உங்கள் வீட்டில் எல்லா இடங்களுமே உங்களுக்குப் பிடித்தவையாக இருக்கலாம். சொந்த வீடோ, வாடகை வீடோ, எதுவானாலும் இது என்னுடைய வீடு என்று சொல்லிக் கொள்ள ஒரு கூடு இருக்க வேண்டும் என்பது தான் மனிதர்கள் அனைவரது விருப்பமாகவும் இருக்கிறது. அந்த வீட்டில்... அதாவது உங்களது வீடாகிய கூட்டில் உங்களுக்கே உங்களுக்கென்று பிடித்தமான ஓரிடம் நிச்சயம் இருக்கக் கூடும். அது உங்களது மொட்டைமாடி வெட்டவெளியாகவோ, அமைதியான வரவேற்பறையாகவோ, பால்கனியாகவோ, மாடித் தோட்டமாகவோ, மித வெளிச்சமும் அமைதியும் கொண்ட படுக்கையறையாகவோ இருக்கலாம். ஏன், பலருக்கு சமையல் அறை கூட மனதுக்கு நெருக்கமான இடமாக அமைந்து போயிருக்கலாம். சிலருக்கு குளியலறை. சிலருக்கு டைனிங் டேபிள். எப்படி அந்தந்த இடங்கள் அவரவருக்குப் பிடித்துப் போகிறது என்றால், அந்தந்த இடங்களோடு மனம் உருவாக்கிக் கொள்ளும் பிணைப்பு தான் அந்த நெருக்கத்துக்குக் காரணம்.