மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

‘ஆடை’ டீசர் வெளியான பிறகு விஜய் சேதுபதி படத்திலிருந்து தூக்கியெறியப் பட்டுள்ளேன்: அமலா பால் வேதனை!

படத்திலிருந்து நான் தூக்கியெறியப்பட்டுள்ளேன். பட நிறுவனத்துக்கு ஏற்ற நடிகையாக நான் இல்லை என...

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:22 am

எழில்

விஜய் சேதுபதி நடிக்கும் VSP33 என்கிற படம் கடந்த மாதம் தொடங்கியது. விஜய் சேதுபதி நடிக்கும் 33-வது படம் என்பதால் தற்காலிகமாக #VSP33 என அழைக்கப்படுகிறது.

பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விஜய் சேதுபதி இப்படத்தின் இசைக்கலைஞராக நடிக்கிறார். இசை - நிவாஸ் கே. பிரசன்னா. ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசுவாமி. இப்படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் மேலும் இரு கதாநாயகிகள் இப்படத்தில் நடிக்கவுள்ளார்கள் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஆடை படத்தின் டீசர் வெளிவந்தபிறகு தன்னைப் படத்திலிருந்து நீக்கியுள்ளார்கள் எனப் பட நிறுவனத்துக்குக் கண்டனம் தெரிவித்து நடிகை அமலா பால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

VSP33 என்கிற படத்திலிருந்து நான் தூக்கியெறியப்பட்டுள்ளேன். பட நிறுவனத்துக்கு ஏற்ற நடிகையாக நான் இல்லை எனச் சாதாரணமாகக் காரணம் கூறப்பட்டுள்ளது.

இது,  என் திரை வாழ்க்கையில் பட நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறேனா இல்லையா எனச் சுயபரிசோதனை செய்ய வைக்கிறது. கடந்த பத்து வருடத் திரை வாழ்க்கையில் இந்தக் குற்றச்சாட்டை என் மீது எந்தவொரு பட நிறுவனமும் வைக்கவில்லை. பதிலாக, சந்தர்ப்பச் சூழலில் பட நிறுவனங்களுக்கு நான் ஒத்தாசையாக இருந்துள்ளேன். 

உதாரணமாக, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் என் சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்தேன். இன்னும் சொல்லப் போனால் பட வெளியீட்டின்போது நிதிச்சிக்கலில் இருந்த தயாரிப்பாளருக்குக் கடனுதவியும் செய்துள்ளேன். தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டபோது என் சம்பளத்தை முழுதாகக் கொடுக்கக் கோரியும்  கடனைத் திருப்பி அளிக்கக் கோரியும் அவருக்கு எதிராக வழக்குத் தொடரக்கூடாது என முடிவெடுத்தேன். 

அதோ அந்தப் பறவை போல படத்தின் படப்பிடிப்பில் கிராமத்தில் தான் நான் தங்கினேன். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படம் அது. நகரத்தில் உள்ள விடுதியில் என்னைத் தங்க வைத்திருந்தால் பணமும் நேரமும் வீணாகியிருக்கும். பல நாள்கள் தொடர்ச்சியாக இரவும் பகலும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது.  எனக்குக் காயம் ஏற்பட்டபோதும் நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக 5 மணி நேரம் கூடுதலாக இருந்து நடித்துக்கொடுத்துவிட்டு வந்தேன். கடைசி நாளின் படப்பிடிப்பின் மொத்தச் செலவையும் நான் ஏற்றுக்கொண்டேன். இதன்மூலம் படத்தின் தரம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டேன். 

VSP33 படத்தில் நான் அணியவேண்டிய உடைகளுக்காகத் தற்போது மும்பையில் உள்ளேன். போக்குவரத்து, தங்கும் செலவுகளையெல்லாம் நானே ஏற்றுக்கொண்டேன். செலவுகள் குறித்து சந்தரா நிறுவனம் முனகுவார்கள். திடீரென தயாரிப்பாளர் ரத்தினவேலு குமார், என்னுடைய தேவைகள் மற்றும் நிபந்தனைகள் சந்தரா நிறுவனத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதால் நான் இப்படத்தில் இல்லை எனத் தகவல் அனுப்பியுள்ளார். ஊட்டியில் தங்குவது குறித்த எனது கோரிக்கைகளைக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுகுறித்து என்னைத் தொலைப்பேசியில் அழைத்து விவாதிக்க அவர் விரும்பவில்லை. பதிலாக, படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்  சமயத்தில் படத்தில் இருந்து என்னைத் தூக்கியெறிந்துள்ளார். 

இந்தச் சர்ச்சை நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை. ஆடை டீசர் வெளியான பிறகு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது மட்டும் சரியாகத் தோன்றுகிறது. ஆடை டீசர் வெளியீட்டுக்குப் பிறகு இது நடந்திருப்பதால் சந்தரா பட நிறுவனத்தின் பிற்போக்குத்தனத்தைக் காட்டுகிறது. அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளால் என்னுடைய கெளரவம் திரையுலகில் பாதிக்கப்பட்டுள்ளது. 

கதாபாத்திரத்துக்காக எந்த முயற்சியையும் எடுக்கக்கூடியவள். என் கதாபாத்திரத்துக்கு நேர்மையாக நடப்பவள். ஒரு நடிகையின் உணர்வுபூர்வமான முயற்சியை போலி சினிமா முதலீட்டாளர்கள் நிராகரிப்பது வருத்தமளிக்கிறது. 

நல்ல படங்களுக்குத் தகுதியானது தமிழ்நாடு. ஆனால் பிற்போக்குத்தனமான பட நிறுவனங்களின் மனநிலை மாறினால் மட்டுமே அது நடக்கும். மசாலா படங்கள் மட்டுமே ஓடும் என்கிற நிலைமை மாறிவிட்டது. இப்போது நல்ல உள்ளடக்கம் உள்ள படங்கள் வென்றுள்ளன. 

குறிப்பு: விஜய் சேதுபதி, உங்களை எவ்விதத்திலும் இந்த அறிக்கை குற்றம்சாட்டவில்லை. நான் உங்களுடைய பெரிய ரசிகை. உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன். நான் தொழில்முறையில்லாமல் நடந்துகொள்வதாக சந்தரா பட நிறுவனம் வதந்தி பரப்புவதை விளக்கும் அறிக்கையே இது. என் ஏமாற்றத்தின் வெளிப்பாடே இந்த அறிக்கை என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.