இதை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மறுத்துள்ள ஜீவிதா, இப்படி ஒரு அவதூறை தன் மேல் எழுப்பிய குற்றத்துக்காக சம்மந்தப்பட்ட சமூக ஆர்வலர் சந்தியா மீது ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது மட்டுமல்ல சந்தியா தன் மீது வைத்த குற்றச்சாட்டை மறுக்கும் விதமாகவும், சினிமா பிரபலங்கள் என்றால் என்ன விதமாக வேண்டுமானாலும் பேசலாம், அவர்கள் வெறும் கிள்ளுக் கீரைகள் எனும் ரீதியில் எதை வேண்டுமானாலும் பேசி விடுவதா? கையில் ஒரு மைக்கும், பேச வாய்ப்பளிக்க ஒரு சேனலும் கிடைத்து விட்டால் சந்தியா போன்றவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா? நான் இந்த சினிமாத்துறையில் 30 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பு நடிகையான ஒரு பெண் தனக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புத் தரவில்லை. தன்னை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள் என்று இன்று வந்து ஊடகங்களில் சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தால் அதற்கு யார் பொறுப்பு? அப்படியானால் வாய்ப்புக் கிடைத்திருந்தால் இவர் இந்தக் குற்றச்சாட்டை எல்லாம் முன் வைத்திருக்க மாட்டாரா? இதென்ன அக்கிரமமாக இருக்கிறது? ஒரு பெண்ணுக்கு தான் ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரிந்தே ஏமாறுவாளா? அப்படி அவள் ஏமாற்றப்பட்டிருந்தால், ஏமாற்றிய நபரை எங்களைப் போன்றவர்கள் இயங்கும் சினிமா அமைப்புகளின் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள். நாங்கள் இரு தரப்பையும் விசாரித்து குற்றம் நிஜமென்றால் தவறு செய்தவர்களை செருப்பால் அடித்து நீதி வழங்குகிறோம். அதை விட்டு விட்டு யாரோ ஒரு சிலர் அப்படித் தவறானவர்களாக இருப்பதை வைத்துக் கொண்டு மொத்த திரைத்துறையினர் மீதும் சேற்றை அள்ளி வீசக் கூடாது. என்ன தெரியும் இவர்களுக்கு ஒரு சினிமா எடுப்பதில் இருக்கும் சிரமங்கள்.