கலர்ஸ் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்றொரு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் ஆர்யா, இந்த நிகழ்ச்சியின் மூலமாகத் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதற்கு வந்து குவிந்த விண்ணப்பங்களில் இருந்து 16 பெண்களை ஆர்யா கலர்ஸ் தொலைக்காட்சி மூலமாகத் தேர்வு செய்திருந்தார். இந்த 16 பெண்களும் ஆர்யாவுடன் ஜெய்ப்பூர் சென்று அங்கு தங்கி இருந்து ஒருவருக்கொருவர் பழகிப் பார்த்து எந்தப் பெண் ஆர்யாவுக்குப் பொருத்தமானவர் என்பதை ஆர்யாவே நிகழ்ச்சியின் முடிவில் கண்டடைவது தான் இந்நிகழ்ச்சிக்கான கான்செப்ட். ஒருவழியாக கலந்து கொண்ட பெண்களில் பலரும் வடிகட்டப்பட்டு தற்போது அபர்னதி, அகாதா, சுஸானா, ஸ்வேதா, சீதாலட்சுமி எனும் 5 பெண்களில் வந்து நிற்கிறது இந்த ஷோ. இந்த 5 பெண்களிலும் 4 பேர் வடிகட்டப்பட்டு இறுதியில் முழுதாக ஆர்யாவின் மனதைக் கவர்ந்த பெண் எவரோ அவரே அவருக்கு மனைவியாகப் போகிறவர் என ஆர்யாவும், சேனலும் அறிவிப்பார்கள். இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வரும் நடிகை சங்கீதா தான் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூட. அதோடு ஆர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தாண்டி இதை ஒரு ரியாலிட்டி ஷோ என்ற முறையில் பார்த்தீர்களானால் இது பார்வையாளர்களுக்கு முற்றிலும் பொழுது போக்கு அம்சங்களைத் தரக்க்கூடிய நிகழ்ச்சியாக இருந்தும் பார்வையாளர்கள் மட்டத்தில் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் அளவுக்கு இதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக் கூடிய அம்சம் என்னவோ குறைவு தான். ஆர்யாவுக்காகவும், கலந்து கொண்ட இளம்பெண்களுக்காகவும் கல்லூரிப் பெண்களும், பள்ளியிறுதி பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இதை ரசிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பெரியவர்களிடையே மணப்பெண்ணை ரியாலிட்டி ஷோ மூலம் தேர்வு செய்ய நினைக்கும் ஆர்யாவின் எதிர்பார்ப்பு கேலிக்கு இடமானதாக இருக்கிறது. இது இதன் பாதக அம்சங்களில் ஒன்று. அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்களில் சிலர் தங்களைப் புரமோட் செய்து கொள்ளும், மக்களிடையே தங்களது முகத்தைப் பாப்புலர் ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிய வந்ததால் பார்வையாளர்களிடையே இந்த நிகழ்ச்சியைக் காணும் ஆர்வம் படிப்படியாக குறையத் தொடங்கி விட்டது என்பது உண்மை.