அடையாளம் காணுங்கள்!
"வாய்ச்சொல் வீரர், பலவீனமானவர், ஆர்.எஸ்.எஸ். அடிமை, கையை வெட்டுங்கள், ரோடு ரோலரை ஏற்றிக் கொல்வேன்'- இந்த வார்த்தைகளைப் படித்ததுமே இவை யார், யார் திருவாய்களிலிருந்து மலர்ந்தவை என்பது பு


"வாய்ச்சொல் வீரர், பலவீனமானவர், ஆர்.எஸ்.எஸ். அடிமை, கையை வெட்டுங்கள், ரோடு ரோலரை ஏற்றிக் கொல்வேன்'- இந்த வார்த்தைகளைப் படித்ததுமே இவை யார், யார் திருவாய்களிலிருந்து மலர்ந்தவை என்பது புரிந்திருக்கும்.
மசாலாத்தனமான திரைப்பட வசனங்களில் இடம்பெறும் வார்த்தைகளைப் போன்ற இவற்றை உதிர்த்தவர்கள் நம் மாண்புமிகுக்களும் மதிப்புமிகுக்களும் எனும்போதுதான் சிறிய அதிர்ச்சி.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பு என்று நம் நாட்டைப் பற்றி பெருமைகொள்ளும் வேளையில், அந்த ஜனநாயக முறையின் பரிணாம வளர்ச்சி ஒரு நெருடலையும் தந்து கொண்டேயிருக்கிறது.
இவற்றை ஏதோ தேர்தல் நேரப் பேச்சு என்றுகூறி அலட்சியப்படுத்திவிட முடியாது. ஏனென்றால், இந்த வார்த்தைகளை உதிர்த்தவர்கள் நாட்டை ஆளும் பிரதமர், ஆளும்கட்சியின் தலைவர் உள்ளிட்ட பெருந்தலைகள்.
பிரதமர் செயலற்றவர், திறமையற்றவர் என்ற எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியின் விமர்சனத்திற்குப் பதில் அளிக்கும் வகையில், "அத்வானி ஓர் ஆர்.எஸ்.எஸ். அடிமை' எனச் சொல்லியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
"அத்வானி ஒரு வாய்ச்சொல் வீரர்'- இது பிரதமர் மன்மோகன் சிங்கின் வசனம். "தன்னை பா.ஜ.க.வினர் எப்போதுமே குறைத்தே மதிப்பிட்டு வருவதாகவும், ஆதலால், மிகவும் யோசித்தே(!) இப்படி பதிலடி(?) கொடுத்ததாகவும்' விளக்கம் அளிக்கிறார் பிரதமர்.
தேர்தல் பிரசாரத்தின்போது ஆவேசமாகப் பேசி சிக்கலில் மாட்டிக்கொண்ட வருண்காந்திகூட யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதாகத் தெரியவில்லை. ஆனால், அவருக்குப் பதில் அளிக்கிறேன் என்ற பெயரில், "ரோடு ரோலரை ஏற்றிக் கொல்வேன்' என தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிவிட்டு, பின்னர், சட்டம் என்ற ரோடுரோலரால் தண்டித்திருப்பேன் என்று அந்த பிரச்னையை சமாளிக்கிறார் ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ். தன் பங்குக்கு பிகார் முதல்வர் நிதீஷ்குமாரை தரக்குறைவாக விமர்சிக்கிறார் லாலுவின் மனைவி ராப்ரி.
எப்போதும் இல்லாத அளவு இந்த மக்களவைத் தேர்தலையொட்டி, இவ்வாறு தனிப்பட்ட தாக்குதல் தொடுத்தது தொடர்பாக நிறையப் புகார்கள் வருவதாக தேர்தல் ஆணையமும் வருத்தம் தெரிவித்துள்ளது.
மக்களுக்குச் செய்யப்போகும் நன்மைகள் என்ன, நாட்டை முன்னேற்ற என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம் என்பது குறித்து அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒரே மேடையில் விவாதிப்பது வழக்கம். அதுபோன்ற நடைமுறையை இந்தியாவிலும் சில அமைப்புகள் நடத்திக் காட்டுகின்றன. ஆனால், அதில் பங்கேற்பவர்கள் எல்லாம் சாதாரண வேட்பாளர்கள். நாட்டின் உயர்ந்த பதவியான பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர்கள் இதுபோல ஒரே மேடையில் பங்கேற்று விவாதம் செய்யும் அளவுக்கு இந்தியாவில் அரசியல் ஆரோக்கியம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றே தோன்றுகிறது.
மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவைகளில்கூட எப்போதுமே ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவது இல்லை. கூச்சல், குழப்பம், முற்றுகை, வெளிநடப்பு (சில சமயங்களில் அடிதடி) என கலவரப் பகுதியாகத்தான் காட்சி அளிக்கிறது.
இவை சாதாரண நேரங்களில் என்றால், தேர்தல் நேரத்தில் அறிக்கை மோதல், வார்த்தைச் சாடல், சவால் என தினம் தினம் வெற்றுப் பரபரப்பையே நம் அரசியல்வாதிகள் ஏற்படுத்துகிறார்கள்.
எப்போதும் திட்டிக்கொண்டும், ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டும் இருக்கும் அரசியல்வாதிகள் நேரில் சந்திக்கும்போது இயல்பாகப் பேசிக் கொள்வதைக்கூட அரசியல் நாகரிகம் என்று கருதி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
ஆகமொத்தம் ஆளும்கட்சியினருக்கும் சரி, எதிர்க்கட்சியினருக்கும் சரி... ஆட்சியின் சாதனைகளோ, வேதனைகளோ முக்கியமாகத் தெரியவில்லை. மாறாக, எப்படியாவது வார்த்தை விளையாட்டு விளையாடி வெற்றிக் கனியைப் பறித்துவிடுவதுதான் நோக்கமாகத் தெரிகிறது.
ஒருபக்கம் இவற்றைப் பார்த்து வெறுப்பு ஏற்பட்டாலும், அவர்களின் சுயமுகத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக இந்த மோதல்களே அமைந்துவிடுவதுண்டு. நேற்று ஒன்று சொன்னவர் இன்று மற்றொன்றைச் சொல்கிறாரே, நாளை பிறிதொன்றைச் சொல்லக்கூடும் என மக்கள்தான் அரசியல்வாதிகளின் இந்த "அந்தர்பல்டிகளை' இனம் கண்டு வாக்குப்பதிவின்போது பதிலளிக்க வேண்டும்.
ஆனால், எத்தனை வாக்காளர்கள் இத்தகைய தெளிவுக்கு வரக்கூடும்? அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. நாடு சீரழிகிறதே என்று என்னதான் வருத்தப்பட்டாலும், சுட்டிக்காட்டினாலும் இந்த நிலை தொடரத்தான் செய்கிறது. ஏனென்றால் "அரசியலில் இதெல்லாம் சாதாரணம்' என்கிறீர்களா, அதுவும் சரிதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...