சர்ச்சைக்குரிய ஆலப்பாக்கம் வீடு, 1994 ல் வீட்டு மனையாக வாங்கப்பட்டு 1995 காலகட்டத்தில் வீடாகக்கட்டப்பட்டது. அப்போது நான் மைனர். 14 வயதில் முதன் முறையாக விஜய்யுடன் ‘சந்திரலேகா’ திரைப்படத்தில் அறிமுகமானேன். அதைத் தொடர்ந்து மாணிக்கம், மற்றும் பிறமொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது நடிப்பிற்காக பெறப்பட்ட சம்பளத் தொகையும் கூட இந்த வீட்டின் கட்டுமானத்தில் செலவிடப்பட்டிருக்கலாம். அதைப் பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது. என் அம்மா மஞ்சுளா, ஒரு காலத்தில் எம் ஜி ஆர், சிவாஜி முதல் தென்னிந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை. அவர் சம்பாதித்த தொகையெல்லாம் எங்கே போனது. அவரது பெயரில் இருந்த சொத்துக்களுக்கு எல்லாம் அவருக்குப் பிறந்த மூன்று மகள்களான எனக்கும் என் சகோதரிகளுக்கும் உரிமை இருக்கிறது தானே?! என்னை விட, பாட்டி சொத்தில் பேரன், பேத்திகளுக்கு உரிமை இருக்கிறது தானே? அப்படிப் பார்த்தால் என் தந்தை என் மகளையும் சேர்த்துத் தானே அந்த வீட்டில் இருந்து வெளியேற்றி இருக்கிறார். இது எப்படி நியாயம் ஆகும்? இன்று என் அப்பா பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். என் பெயரில் ஒரு சொத்து கூட இல்லை என்று, அப்படியானால் அவர் சம்பாதித்த சொத்துக்களும், என் அம்மா மஞ்சுளா சம்பாதித்த சொத்துக்களும் என்னவாகின? யார் பெயருக்கு மாற்றப்பட்டன? என் தங்கைகள் இதைக் கேட்க மாட்டார்கள். அவர்களை எளிதாக ஏமாற்றி விடலாம். ஆனால், என் அம்மாவிற்குப் பிறந்த மூன்று மகள்களில் நான் தான் ஆண்பிள்ளை போல தைரியமானவள். என்னால் குடும்பத்தின் இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்க்க முடியாது.