அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

நீதிக்கான தொடர் ஓட்டம்: அங்கீகாரம் திரைவிமர்சனம்

அங்கீகாரம் திரைப்படத்தின் விமர்சனம்...

News image
Updated On :26 ஜூன் 2026, 9:59 am IST

அங்கீகாரம் - திரைவிமர்சனம்

2.5/5

இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் நடிகர்கள் கே.ஜே.ஆர் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் அங்கீகாரம். இப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியல் எளிய விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை எப்படி நாசமாக்குகிறது என்பதை பேசியிருக்கிறது இத்திரைப்படம்.

வடசென்னை பகுதியைச் சேர்ந்த தடகள வீரரான சத்யா காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெல்வதை இலட்சியமாக கொண்டு பயிற்சி எடுத்து வருகிறார். வறுமை, சாதிய பாகுபாடு, அதிகாரமற்ற நிலை என சூழ்ந்திருக்கும் வாழ்க்கையின் மத்தியில் தனது கனவை சுமக்கும் அவருக்கு பல்வேறு தடைகள் மேலும் சுமைகளாகின்றன. இந்நிலையில் அனைத்து தகுதிகளும் இருந்தாலும் அவரை காமென்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள தடுக்கும் கூட்டத்தை எப்படி வென்றார் சத்யா? அதற்காக அவர் சந்தித்த சிக்கல்கள் என்ன? என சமகால சமூக சிக்கல்கள் விளையாட்டுத்துறையில் எப்படி எதிரொலிக்கிறது என்பதை பேசியிருக்கிறது அங்கீகாரம் திரைப்படம்.

அறம், க.பெ.ரணசிங்கம், ஹீரோ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த கே.ஜே.ஆர் இந்தப் படத்தில் நடிகராக செலுத்தியுள்ள உழைப்பு கவனம் ஈர்க்கிறது. தீப்பெட்டி போன்ற சிறிய வீட்டுக்குள் இருந்து போராடும் இளைஞராக அவர் வெளிப்படுத்தியுள்ள நடிப்பு கவனம் ஈர்க்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் அவர் வாதிடும் இடங்களில் வெளிப்படுத்தும் வசனங்கள் ஒவ்வொன்றும் அழுத்தமாகவும், ஆழமாகவும் அமைந்துள்ளது படத்திற்கு பெரும் பலம். விளையாட்டு வீரராக தோற்றமளிக்க அவர் செலுத்தியுள்ள உடல் உழைப்பு கண்முன் தெரிகிறது. சில இடங்களில் அவரது நடிப்பு சற்று நாடகத்தன்மையுடன் இருந்தாலும் அதை அடுத்தடுத்த காட்சிகள் மறக்கடிக்கச் செய்துள்ளது பாராட்டுக்குரியவை.

நாயகனின் தாயாக வரும் நடிகை ரமாவின் நடிப்பு இப்படத்திற்கான உயிரோட்டமான கதாபாத்திரம். படத்தின் துவக்கத்தில் வரும் காட்சி நமக்கே கண்களை மூடிக்கொள்ளச் செய்யும் வகையில் அமைத்திருப்பது உண்மையான பிரச்னையை வெளிச்சமிடுவதற்கான வாய்ப்பு. இத்துடன் தனக்கு தனியான உணவு, தனது குழந்தைகளுக்கு தனியான உணவு என அவர்கள் பின்பற்றும் உணவுப் பழக்கங்கள் அதற்கான காரணங்கள் ஆகியவை கவனிக்கத்தக்கவை.

இவர்களுடன் சிந்தூரி விஸ்வநாத், வசுந்தரா, ரங்கராஜ் பாண்டே, விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, ஆண்டனி, மன்சூர் அலிகான் என பலர் நடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அரசு வழக்கறிஞராக நடித்துள்ள விஜி வெங்கடேஷின் நடிப்பு அசத்தலாக அமைந்திருக்கிறது.

உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டிருக்கும் இப்படம் விளையாட்டுத்துறையில் நடக்கும் அதிகார பிரயோகம், சாதிய ஏற்றத்தாழ்வு, அலட்சியப் போக்கு, ஊழல் என சகலத்திற்கு எதிராகவும் சாட்டையை சுழற்ற முயன்றிருக்கிறது இத்திரைப்படம். எளிய பின்புலத்தில் இருந்து வரும் தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் சவால்கள், அதிலிருந்து மீள அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை காட்சிக்கு காட்சி கடத்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

“இப்படியே போனா இந்தியாவுல ஒலிம்பிக் இருக்கும், ஆனா ஒலிம்பிக்ல இந்தியா இருக்காது”, ”கிரிக்கெட்டுக்கு கிடைக்கற முக்கியத்துவம் மத்த விளையாட்டுக்கு ஏன் கிடைக்கல?”, “ என இரண்டாம் பாதியில் விரியும் வசனங்கள் திரைக்கதைக்கு வலுசேர்க்கின்றன.

பெண் விளையாட்டு வீரர்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடங்கி எளியவர்கள் அணுக முடியாத நீதிமன்ற நடைமுறைகள் வரை சாமானியர்கள் எதிர்கொள்ளும் அதிகார பீடங்களை பேசியிருக்கிறது திரைப்படம்.

எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை பேசும் அதேநேரத்தில் அதை பிரசாரமாக மாறிவிடும் அபாயத்தைத் தடுக்க சற்று முயற்சித்திருக்கலாம். நீதிமன்ற காட்சிகள் இழுத்துக் கொண்டே செல்வது, தவிர்த்திருக்க வேண்டிய காட்சிகள், நீளும் இரண்டாம் பாதி என படத்தை பின்னோக்கி இழுக்கும் இடங்களை கவனிக்கத் தவறியிருக்கிறது படக்குழு.

கேமரா விஸ்வநாத், ராமு தங்கராஜின் கலை இயக்கம் பாராட்டப்பட வேண்டிய பங்களிப்பு. ஜிப்ரானின் இசை திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறது.

மல்யுத்த வீராங்கனைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், அதை எதிர்த்த அவர்களது போராட்டம் என நிஜ வாழ்க்கையின் காட்சிகளை திரையில் காட்டி படத்திற்கு மட்டுமல்லாமல் படைப்பாளியாகவும் நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் தென்பாதி.

பொழுதுபோக்கு என நினைக்கும் விளையாட்டில் எத்தனை அரசியல் இருக்கிறது என அழுத்தமாக காட்டிய அங்கீகாரம் திரைப்படம் வரவேற்கப்பட வேண்டிய படைப்பு.

Summary

Relay Run for Justice: 'Angikaaram' – Film Review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.