ஒரு சொல் கேளீர்! - தலையங்கம்
ஆளுநர் அவர்களே, அதிகாரிகளே, அரசு ஊழியர்களே, ஆசிரியப் பெருமக்களே, ஒரு சொல் கேளீர்!


ஒரு சொல் கேளீர்!
ஆளுநர் அவர்களே, அதிகாரிகளே, அரசு ஊழியர்களே, ஆசிரியப் பெருமக்களே, ஒரு சொல் கேளீர்!
நியாயத்திற்கும் அநியாயத்திற்குமிடையே போராட்டம் ஏற்படும்போது தீர்ப்புச் சொல்வது எளிது, நியாயம் வெல்லும்; அநியாயம் தோற்கும்.
ஆனால், நியாயத்திற்கும் நியாயத்திற்குமிடையே நிகழும் மோதல்களில் அனைவரையும் திருப்தி செய்யும் வகையில் முடிவு சொல்வது கடினம். ஆயினும், பிறருடைய வாதங்களில் இருக்கும் நியாயத்தையும் தம்முடைய வாதங்களில் இருக்கும் குறைகளையும சீர்தூக்கிப் பார்க்கக்கூடிய கல்வியறிவும் உலக அனுபவமும் உங்களிடம் உண்டு. சினத்தையும் வெறுப்பையும் தவிர்த்து, பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, நிதானத்துடனும் கண்ணியத்துடனும் அரசு ஊழியர் - ஆசிரியர் போராட்டப் பிரச்சினைகளை அணுகமுடியும், தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறோம்.
அரசு ஊழியரின் கோரிக்கைகள், அடிப்படையில் நியாயமானவை. ஒரே பணியை அதே ஊரில் செய்து வரும் ஒரே தகுதிபெற்ற ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு மிக அதிகமாகவும், மாநில அரசுகள் மிகக் குறைவாகவும் ஊதியம் தருவதை நியாயப்படுத்த முடியாது. தொழிலாளர்களுக்குத் தொழில் நிறுவனங்களின் லாப நஷ்டங்களைக் கருதாது ஒரு மாத போனஸ் என்று அரசு சட்டமியற்றிய பிறகு, லாப நஷ்டக் கணக்கே இல்லாத அரசு அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போனஸ் கிடையாது என்று மறுப்பதில் அர்த்தமில்லை.
அரசு ஊழியர் - ஆசிரியர் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளத் தமிழக அரசு தயங்குவதிலும் நியாயம் இருக்கிறது. அரசுத் தரப்பில் கூறப்படும் முக்கியமான காரணம், அரசின் நிதிநிலைமை திருப்திகரமாக இல்லையென்பதுதான். இந்தக் காரணத்தை இன்றுள்ளஆளுநர் ஆட்சி மட்டுமன்றி, இதற்கு முன் ஆட்சிசெய்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும் கூறிவந்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.
அரசும் அதன் ஊழியர்களும் மோதும் போராட்டத்தில் மிகவும் அவதியுறுவது மாணவர்களும், பெற்றோர்களும் என்பதை மறுக்கமுடியாது. நுழைவுத் தேர்வுகளுக்கும், பள்ளிகளில் சேர்வதற்கும் சான்றிதழ்கள் கிடைக்காமல் அங்குமிங்கும் அலைந்து திரியும் மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இந்த வேலைநிறுத்தத்தால் எரிச்சல் உண்டாவது இயற்கையே. அதனால்தான் அவர்கள் அரசு ஊழியர்-ஆசிரியர் தரப்பில் நியாயமிருந்தும் வேலைநிறுத்தத்தை முழுமனத்துடன் ஆதரிக்கவில்லை.
பொதுமக்களுக்கு இன்னொருவிதமான கவலை ஏற்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கூடுதல் ஊதியம் கோடிக்கணக்கில் வழங்க வேண்டுமெனில், அதற்குத் தேவையான உபரி நிதியைப் புதிய வரிகளை விதித்துத்தான் திரட்டவேண்டும். தமிழகத்தில் ஏற்கெனவே வரிப்பளு மிகவும் அதிகமாக உள்ள நிலையில், பொதுமக்கள் கூடுதல் வரிகளை வரவேற்காததில் வியப்பில்லை.
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படும் ஊதிய உயர்வால் நிச்சயமாக ஏற்படப் போகும் பணவீக்கமும், விலைவாசிகள் ஏற்றமும் பொதுமக்களைத்தான் தாக்கும். இன்றுள்ள பொருளாதார நிலையில், பொதுமக்கள் புதிய வரிகளையும் விலையேற்றங்களையும் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
மேலே மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டவைதான் பல தரப்புகளில் கூறப்படும் வாதங்களில் உள்ள அடிப்படை நியாயங்கள். ஊதிய உயர்வுப் பிரச்சினைக்குச் சம்பந்தமில்லாத மற்ற வாதப் பிரதிவாதங்களையும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளையும் கோபத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் புறக்கணித்துவிட்டுப் பிரச்சினையைத் தீர்க்க வழி காணுவோம்.
ஆளுநர் இதை ஒரு கெளரவப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல் அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டுச் சங்கங்களின் பிரதிநிதிகளைநேரிடைப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்க வேண்டும். சகஜநிலை திரும்புவதற்கு ஏதுவாகச் சிறைப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். வேலைநீக்க உத்தரவுகளை வாபஸ் பெறவேண்டும். மற்றும் எல்லாவித அடக்குமுறைகளையும் கைவிட வேண்டும். அதேபோன்று, ஆசிரியரும் ஊழியரும் முன் நிபந்தனைகளை எதுவுமின்றிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவேண்டும்; வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும்.
அடுத்தபடியாக மத்திய, மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தகுதியும் பணிகளும் ஒரேமாதிரி இருக்கும்போது ஒரே சீரான ஊதியம் தரப்பட வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையில் ஏற்றுக்கொள்வதாகத் தமிழக அரசு அறிவித்துவிட வேண்டும். அதே சமயத்தில், நிதிநிலையில் காரணமாக இவ்வித ஊதியச் சீர்மை படிப்படியாகத்தான் ஏற்படும் என்பதை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு முழுமையான சீரமைப்புக்குத் தேவைப்படும் காலக்கெடுவையும், ஊதிய உயர்வின் தவணைகளையும் பேச்சுவார்த்தைகளின் மூலம் முடிவுசெய்ய வேண்டும்.
மத்திய அரசின் நிதியுதவி பெறாது மாநில அரசு தன் ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மத்திய ஊதிய விகிதங்களைத் தர இயலாது. ஏற்கெனவே கல்லூரி ஆசிரியர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஊதிய விகிதங்களை அளிக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு மானியத் தொகைகளை வழங்குவதாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதேபோன்று, பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வால் ஏற்படும் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசு குறிப்பிட்ட காலக்கெடுவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக, முதலாண்டில் 80 சதமும், பிறகு படிப்படியாக 60, 40, 20, 10 சதம் என்ற விகிதங்களிலும் உபரிச் செலவை மத்திய அரசு ஐந்தாண்டுகளுக்கு ஏற்றுக்கொள்ளலாம். (இது ஒரு உதாரணம்தான். வேறு காலக்கெடுவையும் விகிதாச்சாரங்களையும் பேச்சுவார்த்தைகளின்மூலம் நிர்ணயித்துக்கொள்ளலாம்.)
மேற்கூறிய கருத்துகள் ஏற்கப்பட்டால், ஒரு புதிய சம்பளக் கமிஷனை இப்பொழுது நியமிக்கத் தேவையிருக்காது. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக ஊதியச் சீர்மைக் குழுக்களை (Pay Equivalence Fixation Committees) அமைத்து அவற்றில் மத்திய, மாநில அதிகாரிகளும் அரசு ஊழியர், ஆசிரியர் பிரதிநிதிகளும் பங்கேற்றுக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அறிக்கைகளை அரசுக்கு அளித்துவிடலாம். அரசும் அவற்றைத் தொகுத்து மத்திய அரசின் ஒப்புதலுடன் தன் முடிவுகளை அறிவித்துவிடலாம்.
இங்குக் குறிப்பிட்டுள்ள அடிப்படையில் உடனடியாகப் போராட்டத்தைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவேண்டுமென்று பொதுமக்கள் சார்பில் உங்களை அழைக்கிறோம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணவேண்டும் என்பதை வலியுறுத்தும் தலையங்கம். (8.7.1988)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...