எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவைப் பொருத்தவரை அதில் கலந்து கொண்ட 16 பெண்களைப் பற்றியும் நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்த பார்வையாளர்களைக் காட்டிலும் உடனிருந்து பழகிய நான் நன்கு அறிவேன். எனக்கு என் திருமணத்தை விட அந்தப் பெண்களுடனான நட்பிலும், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையிலும் எந்த விரிசலும் வந்து விடக்கூடாது எனும் உணர்வு அதிகமிருந்தது. ஏனென்றால், நாங்கள் நிகழ்ச்சியைத் தொடங்கும் போது , இது புதுமையான நிகழ்ச்சி, மக்கள் விரும்பி பார்ப்பார்கள், எனக்கொரு வாழ்க்கத்துணை தேடும் முயற்சியில் நான் வெற்றி பெறுவேனா? என்றெல்லாம் ஆச்சர்ய எதிர்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் தான் தொடங்கினோம். அப்போது நாங்கள் முழுவதுமாக உணர்ந்திருக்கவில்லை. இது எத்தனை எமோஷனலான விஷயம் என்று. சில விஷயங்களை அனுபவத்தால் தான் உணரமுடியுமென்பார்கள். அப்படித்தான், நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு பெண்ணின் பெற்றோருடனும், உறவினர்களுடனும் பேசப் பேச, அந்தப் பெண்களுடன் பழகப் பழக அவர்களில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுப்பது எனக்கு மிகக் கஷ்டமான காரியம் என்று தோன்றியது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களில் யாராவது ஒருவரை மட்டுமே நான் தேர்ந்தெடுத்திருந்தால் நிச்சயம் அது மற்றவர்களைக் காயப்படுத்தி இருக்கும். நான் அதைத் தவிர்க்க நினைத்தேன்.