எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மொழியறிவு, கலாசாரத்தை வளர்க்கும் பல்கலைக்கழகம்!

மதுரை மாவட்டம், மேலூர் கிராமத்தில் எனது பள்ளிப் பருவத்தின்போது, எனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு மட்டுமே தினமணி நாளிதழ் வரும்.

News image
வேலாயுதம்
Updated On :31 ஜனவரி 2024, 10:08 am

வேலாயுதம்

மதுரை மாவட்டம், மேலூர் கிராமத்தில் எனது பள்ளிப் பருவத்தின்போது, எனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு மட்டுமே தினமணி நாளிதழ் வரும். அப்போது, செய்தித்தாள் கொண்டு வரும் ஏஜெண்ட், தினமணி நாளிதழை என்னிடம் கொடுத்து, உறவினர் வீட்டில் கொடுக்கச் சொல்வார். அப்போது, தினமணி நாளிதழை வாசிக்கத் தொடங்கிய நான், 65 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்.

காலையில் தேநீர் குடிப்பதற்கு முன் 5 மணிக்கே தினமணி நாளிதழைத் தேடிப் பிடித்து வாசிப்பது என் அன்றாடப் பணியாகவும் தொடர்கிறது. தினமணியின் 75-ஆவது ஆண்டு விழா கோவையில் நடைபெற்றபோது, திரையுலகப் பிரபலங்கள் மணிவண்ணன், சத்யராஜ் ஆகியோருடன் என்னையும் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்தனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரிடம் வைக்கப்படும் கோரிக்கைகளாக, தினமணி சார்பில் வாசகர்களிடம் 75 கோரிக்கைகள் பெறப்பட்டு பிரசுரிக்கப்பட்டன.

அதில், புத்தகப் பதிப்பாளர்களின் முன்னோடியாக விளங்கிய சக்தி.வை.கோவிந்தனின் வாரிசுகளைக் கண்டுபிடித்து, ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும், உழவர் சந்தைகள் போல, அனைத்து ஊர்களிலும் புத்தகச் சந்தைகள் ஏற்படுத்த வேண்டும் என எனது கோரிக்கைகளைப் பதிவு செய்தேன். அந்தக் கோரிக்கைகள் தினமணியில் வெளியான பிறகு, சக்தி.வை.கோவிந்தனின் மகன் என்னைத் தொடர்பு கொண்டார். அந்தத் தொடர்பு ஏற்பட தினமணி முக்கியக் காரணம். அதன் பிறகு சக்தி.வை.கோவிந்தனின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டன.

1999-ஆம் ஆண்டு தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில், பதிப்புத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக எனக்கும், தமிழ் இலக்கியத்துக்கு சேவையாற்றியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், ஆங்கில இலக்கியத்துக்கு சேவையாற்றியதற்காக பேராசிரியர் மனோஜ் தாஸுக்கும் விருது வழங்கப்பட்டது. அந்தச் செய்தி தினமணியில் பிரசுரமானது, அந்தச் செய்தித்தாளை இன்று வரை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.

பத்திரிகை உலகில், நீண்ட காலமாக இலக்கியத்துக்கும், இலக்கியவாதிகளுக்கும் உறுதுணையாகவும், வாசகர்களுக்கு மொழியறிவை, கலாசாரத்தை வளர்க்கும் பல்கலைக்கழகமாகவும் தினமணி விளங்குகிறது. புத்தகப் பதிப்பாளர்களிடம் மாறாத அன்பு கொண்ட நாளிதழாக தினமணி தனது பயணத்தை நகர்த்திச் செல்வதில் எனக்குப் பேரின்பம், பெருமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.