சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

கடைசிநேர சிக்கல்கள் தீர்ந்தன; அஅஅ, வனமகன் படங்கள் வெளியாகின!

அதிகாலை முதல் தீவிரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இரு படங்களின் பிரச்னைகளும் ஓய்ந்தன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:16 pm

எழில்

சிம்பு நடித்து இன்று வெளியாகியுள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள வனமகன் ஆகிய இரு படங்களின் கடைசி நேரச் சிக்கல்களும் தீர்க்கப்பட்டு தற்போது இரு படங்களும் வெளியாகியுள்ளன.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் தயாராகியுள்ளது. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்துள்ளார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

இப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். மனுவில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏற்கெனவே தயாரித்த படம் போதியளவில் லாபம் ஈட்டவில்லை. ஆகையால், நிதியுதவி செய்தால், அடுத்த படத்தில் பங்குதாரராக சேர்த்துக்கொள்வேன் என்று என்னிடம் உறுதியளித்தார். நடிகர் சிம்பு நெருக்கமானவர் என்பதால் எனக்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ரூ. 15 கோடி திரட்ட தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டேன். தவிர எனது சொந்தப்பணம் ரூ. 25 லட்சத்தைக் கொடுத்தேன். ஆனால், தற்போது இந்த படத்தில் இருந்து என்னை ஒதுக்கி விட்டார். எனவே, ரூ.25 லட்சத்தை தர உத்தரவிட வேண்டும். அதுவரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மைக்கேல் ராயப்பன் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், படத்துக்கு எந்தவித சிக்கலும் வரக்கூடாது என்பதால், ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்களை உத்தரவாதமாக தருகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த மனுவை முடித்து வைத்து படத் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் ரூ. 25 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Story image

ஆனால் இருதரப்பினர் இடையே பரஸ்பரம் உடன்பாடு ஏற்படாததால் சிம்பு நடித்துள்ள அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலையில் பல திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் மேலே குறிப்பிட்ட பிரச்னைகளால், படத்தின் கியூபுகளுக்கான கேடிஎம் தரப்படவில்லை. இதனால் அஅஅ படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் காலைக் காட்சிகளுக்கு டிக்கெட் வாங்கியவர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இதேபோன்ற பிரச்னையை ஜெயம் ரவி நடிப்பில் விஜய் இயக்கத்தில் உருவான வனமகன் படமும் சந்தித்தது. இதனால் இப்படத்துக்கும் கேடிஎம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அதிகாலை முதல் தீவிரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இரு படங்களின் பிரச்னைகளும் ஓய்ந்தன. இதனால் இரு படங்களின் கேடிஎம்-மும் வழங்கப்பட்டன. இதையடுத்து இரு படங்களின் 11.30, 12 மணிக் காட்சிகள் தொடங்கப்பட்டன. இதனால் சிக்கல் தீர்ந்த நிம்மதியில் உள்ளார்கள் ரசிகர்கள்.

All Sorted out. #AAA1DFromToday in few mins . God thank u sai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.