தினந்தோறும் என்னைக் கவரும் தினமணி
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்" என்னும் இலட்சியத்தை தனது ஆன்மாவாகக் கொண்டு 85 ஆண்டுகளாக வெளிவரும் நாளிதழ் தினமணி.


"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்" என்னும் இலட்சியத்தை தனது ஆன்மாவாகக் கொண்டு 85 ஆண்டுகளாக வெளிவரும் நாளிதழ் தினமணி. அதன் வளர்ச்சியும் தொடர்ச்சியும் பல்லாண்டு பல்லாண்டு காலம் பெருகிட வாழ்த்துவோம்.
செய்தித்தாள் என்பது மக்களின் ஒழுக்கப் பண்புகளை நிலைநிறுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்போருக்கு தினமணி என்றும் இனிக்கும் ஏடுதான். கொலை, திருட்டு, கற்பழிப்பு, கொள்ளை, வழிப்பறி, சமூகச் சீர்கேடுகள் இன்றைக்கு சமுதாயத்தில் மலிந்து வருவதை, அப்படியே ஏடுகளும் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொள்ளாத நல்ல ஏடாக தினமணி விளங்குகிறது. நல்லதைத் தண்டோரா போட்டுப் பரப்பலாம்; அல்லதை அவசியப்படின் அடுத்தவருக்குக் கூறலாம் என்பது ஆன்றோரின் அமுதவாக்காகும். அதன் விளக்கத்தை இந்த நாளேட்டில் பார்ப்பது மிகுந்த மகிழ்வைத் தருவதாகும்.
தினந்தோறும் ஆன்மிகச் சிந்தனை, சமய ஒப்பிட்டுக்கு மட்டுமல்ல; சமூக நல்லிணக்கத்துக்கு வழிகாட்டும் ஒளிக்கதிராக இந்த ஏட்டில் வருகிறது. வள்ளுவரின் திருக்குறள், தினமும் இதில் வருகிறது; அதன் பொருளும் எளிமையாகத் தரப்படுகிறது. நாட்டுக்குத் தேவைப்பட்ட ஞானசிரியர் பணியை இந்த நாளேடு செய்கிறது.
சங்க இலக்கியங்களைப் படிப்பதும், அவற்றின் பொருள் புரிவதும் பலருக்கும் பெரும் சிரமம் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஞாயிறுதோறும் தினமணி தரும் தமிழ்மணி சங்கத்தமிழ்ப் பாடம் நடத்தும் பல்கலைக்கழக வகுப்பு போன்றதே.
ஒழுக்கத்தை உயிரினும் உயர்வாகக் கருதுவோர், சங்கத்தமிழை அறிவதில் ஆர்வம் மிகுந்தோர், திருக்குறள் நெறியை உணர விரும்புவோர் சமூகத்தில் நிரம்பவும் இருக்கிறார்கள். அவர்களுடைய இதயம் கவர்ந்த நாளேடு தினமணி என்றால் அது மிகைப்பட்டதாகாது.
மறைந்த பெரியவர் சிவராமன் அவர்கள் எழுதி வந்த தினமணி தலையங்கங்கள் என் போன்றோருக்கு மிகவும் பயன்பட்டவையாகும். நாட்டு நடப்பு, வெளிவிவகாரக் கொள்கை, சிக்கலான பொருளாதாரப் பிரச்னைகள் பற்றி அந்தப் பெரியவர் எழுதிய தலையங்கங்கள், கல்லூரி வகுப்புகளில் கிடைக்காத விரிவுரைகளாக - விளக்கவுரைகளாக இருந்தன. பொதுவாழ்வில் படிக்க வேண்டிய பலவற்றை சிவராமன் அவர்களின் எழுத்துகளில் இருந்து கற்றவர்களில் யானும் ஒருவன் என்பதில் எனக்குள்ள பெருமையாகவே கருதுவேன். அவருக்குப் பிறகு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த திரு சம்பந்தம் போன்றவர்களுடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இல்லாதிருந்தது. இன்றைய ஆசிரியர் அருமை சகோதரர் கி.வைத்தியநாதன் அவர்களின் தலையங்கங்கள், நாங்கள் நடத்தும் மணிச்சுடர் நாளேட்டில் பல நேரங்களில் எட்டுக்காலச் செய்திகளாகவே வந்திருக்கின்றன. அவற்றைச் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்துக்குத் தெரிவிப்பதை மணிச்சுடர் பெரும் கடமையாகக் கொண்டு இன்றும் செய்து வருகிறது. நாட்டு நடப்புகள், உலக நடப்புகள் பற்றிய ஆதாரப்பூர்வமான செய்திகளை மேற்கோள் காட்டுவதற்கு தினமணியைத்தான் மூலமாகக் கொள்ளும் பழக்கம் இன்றைய அரசியல் தலைவர்கள் பலரிடமும் பார்க்க முடிகிறது.
நாடறிந்த நல்லறிஞர்களின் கருத்துகளை, நடுப்பக்கக் கட்டுரைகளாக தினமணிதான் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. இன்றும் இதனைப் பல நாளேடுகள் பின்பற்றுகின்றன. இலக்கிய வல்லுநர்கள், அரசியல் நிபுணர்கள், அரசு நிர்வாகத் துறையில் முன்னிலையில் உள்ளோர், கவிஞர்கள், அறிவியலாளர் போன்ற பல்துறை அறிஞர்களின் கருத்துகளுக்குத் தினமணி இடம் கொடுத்து, அறிவுச்சுடர் பரவிடத் தொடர்ந்து பணி தொடரும் தினமணி, நாள் உள்ள நாளெல்லாம் நல்ல தமிழ் நாளேடாக வரவும், எல்லோருக்கும் இதய ஒளி தரவும் வாழ்த்துவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...