இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான மறைந்த என் டி ஆர் வாழ்க்கைச் சித்திரம் திரைப்படமாகி வருவது பழைய செய்தி. இத்திரைப்படத்தில் என் டி ஆராக நடித்துக் கொண்டிருப்பது என் டி ஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா. என் டி ஆரின் மனைவி பசவதாரகமாக நடித்துக் கொண்டிருப்பது நடிகை வித்யாபாலன். இவர்களுடன் என்டிஆரின் அரசியல் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நபரும், தற்போதைய ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது நடிகர் ராணா டகுபதி என்று கூறப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடு, என் டி ஆரின் தெலுகு தேசம் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக மட்டுமே செயல்படவில்லை. பின்னாட்களில் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும் ஆனவர். என் டி ஆரின் மகள் புவனேஸ்வரியின் கணவராகி என் டி ஆரின் மருமகனாகவும் ஆனார். அவரது வேடத்தில் ராணா டகுபதி நடிக்கவிருப்பதால் என் டி ஆர் வாழ்ந்த வீட்டுக்கே அழைத்துச் செல்லப்பட்டு திரைப்படக் காட்சிகள் அவருக்கு விளக்கப்பட்டன. அது மட்டுமல்ல தனது கதாபாத்திரத்தை திரையில் ராணா சித்தரிக்கவிருப்பதால் முதல்வர் சந்திர பாபு நாயுடு தனது பிஸியான வேலைப்பளுவின் நடிவில் ராணாவைச் சந்தித்து , தனக்கும் மறைந்த என் டி ஆருக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி விளக்கத் தவறவில்லை.