'அப்பா, சாவித்ரிஅம்மாவைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நானும் என் அக்காவும் பிறந்து விட்டோம். சாவித்ரியுடன் திருமணம் ஆனதன் பின்னும் அப்பாவுக்கு எங்கள் அம்மாவின் மீதிருந்த நேசமும், மரியாதையும் அப்படியே தானிருந்தது. அப்படி இருக்க என் அம்மாவுடனான உறவில் காதல் இல்லை என எப்படிக் கூற முடியும். இது தவறான சித்தரிப்பு, அதுமட்டுமல்ல, என் அப்பா தான் சாவித்ரிக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்தார் என்பதும் தவறான தகவல், சாவித்ரி மூக மனசுலு சினிமாவை (தமிழில் பிராப்தம்) சிவாஜியை நாயகனாக வைத்து தயாரித்துக் கொண்டிருக்கும் போது அந்தத் திரைப்படத்தை கை விட்டு விடலாம், அது நஷ்டத்தையே தரும் என சாவித்ரியை கன்வின்ஸ் செய்ய என் தந்தை அவரது வீட்டுக்குச் சென்ற போது நானும் அவருடன் சென்றிருந்தேன். அப்போது சாவித்ரி வாட்ச்மேன் மூலமாக எங்களை வீட்டுக்குள் நுழைய முடியாமல் செய்தார். அதன் பிறகு நான் வேறு எப்போதும் அவரைக் காணச் சென்றதில்லை. உண்மை இப்படி இருக்க... என் தந்தையால் தான் சாவித்ரியின் வாழ்வு அழிவுப்பாதைக்குச் சென்றது போல காட்சிகளை சித்தரித்திருப்பது தன்னை மிகுந்த மனவருத்தம் அடையச் செய்திருப்பதாக ஜெமினியின் இரண்டாவது மகளும், பிரபல மகப்பேறு மருத்துவருமான டாக்டர் கமலா செல்வராஜ் ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் குறித்து தனது புகாரை முன் வைத்துள்ளார்.