சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

ஜிஎஸ்டி: டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்; குழப்பத்தில் திரையரங்க உரிமையாளர்கள்!

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் உண்டான குழப்பம் தமிழ்த் திரையுலகை வெகுவாகப் பாதித்துள்ளது...

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:19 pm

எழில்

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் உண்டான குழப்பம் தமிழ்த் திரையுலகை வெகுவாகப் பாதித்துள்ளது. இதனால் நாளைய டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி. இதுவரை நடைமுறையில் உள்ள மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்ளூர் வரிகள் ஆகிய பல்வேறு வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, சரக்கு-சேவை வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா டிக்கெட் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி விதிப்புக்குத் திரைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

கமல் உள்ளிட்ட திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று ரூ.100 மற்றும் அதற்கு குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்குக் கூடுதலான சினிமா டிக்கெட்டுக்கான வரி 28 சதவீதமாகத் தொடரும்.

ஜிஎஸ்டியால் ஜூலை 1 முதல் தமிழகத் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயரவுள்ளது. டிக்கெட் விலை + 28% ஜிஎஸ்டி. அதாவது இனி ரூ. 120 டிக்கெட் ரூ. 153.60 ஆக விற்கப்படும். திரையரங்குகள் இந்தக் கட்டணத்தை ரூ. 150 என்றும்கூட மாற்றிக்கொள்ளலாம்.

ரூ. 100-க்குக் குறைவாக உள்ள டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி 18% என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் ரூ.120 டிக்கெட்டுகள் தற்போது ரூ.100 ஆகக் குறைக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பதிலாக, ரூ. 120 டிக்கெட்டுகள் இனி ரூ. 153.60-க்கு விற்கப்பட்டால் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை மிகவும் குறையும் என்றும் அஞ்சப்படுகிறது. சில திரையங்குகளில் ரூ. 100-க்கும் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. அவை இனி ரூ. 120-க்கு விற்கப்படும்.

மேலும் தற்போது திரையரங்குகள் 30% நகராட்சி வரி செலுத்திவருகிறது. அவை ரத்தானால் மட்டுமே இந்த விலைக்கு டிக்கெட்டுகள் விற்கமுடியும் என்று திரையரங்கு அதிபர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நகராட்சி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்திலும் ரத்து செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட சங்கங்கள் ஒன்றிணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: பிராந்திய மொழிப் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும். பிறமொழிப் படங்களுக்கு குறைந்த அளவு வரிவிதிக்கவேண்டும். வெளிநாட்டுப் படங்களுக்கு அதிக வரி விதிக்கலாம். ஜிஎஸ்டி வரிவிதிப்பு லட்சக்கணக்கான திரைத்துறையினரைப் பாதிக்கும். எனவே இதுகுறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாளை முதல் என்ன விலைக்கு டிக்கெட்டை விற்பது என்று திரையரங்கு அதிபர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். தமிழக அரசிடமிருந்து சாதகமான பதில் எதுவும் வராததால் என்ன நிலை எடுப்பது என்கிற குழப்பத்தில் உள்ளார்கள். எனவே தமிழ்நாட்டில் நாளை முதல் திரையரங்குகளுமான முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திரையரங்கு அதிபர்களிடையே பல்வேறு விதமான கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இதன் முடிவாக, இன்று மாலை டிக்கெட் விலை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.