ஸ்ரீ லீக்ஸின் உச்சகட்டமாக டோலிவுட்டின் பாரம்பரிய தயாரிப்பாளர் குடும்பங்களில் ஒன்றான ராமாநாயுடு குடும்ப வாரிசின் மீது ஆதாரங்களுடன் பாலியல் குற்றம் சாட்டப்பட்டது. பாகுபலி புகழ் ராணாவின் இளைய சகோதரர் அபிராம் டகுபதி, தங்களது ஸ்டுடியோவுக்கு வாய்ப்புக் கேட்டு சென்ற தன்னிடம் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி தவறாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக ஸ்ரீரெட்டி புகைப்பட ஆதாரங்களுடன் புகார் கூறியிருக்கிறார். அபிராம் மட்டுமல்ல, அவரைப் போல பல பிரபலங்கள் டோலிவுட்டில் தவறானவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் திரையில் ஹீரோவாக நடிக்கையில் பெண்களைப் பாதுகாக்கிறவர்களாகவும், பெண்மையைப் போற்றுபவர்களாகவும் தோன்றி நடிக்கிறார்கள். அவர்களுக்கு அதிலெல்லாம் கூச்ச நாச்சமே இல்லை. ஆனால், நிஜ வாழ்க்கையில் பார்த்தீர்களென்றால் இதே பெரிய ஹீரோக்களின் கண் முன்னால் ஹீரோயின்கள் தயாரிப்பாளார்களாலும், இயக்குனர்களாலும், வினியோகஸ்தர்களாலும் சீரழிந்து கொண்டிருப்பதைக் கண்டாலும் தங்களுக்கும் அந்த விஷயங்களுக்கும் தொடர்பே இல்லாதது போல நகர்ந்து விடுவார்கள், இதற்குப் பெயர் தான் ஹீரோயிஸமா? இவர்களைத் தான் ரசிகர்கள் தெய்வமாக வணங்குகிறார்களா? நினைக்கவே அசிங்கமாக இருக்கிறது. சொல்லப்போனால் பல ஹீரோக்கள், தங்களுக்கு வேலையாக வேண்டும் என்பதற்காக தங்களுடன் நடிக்கும் நடிகைகளை அரசியல்வாதிகளிடம் இணக்கமாகப் போகச் சொல்லும் அளவுக்கு புரோக்கர்களாகக் கூட நடந்து கொள்கிறார்கள். நடிகைகள் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று தங்களது தொழிலில் ஸ்திரத்தன்மை அடையும் வரை இப்படித்தான் அசிங்கமாக அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை இனியும் சகித்துக் கொள்ள முடியாது. அதற்கொரு முடிவு வேண்டும்.