இன்று (தான்) இளையராஜாவின் பிறந்தநாள். இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு:
*
அன்னக்கிளி வெளியானபிறகு, முதல்முதலாக மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் மெல்லிசைக் கச்சேரியை அரங்கேற்றம் செய்தார் ராஜா. இளையராஜா இசைக்குழுவினரின் கச்சேரி என்கிற விளம்பரத்துக்கு நல்ல கூட்டம் கூடியது. அரங்கம் நிரம்பியது.
மெலிந்த உருவம். வாரிய தலை. குறிப்பாக இளைஞர். ரசிகர்களுக்கு இளையராஜாவின் முதல் தரிசனம் மிகவும் வித்தியாசமாக அமைந்தது. இந்த வெள்ளைச் சட்டைக்காரரா பாடல்களில் தூள் கிளப்பினார் என்று அவர்களுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.
ராஜா மைக்கைப் பிடித்தார். ‘நீங்க கற்பனை பண்ணிய மாதிரி நான் இருக்கமாட்டேனு நிச்சயம் எனக்குத் தெரியும். நீங்க எதிர்பார்த்த பர்சனாலிட்டி இல்லைன்னா என்னை மன்னிச்சுடுங்க’ என்றார். ராஜாவின் இந்த வெள்ளந்தியான பேச்சுக்கு செம கிளாப்ஸ் கிடைத்தது.
*
பதினாறு வயதினிலே படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. பொதுவாக மதிப்பெண்கள் வழங்குவதில் கறாராக இருக்கும் விகடன் பதினாறு வயதினிலே படத்துக்கு 62.50 மதிப்பெண்கள் கொடுத்துப் பாராட்டித் தள்ளியது. பாரதிராஜாவின் இயக்கத்துக்கு நூற்றுக்கு 75 மதிப்பெண்கள் வழங்கிய விகடன், இளையராஜாவின் இசைக்கு 65 மதிப்பெண்கள் அளித்தது. அன்னக்கிளியில் பாடல்கள் ஹிட் ஆனது குருட்டு அதிர்ஷ்டத்தால் இல்லை என்று நிரூபித்திருக்கிறீர்கள். இந்தப் படத்தில் வரும் எல்லாப் பாடல்களும் காதுக்கு இனிமையைத் தருகின்றன என்று ராஜாவின் இசையைப் பாராட்டியது விகடன்.
*
1985ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி மாலை பண்ணைபுரத்தில் இளையராஜாவின் கச்சேரி நடந்தது. இந்தக் கச்சேரிக்குப் பக்கத்து ஊர்களில் இருந்து ரசிகர்கள் வந்து குவிந்தார்கள். மதியம் முதலே லாரிகளும் ஜீப்களும் புழுதியைக் கிளப்பி விட்டபடி பண்ணைபுரத்துக்குள் நுழைந்தன.
கைகளைத் தலைக்கு மேலே உயர்த்திக் கும்பிட்டவாறே மக்கள் முன் காட்சி தந்தார் ராஜா. கைதட்டல் அடங்க 5 நிமிடங்கள் பிடித்தது. அன்றைய விழாவில் தன் மதிப்பிற்குரிய மனிதர்களை கௌரவித்தார் ராஜா. பழைய நண்பர்கள், உறவினர்கள், ஊர் பெரியவர்கள் என நிறைய பேர் மேடையேற்றப்பட்டார்கள்.
அன்றைக்குப் பண்ணைபுரத்தில் யாருக்கும் எந்த ஜோலியும் இல்லை. கச்சேரி கேட்க காலையிலிருந்தே தயாராக இருந்தார்கள். கச்சேரிக்கு முக்கியப் பின்னணிப் பாடகர்கள் அத்தனை பேரையும் அழைத்திருந்தார் ராஜா. மாலையில் ஆரம்பித்த கச்சேரி விடிய விடிய நடந்தது. யாருக்கும் எழுந்துபோக மனமில்லை. இதே மண்ணில் ஆடிப்பாடிய ஒருவனா இத்தனை தூரம் சாதித்திருக்கிறான் என்கிற பெருமிதமும் வியப்பும் ஊர் மக்களிடையே முழுமையாக இருந்தது. அத்தனை முக்கிய தமிழ்ப் பத்திரிகைகளும் இந்தக் கச்சேரிக்குத் தங்கள் நிருபர்களை அனுப்பியிருந்தன. ஒருநாள் முன்னாடியே வந்துவிட்ட நிருபர்கள் ராஜாவின் உறவினர்கள், நண்பர்களைத் தேடித்தேடிப் பேட்டி எடுத்தார்கள்.
*
ஆரம்ப காலங்களில் ராஜா தன் ரசிகர்கள் எழுதும் கடிதங்களுக்குக் கைப்பட கடிதம் எழுதுவார். கேள்விகள் கேட்டால் அதற்கு விளக்கமாக பதில் கொடுப்பார்.
அப்போது ராஜா சாந்தோமில் வசித்து வந்தார். லெட்டர்பேடில், இளையராஜா - மியூசிக் டைரக்டர் என்று ஆங்கிலத்தில் கொட்டையாக எழுதப்பட்டு ஓரத்தில் 77447 என்று தொலைப்பேசி எண் எழுதப்பட்டிருக்கும். அப்போது ராஜாவின் முகவரி, 32, கே.எம்.என் தெரு, சாந்தோம், சென்னை -28, தென் இந்தியா. இப்படித்தான் ஆங்கிலத்தில் ராஜாவின் லெட்டர்பேடில் எழுதப்பட்டிருக்கும். என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளவும் என்று கடிதம் போடுபவர்களுக்கு, ‘குருவாக ஏற்றுக்கொள்வதற்கு யாராவது நல்ல விஷயம் தெரிந்த ஆளாகப் பார்க்கவும். அந்தத் தகுதி இந்த ஜென்மத்தில் எனக்கில்லை’ என்று பதில் போடுவார் ராஜா.
*
ராஜா அப்போதெல்லாம் மிகவும் குறும்பான ஆள். யார் பேசவந்தாலும் சரளமாகப் பேசுவார். ராஜாவின் பாட்டு மட்டுமல்ல பேச்சும் அபாரம் என்று அவர் நண்பர்கள் எண்ணிவந்த காலம் அது. இளமை ஊஞ்சலாடுகிறது பாடல் ஒலிப்பதிவின்போது கமல் அடிக்கடி வந்து பார்வையிடுவார். அப்போது ஒருமுறை ஒலிப்பதிவுகூடத்தில் கமல் இருந்தபோது ராஜா இசையமைக்கும் விதத்தைப் பார்க்க கல்லூரி மாணவர்கள் ராஜாவின் ரெக்கார்டிங் அறைக்கு வந்திருந்தார்கள்.
அப்போது ராஜா கமலின் காதில் சன்னமாகப் பேசினார். சரிசரி என்று சிரித்தபடி தலையாட்டினார் கமல்.
எஸ்.பி.பி தயாராக இருந்தார். இசைக்கலைஞர்கள் அத்தனை பேரும் ராஜாவின் கட்டளைக்காகக் காத்திருந்தார்கள். ராஜா கையசைத்தால் பாடல் ஒலிப்பதிவு ஆரம்பமாகிவிடும். மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ராஜா மட்டும் அடிக்கடி கமலிடம் சென்றுவந்தார்.
‘கமல் சார், இது சரியா, பாட்டை இப்படி பண்ணலாமா? அல்லது அப்படி பண்ணலாமா?’
‘என்னங்க டியூன் இது. மாத்துங்க. இந்த இடத்துல இந்த வாத்தியம் வேண்டாம். சரியா?’ என்றார் கமல்.
‘அப்போ பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில வர்ற...’
‘அதான். நேத்து சொன்னேன் இல்லை. அப்படியே ஃபாலோ பண்ணிடுங்க’
உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாமல் இருவரும் உரையாடல் நிகழ்த்தினார்கள். மாணவர்களுக்கு ஆச்சரியம். இது என்ன, இளையராஜா ஒரு சுயம்பு என்று சொன்னார்களே, இங்கே கமலிடம் கேட்டு அல்லவா இசையமைக்கிறார் என்று குழம்பியபடி அங்கிருந்து சென்றார்கள். அவர்கள் போனபிறகு விழுந்து விழுந்து சிரித்தார்கள் ராஜாவும் கமலும்.
*

80களில் புகழின் உச்சத்தில் இருந்தபோது ராஜாமீது ஒரு புகார் எழுந்தது. ராஜா ஏன் நல்லநல்ல பாடல்களையெல்லாம் புதியவர்களுக்கு வழங்கிவிடுகிறார்? மோசமான படங்களுக்கு ஏன் நல்ல பாடல்களை வீணாக்குகிறார்? நிறைய ரசிகர்கள் கடிதம் எழுதி ராஜாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள். இதற்கு ராஜாவின் பதில்:
கம்போஸிங்குக்கு என்முன் வந்து உட்காரும், எனக்குத் தோன்றும் மெட்டை எப்படி என்னால் நிராகரிக்கமுடியும்? நானும் இந்தப் புதியவர்களைப் போல அடையாளம் இல்லாமல் இருந்தவன் தானே!
ஒரு ஊர்ல பட இசைவெளியீட்டின் போது இளையராஜா இவ்வாறு பேசினார்:
எந்தப் படத்துக்கும் நான் மூன்று நாள்களுக்கு மேல் இசையமைத்தது இல்லை. நூறு நாள் படமானாலும், வெள்ளி விழா படமானாலும் மூன்று நாள்களுக்கு மேல் என் ஸ்டுடியோவில் அந்தப் படம் இருந்ததில்லை. நான் அந்தக் காலத்திலிருந்தே நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு எனது பெயர் பயன்பெற்று இருக்கிறது. ஒரு சிலர் என்னிடம் வந்து ஏன் அவர்களுக்கு எல்லாம் ஏன் இசை அமைக்கிறீர்கள் என்று கேட்பார்கள். நான் இசையமைத்து நீ வந்தது மாதிரி அவன் வந்து விட்டுப் போகட்டுமே. உனக்கு உண்டான இடம் உனக்கு, அவனுக்கு உண்டான இடம் அவனுக்கு என்பேன். புதியவர்களுக்கு என்றுமே நான் இசையமைக்க மறுத்ததில்லை. புதியவர்களே வாருங்கள் நான் இருக்கிறேன்.
*
முந்தானை முடிச்சு படத்தின் நூறாவது நாள் விழாவில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்க பாக்யராஜ் ஏற்பாடு செய்தார். இந்த ஒருவிஷயம்தான் ராஜாவுக்குச் சங்கடம் கொடுத்தது.
மூகாம்பிகை பக்தன் ஆனபிறகு தன் உடம்பில் எந்த ஆபரணமும் இல்லாமல் பார்த்துக்கொண்டார் ராஜா. சில நாள்கள் கையில் மோதிரம் மாட்டியிருந்தார். அந்த ஒரு விஷயமும் உறுத்தவே மோதிரத்தைக் கழற்றிவிட்டார். மிச்சம் இருந்த வாட்சையும் என்ஜினியர் ராமநாதனுக்குக் கொடுத்துவிட்டார். ஒரு மனிதன் ஆபரணங்களுக்கு அடிமையாகக் கூடாது என்கிற எண்ணம் அவர் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
முந்தானை முடிச்சு விழாவில் இதுவே சிக்கலுக்கு வழிவகுத்தது. எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் மோதிரம் கொடுத்துக்கொண்டு வந்தார். முதல்வரிடமிருந்து ஷீல்டை வாங்க மட்டும் மேடையேறினார் ராஜா. அவரைப் பார்த்தவுடன் பெரிதாகப் புன்னகை செய்த முதல்வர், ராஜாவின் முதுகில் தட்டிக்கொடுத்தார். மோதிரத்தைக் கையில் எடுத்தார். ராஜா சுதாரித்துக்கொண்டார்.
‘அண்ணே, எந்த மோதிரத்தையும் போட்டுக்குற பழக்கமில்லேண்ணே’ என்று சொல்லிக்கொண்டு தன் வெறும் கைகளைக் காண்பித்தார் ராஜா.
‘சரிப்பா, வாங்கிக்கோ’ என்று மோதிரத்தை ராஜாவின் கையருகே கொண்டுசென்றார் எம்.ஜி.ஆர். ராஜா தன் முடிவில் பிடிவாதமாக இருப்பதை உணர்ந்தார். ‘இங்க பாரு, என் கையிலயும்தான் எந்த மோதிரமும் இல்லை’ என்றார். உண்மைதான். தடியான வாட்சைத் தவிர எம்.ஜி.ஆர் கையில் வேறு எந்த ஆபரணமும் இல்லை.
‘அண்னே! உங்க சமாச்சாரம் வேறண்ணே!’ என்று அப்போதும் நழுவப் பார்த்தார் ராஜா. ‘பரவாயில்லை, வாங்கிக்கோ’ என்று எம்.ஜி.ஆர் இன்னும் நெருக்கமாக ராஜாவின் அருகில் செல்ல ராஜா பின்வாங்கினார்.
இத்தனையும் பல பேருக்கு மத்தியில் புகைப்படக்கலைஞர்கள், வீடியோ கேமராக்கள் முன்னிலையில் நடந்துகொண்டிருந்தன. ராஜாமீது எல்லோருக்கும் ஒருவித பயம். எம்.ஜி.ஆர் மோதிரத்தை கொடுக்கப் பார்க்கிறார்... ராஜா தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்கிறார்... ஐயோ, எம்.ஜி.ஆர் கோபித்துக்கொண்டால்?
அது உண்மைதான். கோபமான எம்.ஜி.ஆர் விடாப்பிடியாக மோதிரத்தை ராஜாவின் கையில் மாட்டுவதற்காக அவரது இடது கையைக் இறுக்கமாகப் பிடித்தார். ராஜாவின் மோதிர விரலில் வெடுக்கென்று மோதிரத்தை மாட்டிவிட்டார்.
அவ்வளவுதான். எல்லோரும் கைத்தட்டினார்கள். ராஜா அப்போதும் தனது கொள்கையை விடுவதாக இல்லை. அடுத்த நொடியே அந்த மோதிரத்தைக் கழற்றி அருகே அமர்ந்திருந்த பாக்யராஜின் கையில் கொடுத்துவிட்டு, எம்.ஜி.ஆரைப் பார்த்து லேசாகப் புன்னகை செய்துவிட்டு மேடையிலிருந்து இறங்கிவிட்டார்.
*
சிந்து பைரவி படத்துக்காக இளையராஜாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
விருது பற்றி என்ன சொல்கிறீர்கள் ராஜா?
‘பரிசு, விருது கிடைக்கும்னு எதிர்பார்த்து சிந்துபைரவிக்கு இசையமைக்கலே. என்றாலும், இந்த விருதின் மூலம் இந்திய அரசாங்கம் சரியான ஒரு படத்தின் இசைக்குப் பரிசு கொடுத்திருக்கிறது. ஏன் தெரியுமா... இதுவரையிலும் எத்தனையோ சாகித்யகர்த்தாக்கள் இந்த மண்ணிலே சாகித்யங்கள் செய்திருக்கிறார்கள். ‘ஆரோகணமும், அவரோகணமும் இணைந்தால் தான் சாகித்யமே’ என்கிற கருத்தை, சிந்துபைரவியில் வரும் ஆரோகணப் பாடலான ‘கலைவாணியே’ என்ற பாடல் மாற்றியிருக்கிறது.
பரிசுகளும் பாராட்டுகளும் என்னைப் பாதிப்பதில்லை. எல்லாமே எனது செயல் அல்ல. இளையராஜா என்பவன் ஒரு கருவி. எனக்குள் இருந்துகொண்டு என்னை எவரோ இயக்கிக் கொண்டிருக்கிறார்களே... அவர்களது செயல். இது அவர்களது வெற்றி. அவ்வளவுதான்..!’
*
1988ல் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றன. இரண்டு ஹீரோக்கள் நடித்த சப்ஜெக்ட். ஆனால் பெண் குரலில் மூன்று தனிப்பாடல்கள். ஒரு பூங்காவனம், நின்னுகோரி, ரோஜாப்பூ ஆடிவந்தது.
தூங்காத விழிகள் ஒன்று பாடலை யேசுதாஸும் ஜானகியும் பாடினார்கள். நல்ல வெயில் காலத்தில் பாடல்பதிவு நடந்தது. மழையை வரவழைக்கும் ராகமான அமிர்தவர்ஷனியில் அமைந்த பாடல் அது. சுள்ளுனு அடிக்கிற வெயிலில் இந்தப் பாடலா என்று யேசுதாஸும் ஜானகியும் பேசிக்கொண்டார்கள்.
பாடல் பதிவு முடிந்தபிறகு வெளியே வந்தார்கள். வாசலிலிருந்து ஓர் அடிகூட எடுத்து வைக்கமுடியாத அளவுக்கு கனமழை. அமிர்தவர்ஷினி!
*
ஹே ராம் படத்துக்கு முதலில் இசைமைத்தவர், எல். சுப்ரமணியன். சில பிரச்னைகளால் கமலும் எல். சுப்ரமணியனும் பிரிந்தார்கள். பிறகு இளையராஜா அப்படத்துக்கு இசையமைத்தார். கமல் படமாக்கிய பாடல் காட்சிகளுக்கு பாடல்கள் அமைத்துத் தந்தார்.
முழு கதையை மட்டுமல்லாது காட்சிகளையும் தெரிந்துகொண்ட ராஜா ஒரு யோசனை சொன்னார்.
‘கமல், இன்னொரு பாட்டை புதுசா சேர்க்கலாமா? அந்த ஒரு சீன்லயும் பாட்டு இருந்தா நல்லாயிருக்குமே!’
திருமணமான கமலுக்கும் வசுந்தரா தாஸுக்கும் இடையே நடக்கும் ஆரம்பச் சீண்டல்களும் அதன் வழியே நடக்கும் சங்கமத்தையும் பாட்டுக்குள் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்? அங்கே ஒரு பாடல் ஒளிந்திருக்கவில்லை?’ என்று கேட்டார் ராஜா. ‘அடடே, கரும்பு தின்ன கூலியா! கொடுங்க. கொடுங்க. பிரமாதப்படுத்திரலாம்’ என்று கமலும் குஷியாகிவிட்டார்.
ஹம்சநாதத்தில் ஒலிக்க ஆரம்பித்தது. ‘இசையில் தொடங்குதம்மா’!
கேட்ட மாத்திரத்தில் அப்பாடலின் முதல் ரசிகையானார் சரிகா கமல்ஹாசன். உடனே அவர் ராஜாவிடம் ஒரு யோசனை சொன்னார். ‘சார், இதை எல்லா டிவிகளிலும் விளம்பரப்படுத்தப் போகிறோம். எல்.சுப்ரமணியத்தின் இசைக்கும் உங்கள் இசைக்கும் உள்ள வித்தியாசத்தை ஊர் அறிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் உங்கள் திறமையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வார்கள். நீங்களும் அதன்படி பேட்டி கொடுக்கவேண்டும்.’ என்றார்.
ராஜா பதறிப் போனார். ‘என்னம்மா, என்னை நீ உயர்த்திப் பேசுவதைகூட அனுமதித்துவிடலாம். ஆனால் என்னை முன்வைத்து எப்படி இன்னொரு இசைக்கலைஞரை அவமானப்படுத்தமுடியும்? அவருக்குத் தெரிந்ததை அவர் செய்தார்; எனக்குத் தெரிந்ததை நான் செய்கிறேன்.’
ஹே ராம் யூனிட், இசையில் தொடங்குதம்மா பாடலைக் கேட்டு பரவச நிலைக்குச் சென்றது. அவர்களைப் பொறுத்தவரை அதுவே படத்தின் சிறந்த பாடல் என்று மட்டுமல்ல, ராஜா இசையமைத்ததிலேயே அதுதான் க்ளாஸ் பாடல் என்கிற முடிவுக்கும் வந்தார்கள். பாடலைக் கேட்டு குலுங்கிக் குலுங்கி அழுதார் சாரு ஹாசன். ராஜா அவரைச் சமாதானப்படுத்த, ‘என்ன சார், அழுகிற அளவுக்கு பாடல் கோரமா இருக்கா’ என்றுகூட கேட்டார். ’இல்லை சார். இப்படி ஒரு பாடல் கிடைக்கப் பணத்தைக் கொட்டிக்கொட்டிக் கொடுத்தாலும் தகுமா’ என்றார் சாரு ஹாசன்.
ஆனால், அந்தப் பாடலுக்கு ஒரு சின்ன அநியாயம் நடந்தது. இசை ரசிகர்களிடையே அந்தப் பாடல் மிகவும் பிரபலமானாலும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கு வரை பரவிச் செல்லவில்லை. ஒரே காரணம், அந்தப் பாடலை கமல் மிகவும் காதல் ரசம் ததும்ப படமாக்கிவிட்டார். படுக்கையில் நிகழும் காதல் காட்சிகள் என்பதால் அந்தப் பாடலைத் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவது கிடையாது. அதைவிடவும் குறைவான காதல் காட்சிகள் கொண்ட நீ பார்த்த பார்வைக்கு நன்றி பாட்டையே இன்றுவரைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றன.
ஹேராம் படத்தில் இசையமைப்பாளரை மாற்றியவுடன் விஷயத்தை நேராக படத்தின் எடிட்டர் ரேணு சலுஜாவிடம் கொண்டு சென்றார் கமல். நான்கு தேசிய விருதுகளை வாங்கியவர் ரேணு சலுஜா. இந்த மாற்றத்தை அறிந்து முதலில் தலையைக் கையில் வைத்துவிட்டார். ‘எனக்கு நிறைய வேலை வைக்கும் போலிருக்கு. படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளுக்குப் புதிதாக இசையமைப்பதை நான் கேள்விப்பட்டதேயில்லை’ என்று நொந்துபோனார். ஆனால் பாடல்களை எடுத்துக்கொண்டு கமல் வந்தபோது சலுஜாவுக்கு ராஜா வேலையே வைக்கவில்லை. எடிட்டிங் டேபிளில் வேலையே நடக்காதவாறு காட்சிகளுக்குக் கனகச்சிதமாக பாடல்களை அமைத்துக்கொடுத்துவிட்டார். காட்சிகளுடன் பாடல பொருந்திப் போவதைப் பார்த்து ‘அன்பிலிபவள்’ என்றார் சலுஜா.
*
ரஜினியை ஆன்மிகம் பக்கம் திருப்பியவர் ராஜாதான். ரஜினிக்கு ஆன்மிகம் மீதான பற்றுதலை அறிந்தபிறகு அவரிடம் ரமணர் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார் ராஜா. அதோடு திருவண்ணாமலையின் மகிமைகள் குறித்தும் பல மணி நேரம் பேசியிருக்கிறார். ராஜாவின் வளர்ச்சியும் அமைதியான வாழ்க்கையையும் பார்த்த ரஜினி அவர் காட்டிய வழியில் செல்ல ஆரம்பித்தார். அருணாச்சலேஸ்வரரை அடிக்கடிச் சென்று வழிபட ஆரம்பித்தார். ஆனாலும் ரஜினியின் அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற படங்களுக்கு ராஜா இசையமைக்கவில்லை.
*
ஞான ராஜசேகரின் பெரியார் படத்துக்கு ராஜா இசையமைக்கவில்லை என்றதும் சர்ச்சை உண்டானது. தன் ஆன்மிக கொள்கைகளுக்கு முரணானது என்பதால் ராஜா, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தார் என்றொரு பேச்சும் அடிபட்டது.
இளையராஜாவின் கடவுள் பக்தி ஊரறிந்தது. அதேசமயம் ராஜா, இந்தப் படத்துக்கு முன்பு, கடவுள் மறுப்புக் கொள்கை உடைய வேலு பிரபாகரனுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். கடவுள் மறுப்பை மையமாகக் கொண்ட படம், கடவுள். இயக்கம், வேலு பிரபாகரன். அந்தப் படத்துக்கு இளையராஜா தான் இசை. இந்தச் சர்ச்சை குறித்து இளையராஜாவின் பதில் இது:
‘பெரியார் படத்துக்கு இசையமைக்க என்னை முறையாக யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை. அழைப்பு விடுக்கவும் இல்லை. பிறகு ஏன் இந்த சர்ச்சையில் என்னை இழுக்கிறார்கள்? நான் ஆன்மிகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதிலே ஏற்படுத்தி, சாதிக் கொடுமைகளை அழிப்பதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால், நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை ‘பெரியார்’ படத்துக்கு இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.’
*
பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் பல பிரச்னைகளுக்கு இடையே வெளியானது. அந்தப் படத்துக்கு இசையமைத்தவர் ஹிமேஷ் ரேஷமய்யா. பாடல் வெளியீட்டு விழாவுக்கு தன் ஆருயிர் நண்பனை அழைத்தார் பாரதிராஜா. ராஜாவும் விழாவுக்கு வர சம்மதித்தார். விழா மேடையில் ராஜா பேசும்போது அத்தனை பேரும் நெக்குருகிப் போனார்கள்.
‘சினிமா விழாக்களை முடிந்தவரை தவிர்ப்பன் நான். எனது படங்களின் இசை வெளியீட்டுக்குக் கூட நான் போவதில்லை. பாரதிக்கும் இது தெரியும். இருந்தாலும், நான் தான் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார். எந்தத் தயக்கமும் இல்லாமல் நானும் வருவதாக ஒப்புக் கொண்டேன். எல்லோருக்கும் ஒரு தாய் இருப்பார்கள். ஆனால் எனக்கும், பாரதிக்கும் இரண்டு தாய்கள். எனது தாய், அவருக்கும் தாய். அவரது தாய் எனக்கும் தாய். அம்மா, தெய்வத்துக்கும் மேலே.’ என்று சொல்லிமுடித்து பாரதிராஜாவைப் பார்த்தார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். ராஜா சொன்னதை தலையை ஆட்டி ஆமோதித்தார். ராஜா தொடர்ந்தார்.
‘அவர் இயக்கிய சில படங்களுக்கு நான் இசையமைக்காமல் இருந்திருக்கலாம். என்னை அவர் கூப்பிடாமல் இருந்திருக்கலாம். அதையும் மீறி எங்களுக்குள் ஒரு ஜீவனுள்ள நட்பு உண்டு. சிறு வயதிலிருந்தே இந்த நட்பு தொடர்ந்து வருகிறது. எனக்கும், பாரதிக்கும் உள்ள நட்பை சொல்லத் தெரியவில்லை. நான் எனது சுயசரிதை எழுத உட்கார்ந்தேன். எழுத எழுத பாரதிராஜாவைப் பற்றித்தான் நிறைய எழுதிக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது, பாரதி இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் பாரதி இல்லை. எனது வாழ்க்கையில் அவரும் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறார் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.'
*

இளையராஜாவும் வைரமுத்துவும் 1986ல் பிரிந்துவிட்டார்கள். இருவரும் கடைசியாகப் பணியாற்றிய படம், புன்னகை மன்னன். சில ஆண்டுகளுக்கு முன்பு கல்கிக்கு அளித்த ஒரு பேட்டியில் ‘நான் இப்போது அதிகம் பக்குவம் அடைந்திருக்கிறேன். ராஜாவுடன் மீண்டும் இணைய ஆசைப்படுகிறேன்’ என்று சொன்னார் வைரமுத்து.
*
இளையராஜாவும் வைரமுத்துவும் மீண்டும் இணைந்தால் அது எவ்வளவு அருமையான கூட்டணியாக இருக்கும்! இப்படி எண்ணாத இசை ரசிகர்களே இருக்கமுடியாது.
ராஜாவையும் வைரமுத்துவையும் இணைத்து வைக்க நிறைய முயற்சிகள் நடந்திருக்கின்றன. பாரதிராஜா பேசிப்பார்த்தார். கஸ்தூரி ராஜா தமிழரின் வரலாறு கொண்ட ஒரு கதையைப் படமாக்க ராஜா-வைரமுத்து இருவரிடமும் பேசினார். ஆனால், நினைத்தது நடக்கவில்லை.
அப்போது இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவுக்குப் புதிது. இளையராஜாவும் வைரமுத்துவும் தன் மண்ணின் மக்கள் என்பதால் அவர்களை வைத்து படம் பண்ணப் பிரியப்பட்டார் சேரன்.
படம் - பாரதி கண்ணம்மா. தயாரிப்பாளர் ஹென்றி ராஜாவின் பெயரைப் பரிந்துரைத்ததும் சேரனுக்குப் பெரிய சந்தோஷம். இதை விட வேறென்ன கொடுப்பினை வேண்டும் என்று ராஜாவைப் பார்க்க பிரசாத்துக்குச் சென்றார் சேரன். ராஜாவிடம் இரண்டரை மணி நேரம் கதை சொன்னார். சொன்ன மாதிரி எடுத்துக்காட்டு. ஜெயிச்சிருவே என்று வாழ்த்தினார் ராஜா.
சேரனின் வண்டி அடுத்ததாக வைரமுத்துவின் வீட்டுக்குச் சென்றது.
’பாரதிராஜாவுக்குப் பிறகு மதுரை மண்ணைச் சொல்ல வந்திருக்க. ஜீவனைச் சரியா பிடிச்சிருக்கே. சிறப்பா செய்வோம் சேரன்’ என்று வைரமுத்துவும் தன் பங்குக்கு வாழ்த்தினார.
ராஜாவிடம் வைரமுத்துவைப் பற்றியும் வைரமுத்துவிடம் ராஜாவைப் பற்றி மூச்சுவிடவில்லை சேரன். ஆனால் படத்தில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டதால் இறுதியில் இசையமைப்பாளரை மாற்றவேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார் சேரன். இதனால் இளையராஜா-வைரமுத்து என்கிற கூட்டணி மறுபிறப்பு எடுக்காமல் போனது.
தன் முயற்சியில் தோற்றுப்போன சேரன் தன் சுயசரிதையில் இவ்வாறு வருத்தப்பட்டுக்கொள்கிறார்.
‘இருபது ஆண்டுகள் தமிழ் பூமியின் காற்றைக் கௌரவித்தவர்கள் வெவ்வேறு பாதைகளில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்த தருணம் அது. கடவுள்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்ட பக்தனாக என்னை நான் நினைத்தேன். ஆனால், பாரதிராஜாவாலேயே முடியாத ஒன்றை பாவப்பட்ட பையன் என்னால் சாதிக்க முடியுமா? ’
*
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியா திரும்பிய ரஹ்மான், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரஹ்மானிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ’ராஜாவுக்கு முன்னால் நீங்கள் ஆஸ்கர் விருது வாங்கியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’
விருது வாங்கிய பிறகு ராஜா பற்றிய ரஹ்மானின் மதிப்பீடு எப்படி இருக்கிறது என்பதைச் சோதிக்கும்படியான கேள்வி. நிதானமாகப் பதில் சொன்னார் ரஹ்மான்.
‘இளையராஜாவுக்கு முன்பு இந்த ஆஸ்கர் விருதுகள் சாதாரணமானவை. அவருடைய இசை சர்வதேச எல்லைகளைக் கடந்தது. சரியான முறையில் அவரது இசை எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் எப்போதோ அவர் ஆஸ்கர் விருதினை வென்றிருப்பார். அவர் ஆஸ்கருக்கு அப்பாற்பட்டவர். அவரது இசையும் அப்படித்தான்... அவருக்கும் சர்வதேச வாய்ப்பு வந்து, அந்த இசை, ஃபாக்ஸ் மாதிரி ஒரு நிறுவனத்தின் மூலம் அகாடமிக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தால் நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைத்திருக்கும்.’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

