
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரை விமர்சனம்!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சென்னையில் மிகப்பெரிய தொழிலதிபராக இருப்பவர் சஞ்சய் விஸ்வநாத் (நடிகர் சூர்யா). அவரின் அம்மாவாக ராதிகா. என்னதான் கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும் மகனுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்கிற வருத்தத்தில் ராதிகா இருக்கிறார். இவ்வளவு பணம், அழகான தோற்றம் கொண்ட சஞ்சய்க்கு பெண் கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சூர்யாவே திருமணம் வேண்டாம் என்கிற முடிவுடனே வாழ்ந்து வருகிறார். மகனுக்கு 42 வயதாகிவிட்டது! தனக்குப் பின் தன் மகனை யார் பார்ப்பார்? அவனுக்கு ஒரு வாரிசு வேண்டாமா? என ராதிகா ஏங்கும்போது சூர்யா வாடகைத்தாய் மூலம் குழந்தையைப் பெறுகிறார். ஒருநாள் அக்குழந்தைக்கு உடல் நலப்பாதிப்பு வருகிறது. இக்குழந்தையைப் பெற்றவர்தான் இதற்கு உதவ முடியும் என்கிற நிலை. சூர்யா அந்தத் தாயைக் கண்டுபிடித்து சென்னை அழைத்து வருகிறார். இனி திருமணமே வேண்டாம் என நினைத்த சூர்யா என்ன ஆகிறார்? அக்குழந்தையின் அம்மாவுக்கும் சூர்யா குடும்பத்திற்கும் இடையே நிகழும் பிணைப்புகள்... இறுதியில், என்ன முடிவு எடுக்கப்படுகிறது? என்கிற சுவாரஸ்யம் குறையாத திரைப்படமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.
இயக்குநர் வெங்கி அட்லூரி நல்ல கமர்சியல் இயக்குநர் என்பதை இப்படத்திலும் வலுவாக பதிவு செய்துள்ளார். பெரிய நட்சத்திர நடிகரை வைத்து ’மாஸ்’ இல்லாமலே உணர்வுப்பூர்வமான வெற்றித் திரைப்படத்தைக் கொடுக்க முடியும் என்கிற முயற்சியில் வென்றிருக்கிறார். மிகப்பெரிய பணக்காரராக சூர்யா காட்டப்பட்டாலும் கதை முழுக்க நம்மில் ஒருவர் என்கிற குணங்களால் இயல்பாக மனதில் பதிகிறார். சிறு வயதில் தன் தந்தையால் அடைந்த ஏமாற்றத்தால் திருமணமே கூடாது என இருக்கும் சூர்யாவின் மனம் மமிதா பைஜூவின் வருகைக்குப் பின் மெல்ல கரைந்து எமோஷனலாக மாறும் இடங்கள் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு குடும்பத்திற்குள் என்னென்ன வகையான உறவுகளும் குழப்பங்களும் உள்ளனவோ அதையெல்லாம் ஒரே கதைக்குள் கொண்டு வந்து நிறைவான அனுபவத்தை வழங்கியுள்ளார் இயக்குநர்.
கண்டிப்பாக குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாற பல வாய்ப்புகள் உள்ளன. அம்மா, அப்பா, காதல், குடும்பம் என ஒவ்வொரு உறவுகளின் மேன்மையான பக்கங்களையும் அழகாக எழுதப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஜாலியான அம்மா - மகனான நடிகர்கள் சூர்யா, ராதிகாவின் உறவு ஒருகட்டத்தில் உணர்வுப்பூர்வமாக மாறும்போது பலரும் கண்கலங்குவதைப் பார்க்க முடிகிறது. இன்னொரு புறம் திருமணமே வேண்டாம் என இருக்கும் சஞ்சய் விஸ்வநாத் அதனை நோக்கிச் செல்கிறாரா? என்கிற தடுமாற்ற உணர்வுகளும் இரண்டாம் பாதியில் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது.
ஆண் - பெண் காதலில் வயது வித்தியாசம் பிரச்னையா என்கிற கோணத்தை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் வேறு விஷயங்களையும் தொட்டு புத்திசாலித்தமான கிளைமேக்ஸுடன் படம் நிறைவடைகிறது.

ஆனால், முதல்பாதி - இரண்டாம்பாதியில் சில இடங்களில் தொய்வுகள் தென்படுகின்றன. அதேநேரம், அடுத்தது என்ன என்கிற சுவாரஸ்யமான காட்சிகள் அக்குறையையும் மறைக்கும் வண்ணமே உள்ளது. நிறைய கதாபாத்திரங்கள் என்பதால் அதற்குரிய சிறிய பலவீனங்களும் இருக்கின்றன. இருந்தாலும், கதையை அவை பாதிக்கவில்லை.
பணத்திமிர் குறித்து சூர்யா பேசும் வசனங்கள், அப்பா - மகன் உறவின் அழுத்தமான பக்கங்கள், தன் கணவன் எடுத்த முடிவில் ஏமாற்றமடைந்தாலும் பிற்காலத்தில் இன்னொரு குடும்பத்தையும் ஏற்றுக்கொள்ளும் ராதிகாவின் அன்பு, தன் ஊழியர்களை சகோதரர்களாக நடத்தும் சூர்யா என எங்கும் நெகிழ்ச்சியான பக்கங்களாக நிறைந்திருக்கிறது. மகனைப் பார்த்துக்கொள்ள சூர்யா நேரம் ஒதுக்குவது; ராதிகாவுடன் இணைந்து மமிதா பைஜூ செய்யும் சேட்டைகள் என பல இடங்களில் நகைச்சுவைக் காட்சிகள் கைகொடுத்துள்ளன.
நடிகர் சூர்யா தனித்துவமான கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சூர்யாவின் சிறந்த திரைப்பட வரிசையில் இடம்பெறும் தகுதியுடன் உள்ளது. சரியான முடிவுகளை எடுக்கும் தொழிலதிபராக, தாயில்லாத மகனுக்கு அப்பாவாக, தாய்க்கு நல்ல மகனாக, தன்னைச் சுற்றிவரும் மமிதா பைஜூவிடமிருந்து தப்பிக்கப் போராடும் ஆணாக என அனைத்து உணர்வுகளையும் நன்றாகக் கடத்தியிருக்கிறார். இடைவேளைக்குப் பின் ஒரு இழப்பு நிகழ, சூர்யா கண்ணீர்விடும் காட்சிகள் தொந்தரவு செய்கின்றன. நீண்ட நாள் கழித்து சூர்யாவைக் கொண்டாடும் குடும்பத் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தின் கதையை மிக உயிரோட்டமாக மாற்றியதில் நடிகை மமிதா பைஜூவுக்கு பெரிய பங்கு இருக்கிறது. அட்டகாசமான உடல்மொழிகளைக் கொடுத்து சிரிக்க, அழுக வைக்க அவரால் முடிகிறது. திரைத்துறையில் நீண்ட காலம் நடிக்கக் கூடிய நடிகையாக இருப்பார். என்ன ஒரு கரிஸ்மா? என வியப்பளிக்கிறார். துறுதுறுவென இருக்கும் இளம்பெண்ணாக, எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நேரடியாகக் கேட்கும் குணம் கொண்டவராக, ராதிகாவை அத்தை எனக் கூப்பிடும் போது வெளிப்படும் முகபாவனை என கொள்ளையடிக்கிறார். மமிதா பைஜூவைப் பிடிக்காதவர்களுக்குக் கூட இனி பிடித்துவிடும் அளவிற்கு நடித்திருக்கிறார். படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சூர்யாவைத் திருமணம் செய்ய வேண்டும் என முயற்சியில் இது தவறாக இருக்கிறதே என நினைத்தால் காட்சிகள் நகர, நகர திருமணத்திற்குப் பின் படிக்கலாமே? என ரசிகர்களை ஏங்க வைக்கும் அளவிற்கு காதலைக் கொடுக்கிறார். 20 வயது வித்தியாசம் எல்லாம் எனக்குப் பிரச்னை இல்லை என சூர்யாவிடம் கெஞ்சும் காட்சிகளில் நமக்கே பரிதாபம் ஏற்படுகிறது.

நடிகை ராதிகா சரத்குமாருக்கு இன்னொரு நல்ல கதாபாத்திரம். சூர்யாவை சஞ்சய் கண்ணு என அழைப்பதிலிருந்து மமிதா பைஜூவுடன் இணைந்து சிரிக்க வைப்பது; அழ வைப்பது என பல விஷயங்களைச் செய்திருக்கிறார். நடிகர்கள் சுனில் ரெட்டி, ரவீனா டாண்டன் உள்ளிட்டோரும் நல்ல பங்களிப்பைச் செய்திருக்கின்றனர்.
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு, ஜிவி பிரகாஷின் பின்னணி இசை; பாடல்கள் அனைத்தும் பலத்தைக் கொடுத்திருக்கின்றன. சில சண்டைக் காட்சிகளை எடிட் செய்த விதமும் நன்றாக இருந்தன. சோர்வடையாத திரைக்கதைக்கு எடிட்டர் நவீன் நூலியின் பங்கும் தெரிகிறது. தெலுங்கு இயக்குநர் இயக்கினாலும் தமிழ்த் திரைப்படமாக உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உணர்வுப்பூர்வமான நல்ல திரைப்படம் என்கிற எண்ணத்தையே கொடுக்கிறது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் என உறுதியாகச் சொல்லலாம்!
The film Viswanath & Sons, starring actor Suriya, has been released in theaters today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








