ஆனால் ஜெமினி முதல் மனைவி அலமேலுவின் சம்மதத்துடன் சாவித்ரியைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமண உறவு செல்லாது. ஆயினும் சாவித்ரியின் குழந்தைகள் மட்டுமல்ல திருமண உறவே இல்லாமல் நடிகை புஷ்ப வள்ளியுடன் தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் அப்பா தான் தான் எனவும் ஜெமினி ஒப்புக் கொண்டார். சாவித்ரி தெலுங்கு, தமிழ் என இருமொழிப்படங்களிலும் சாதித்த வெற்றியை ஜெமினி தமிழில் மட்டுமாக சாதித்தார். அவரது திரையுலகப் பங்களிப்பையும் சாதாரணமாகப் புறம் தள்ளிவிட முடியாது. இறக்கும் வரை தனது வாழ்நாள் முழுமைக்கும் உடல்நிலை ஒத்துழைத்த வரை ஜெமினி நடித்துக் கொண்டே தான் இருந்தார். கே.பாலசந்தர் காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி தலைமுறை நடிகர்களெனக் கருதப்பட்ட முத்துராமன், ஏவிஎம் ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கெல்லாம் திரைவாய்ப்புகள் காலாவதியாகிக் கொண்டிருக்கையில் வெள்ளி விழா, இரு கோடுகள், நூற்றுக்கு நூறு, என ஜெமினியின் திரை வாழ்க்கை பேலன்ஸ்டாகவே சென்று கொண்டிருந்தது. அப்படியிருக்க சாவித்ரிக்கு கிடைத்த புகழைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஜெமினி புழுங்குவதாகக் காட்டியிருப்பது தவறான சித்தரிப்பு.