அவர் சொல்வது சரி தானே.... யோசித்துப் பாருங்கள், தமிழ் சினிமாவில் நினைவில் நிற்கும் அம்மா கதாபாத்திரங்கள் என்றால் உடனடியாக நம் நினைவுக்கு வருபவர்கள் கண்ணாம்பா, பண்டரிபாய், ஆச்சி மனோரமா மட்டுமே காரணம் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் கனமானவை மட்டுமல்ல நடித்தவர்களுக்கு மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்த திரைப்படங்களும் கூட. அவர்களது வரிசையில் தற்போது நடிகை சரண்யா பொன்வண்ணன் மட்டுமே அதிக அளவில் அம்மா வேடங்களில் சோபித்து வருகிறார், இந்த வரிசையில் மிஷ்கினின் ‘யுத்தம் செய்’ திரைப்படம் வாயிலாக ரெளத்திரம் பழகும் அம்மாவாக வாழ்ந்து அசத்திய லஷ்மி ராமகிருஷ்ணனையும் மறந்து விட முடியாது. சினிமா அம்மாக்களிடையே என்ன ஒரு கஷ்டம் என்றால் தொடர்ந்து நினைவில் நிற்கத் தக்க அம்மா கதாபாத்திரங்கள் அவர்களுக்கு மீண்டும், மீண்டும் வழங்கப் படுவதில்லை. அதற்கு அம்மா நடிகைகளின் சம்பள விவகாரம், சிலர் செய்யும் பந்தாக்கள், திரைக்கதை, தொழிற் போட்டி எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் சுதா போன்ற பிரபலமான அம்மா நடிகைகளுக்கு, தங்களுக்கு எந்த விதமான அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறது அல்லது இல்லை எனச் சொல்லும் உரிமையும் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் தங்களது நடிப்புத் திறனுக்கு தீனி போடாத, நியாயம் செய்யாத வேடங்களை மறுப்பது இயக்குனர்களால் புரிந்து கொள்ளத்தக்க விஷயம் தான்.