நடிகர்கள் எல்லோருமே தங்கள் வாழ்நாள் முழுதும் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருக்க முடியாது தானே! தமிழில் எம்.ஜி,ஆர் மட்டுமே கடைசி வரை ஹீரோவாக மட்டுமே நடித்தவர் என்று நினைவு. அந்தக் கால சூப்பர் ஹீரோக்களில் சிவாஜி, ஜெமினி எல்லாம் கூட பிற்காலத்தில் 80 களின் நாயகர்களுடன் குணச்சித்திர கதபாத்திரங்களில் நடித்து முடித்தவர்கள் தான். கடைசி வரை நாங்கள் ஹீரோவாக மட்டும் தான் நடிப்போம். வயதான பின்னும் கூட ஹீரோவுக்கு அண்ணனாகவோ, அப்பாவாகவோ சித்தப்பாவாகவோ அல்லது குணச்சித்திர வேடங்களிலோ நாங்கள் நடிக்கவே மாட்டோம் என்று பல நடிகர்களால் சொல்ல முடிவதில்லை. இத்தனைக்கும் அவர்களுக்கும் ஒரு காலத்தில் குறிப்பிடத் தக்க அளவில் கணிசமான ரசிகப் பட்டாளங்கள் இருந்திருப்பார்கள். ஆனாலும் அந்தப் புகழ் மற்றும் பெருமைகளுக்கு ஆயுள் என்பது குறைவு.