சாந்தி இப்போதிருக்கும் நிலையில் அவரது பெயருக்கு முன் ‘டிஸ்கோ’ என்ற வார்த்தை அனாவசியமானது. தமிழ் சினிமாவில் 80 களில் தவிர்க்கவே முடியாத டான்ஸர்களில் சாந்தியும் ஒருவர். தமிழ் சினிமா என்றில்லை, தென்னிந்திய சினிமா என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஜோதி லட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, வரிசையில் சாந்திக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமே! சில காலம் தமிழில், பாடல் காட்சிகளில் மட்டுமல்ல ஒரு சில திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் ஓரிரு காட்சிகளில் சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் கூட சாந்தி வந்து சென்றிருக்கிறார். அவற்றுள் ரசிகர்களுக்கு ஞாபகமிருக்கக் கூடிய திரைப்படங்கள் என்றால் ‘அக்னி நட்சத்திரம்’ மற்றும் ‘இதயத்தைத் திருடாதே’ படங்களைச் சொல்லலாம்.