இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் சாலையில் தன்னைக் கடந்து சென்ற காரில் இருந்த ஒரு மனிதர் போகிற போக்கில் குப்பையை வீசி விட்டுச் சென்றதைக் கண்டார். கண்டவர் மற்ற எல்லோரையும் போல சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு அப்படியே நகராமல், மெனக்கெட்டு தனது காரை நிறுத்தி, குப்பையை சாலை வழியில் வீசியெறிந்த மனிதரிடம் அவரது செயலைக் கண்டிக்கும் விதத்தில் ‘ஏன் இப்படி சாலையில் பிளாஸ்டிக் குப்பையை எறிந்து விட்டுப் போகிறீர்கள்? இப்படியெல்லாம் சாலையில் குப்பையை வீசி விட்டு போய்விட முடியாது, குப்பைகளைக் கொட்ட குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்துங்கள்’ என்று எச்சரித்து விட்டுச் சென்றார். அனுஷ்காவின் இந்தச் செய்கையை அவரது கணவர் விராட் கோலி ஆதரித்ததோடு காணொளியாகப் பதிவு செய்து கீழ்கண்ட வாக்கியங்களுடன் இணையத்திலும் வெளியிட்டார்.