நடிகை சசிகலா... ஊர் மரியாதை, ஊமை விழிகள், சங்கர் குரு, வெற்றி விழா, உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் என இவர் நடித்த சில திரைப்படங்கள் இன்னும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. இந்த திரைப்படங்களைத் தவிர மேலும் சில தமிழ்த்திரைப்படங்களில் சசிகலா நடித்திருந்த போதும் ரசிகர்களின் நெஞ்சில் நிற்பவை இந்தப் படங்கள் மட்டுமே. 80 களின் இறுதியில் தமிழில் சசிகலா என்ற பெயரில் நடித்துக் கொண்டிருந்தவர் தெலுங்கில் ரஜனி என்ற பெயரில் அறிமுகமாகி அப்போது டோலிவுட்டில் பீக்கில் இருந்த நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு தவிர கன்னடத்தில் அம்பரீஷ், விஷ்ணுவர்த்தனுடன் சில படங்கள் மலையாளத்தில் மம்மூட்டியுடன் சில படங்கள் என சசிகலா அப்போது முன்னணி நடிகையாகவே திகழ்ந்தார்.