும் இயற்கைத்தாய் நிறைவு செய்வாள். ஆனால் பேராசையை ஒருபோதும் நிறைவு செய்ய மாட்டாள்...'' என்னும் காந்தியடிகளின் சிந்தனையை எண்ணிப் பார்க்க வேண்டிய நேரம் இது. இனிமேலும் தாமதித்தால் மனித வரலாறு மன்னிக்காது. உலகைக் காக்கும் உரிமையும் பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...