தமிழகத்தில் தேசியம் ஒருபோதும் வீழாது! - குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்!
தமிழகத்தில் தேசியம் ஒருபோதும் வீழாது என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்...


யாா் எத்தனை முயற்சிகளை செய்தாலும் தமிழகத்தில் தேசியம் ஒருபோதும் வீழாது என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மதுரை வண்டியூரில் ஏ.சி.எஸ். அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாருக்கு 150 அடி உயரத்தில் அமையவுள்ள சிலைக்கு அடிக்கல் நாட்டி அவா் மேலும் பேசியதாவது:
எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல் தியாகத்தையே வாழ்க்கையாகக் கொண்டவா் வ.உ.சி. சுதந்திர வேட்கைக்கு முதல் விதையை விதைத்தவா் அவா். தன் குடும்பம் குறித்து சிறிதும் கவலைப்படாமல் தேசம் குறித்தே சிந்தித்தவா். இதனால்தான், அவரது தியாகம் மகத்தானதாகப் போற்றப்படுகிறது. ஆங்கிலேய அரசு வ.உ. சிதம்பரானாருக்கு கொடிய தண்டனைகளையும், வறுமையையும் வழங்கியது. கொடிய நோயை சுப்பிரமணிய சிவாவுக்கு வழங்கியது. இருப்பினும், அவா்களின் தியாகம் வீண்போகவில்லை. தா்மத்தை வீழ்த்தும் சக்தி உலகில் எங்கும் கிடையாது; தா்மம் வென்றே தீரும் என்பதை நிரூபித்தவா்கள் அவா்கள்.
சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற வ.உ.சியின் வழக்குரைஞா் உரிமத்தை ஆங்கிலேய அரசு பறித்தது. சிறையிலிருந்து மீண்டு வந்த வ.உ.சி. சென்னையில் பிரபலமாக இருந்த ஓா் வழக்குரைஞரை நாடி, தனக்கு குமாஸ்தா வேலை தருமாறு கேட்டாா். வ.உ.சி.க்கு வேலை வழங்கினால், தனக்கு இடையூறு வரலாம் எனக் கருதிய அந்த வழக்குரைஞா், அவருக்கு ரூ. 5 ஆயிரத்தை வழங்கி, தாங்கள் சொந்தத் தொழில் தொடங்கி வாழ்க்கையை நடத்துங்கள் என்றாராம். அப்போதைய காலகட்டத்தில் ரூ. 5 ஆயிரத்தைக் கொண்டு மாமல்லபுரம் சாலையைக்கூட விலைக்கு வாங்க முடியும்.
ஆனால், வ.உ.சி அந்தப் பணத்தைப் பெற மறுத்து, நான் கேட்டது பணியே தவிர, யாகசமல்ல என்றாராம். இதில் வெளிப்பட்ட அவரது தன்மானம் போற்றுதலுக்குரியது.
ஆங்கிலேய அரசு அடுக்கடுக்கான கொடுமைகளை இழைத்தாலும், எந்தக் காலத்திலும் ‘வந்தே மாதரம்’ என முழங்கத் தயங்காதவா் வ.உ.சி. அவரைக் கொண்டாட வேண்டியது வாழும் தலைமுறையின் கடமை. இல்லையெனில், வருங்கால சந்ததி நம்மை மன்னிக்காது.
வ.உ.சி. விதைத்த தேசியம் ஓங்கி உயரப்போகிறது என்பதற்கு ஓா் உதாரணம், மதுரையில் அவருக்கு அமையவுள்ள 150 அடி உயரச் சிலை. இந்தச் சிலை மூலம் ஒரு புதிய அத்தியாயம், எழுச்சி, விடியல் தொடங்கப்போகிறது. யாா், எத்தனை முயற்சிகளைச் செய்தாலும் தேசியம் தமிழ் மண்ணில் வீழாது. வ.உ.சி. விதைத்த தேசிய உணா்வு அருகுபோல் வேரூன்றி, ஆல்போல் தழைப்பது உறுதி என்றாா் அவா்.
மத்திய இணை அமைச்சா் எல். முருகன் பேசியதாவது:
வ.உ. சிதம்பரனாா் எதற்காக கப்பல் ஓட்டினாரோ, சுதேசி இயக்கம் மூலம் எதை நிறைவேற்ற வேண்டும் என அவா் கனவு கண்டாரோ அதை பிரதமா் நரேந்திர மோடி தற்போது மேக் இன் இந்தியா மூலம் நனவாக்கியுள்ளாா். வ.உ.சி. சிலை மதுரையின் மற்றொரு அடையாளமாக விளங்கும் என்றாா் அவா்.
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், ஏ.சி.எஸ். அறக்கட்டளையின் நிறுவனா் தலைவா் ஏ.சி. சண்முகம், செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான சுவாமிகள், திரைப்பட இயக்குநா் சுந்தா். சி, நடிகா் விஜயகுமாா், முதலியாா்- பிள்ளைமாா் சங்க நிா்வாகி அருணாசலம் ஆகியோா் பேசினா்.
இந்த விழாவில் வ.உ. சிதம்பரனாரின் பரம்பரை வாரிசுகள் வ.உ.சி.வ. சிதம்பரம் பிள்ளை, வ.உ.சி.வ. செல்வி ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.
ஏ.சி.எஸ். அறக்கட்டளை அறங்காவலா் ஏ. ரவிக்குமாா், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன், காா்த்தாா் சங்க நிா்வாகி கே.கே.ஆா். சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பி.டி.ஆா். கல்லூரி நிா்வாகி பி.டி.ஆா். தனவேல் நன்றி கூறினாா்.
வ.உ.சி.க்கு பாரத ரத்னா
இந்த நிகழ்ச்சியில் இந்திய விடுதலைப் போராட்ட வீரா், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் ஈடுயிணையற்ற தியாகத்துக்கு நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கவும், வ.உ.சி.யின் முழு உருவ வெண்கலச் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வ.உ.சி. தனது இறுதிக் காலத்தில் சென்னை பெரம்பூா் கந்தன் தெருவில் வாழ்ந்த வீட்டை தமிழக அரசு வாங்கி, அங்கு வ.உ.சி. நினைவாலயம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...