மைக்கேல் மதன காமராஜன், நாட்டாமை, முத்து, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த வில்லன் கம் காமெடி நடிகர்களில் ஒருவரான பொன்னம்பலத்தை, வெகு நாட்களுக்குப் பின் பிக்பாஸ் சீஸன் 2-ல் காண்கையில் அவருக்கு சுகரோ என்று தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை. மனிதர் அத்தனை மெலிந்திருந்தார். பல திரைப்படங்களில் ரஜினி, கமல், சரத்குமாரை தூக்கிப் பந்தாடிய உருவமா இது என்று சந்தேகமாகிவிட்டது. மனிதர் குடும்பத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஒரு வில்லன் நடிகருக்கு வாழ்க்கை நிதர்சனமில்லை. எந்த நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால், தான் இல்லாமலும் தன் குடும்பத்தால் ஜீவிக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்தவே தான் பிக் பாஸ் சீஸன் 2-ல் கலந்துகொண்டதாகக் கூறினார். அந்தவகையில், பிக் பாஸ் சீஸன் 1-ல் பல வாரங்கள் தாக்குப்பிடித்து பப்ளிக் ஓட்டில் ஏராளமான ரசிகர்களைச் சம்பாதித்த நடிகர் வையாபுரியை ஞாபகப்படுத்தினார் பொன்னம்பலம்.